
சூர்ப்பணகை
அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை மன்னன் ராவணனின் தங்கை சூர்ப்பணகை. பதினான்கு ஆண்டுகால வனவாசத்தின் போது காட்டில் இருந்த ராமனை சந்திக்கும் வாய்ப்பு இவளுக்கு கிடைத்தது. அவரது அழகில் மயங்கி மனதை பறி கொடுத்தாள். ராமனை அடைய வேண்டும் என்பதற்காக சீதையைக் கொல்லவும் துணிந்தாள். அதை முறியடித்த லட்சுமணன் இவளின் மூக்கு, காதுகளை வெட்டினான். இலங்கைக்குச் சென்ற சூர்ப்பணகை, சகோதரனான ராவணனிடம் நடந்ததை எல்லாம் மறைத்து ராம, லட்சுமணரால் தனக்கு அவமானம் நேர்ந்ததாக திரித்துச் சொன்னாள். ராமனைப் பழி வாங்கும்நோக்கத்துடன் சீதையைக் கடத்திய ராவணன் அவளை அசோகவனத்தில் சிறை வைத்தான். இப்படி சூர்ப்பணகை என்ற பாத்திரம் இல்லாவிட்டால் ராமாயண காவியமே இல்லை எனலாம். இவளைப் பற்றி சொல்லும் போது, 'ராவணனைக் கொல்ல வந்த நோய்' என வர்ணிக்கிறார் கம்பர்.
அவள் ராவணனிடம், “அண்ணா... உனக்கு சரியான ஜோடி ஒன்றை கண்டு இலங்கைக்கு துாக்கி வர நினைத்தேன். ஆனால் அற்ப மானிடர்கள் இருவர் என் மூக்கை அறுத்து அவமானப்படுத்தி துரத்தி விட்டனர்” என அண்ணனின் மனதில் அசுரக் குணத்தை உசுப்பி விட்டாள்.
இதற்கான காரணம் என்ன தெரியுமா... அவளுக்கு ராவணன் செய்த தீமையும், முற்பிறவியில் சூர்ப்பணகை வாழ்வில் நடந்த சம்பவமும் இந்த சூழ்நிலையை உருவாக்கியது. காலகேயர்கள் என்ற பலம் வாய்ந்த அரக்கர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவனான
வித்யுக்ஜிகவன் என்பவனுக்குத் சூர்ப்பணகையை திருமணம் செய்து வைத்தான் ராவணன். அவளும் கணவருடன் இன்பமாக வாழ்ந்தாள். இந்த சமயத்தில் உலகம் முழுவதையும் ஆள வேண்டும் என்ற ஆதிக்க வெறி ராவணனுக்கு ஏற்பட்டது. தன் தவ சக்தியை மூவுலகுக்கும் வெளிக்காட்ட எண்ணி எட்டுத்திக்கும் நடுங்கதிக்கு விஜயம் புறப்பட்டான். தேவர்களை எல்லாம் வெற்றி கண்டான். அதன் பின் பலம் மிக்க அரக்கர்களான காலகேயர்களை எதிர்க்கத் துணிந்தான். ராவணனனைப் போலவே காலகேயர்களும் பிரம்மாவிடம் வரம் பெற்றதால் அவர்களை வெற்றி கொள்வது கடினம் என ராவணனுக்கு தெரிந்திருந்தது. ஆனாலும் கர்வத்துடன் எதிர்த்துப் போராடினான்.
சூர்ப்பணகையின் கணவரான வித்யுத்ஜிகவன் தலைமையில் காலகேயர்கள் போருக்கு வந்தனர். தங்கையின் கணவர் என்ற முறையில் ராவணன் விட்டுக் கொடுத்திருந்தால் அவன் பிழைத்திருப்பான்.
ஆனால் வெற்றியே முக்கியம் எனக் கருதி மைத்துனனை வாளால் வெட்டி, தான் வெற்றி பெற்று விட்டதாக ஆரவாரம் செய்தான். கணவரின் மரணச் செய்தி அறிந்து ஓடி வந்த சூர்ப்பணகை பிணத்தின் மீது விழுந்து கதறினாள். ராவணனோ வெற்றிக் களிப்பில் மிதந்தான்.
ஆவேசப்பட்ட அவள் கணவரின் மீது ஆணையிட்டபடி , “உம்மை கொன்ற ராவணனை சூழ்ச்சியால் நானும் கொல்வேன். இது சத்தியம்” என்றாள். இந்த சம்பவம் முதல் ராவணனின் வீழ்ச்சி ஆரம்பித்தது.
முற்பிறவியில் சூர்ப்பணகையின் வாழ்வில் நடந்த சம்பவத்தையும் பார்ப்போமா...
ஆனந்தகுரு என்னும் ஆசிரியரின் மகளாக 'சுமுகி' என்னும் பெயருடன் சூர்ப்பணகை இருந்தாள். சத்தியவிரதன் என்ற மன்னரின் மகனான சங்கசூடணன் என்பவன், ஆனந்தகுருவின் சீடராக பாடம் படித்தான். மன்னரின் மகன் என்பதால் அரண்மனையில் இருந்து குருவின் வீட்டிற்கு வந்து போகும் சலுகை அவனுக்கு இருந்தது. இந்நிலையில் சங்கசூடணனின் அழகில் மனதை பறி கொடுத்த சுமுகி அவனை ஒருதலையாக காதலித்தாள்.
ஒருநாள் மாலையில் பாடத்தில் சந்தேகம் ஏற்படவே, குருநாதரைத் தேடி வந்தான் சங்கசூடணன். அந்த நேரத்தில் சுமுகி தனியாக இருந்தாள். இதுதான் சரியான சமயம் எனக் கருதிய சுமுகி தன் எண்ணத்தை சொன்னாள். காம சிந்தனையுடன் அவனைக் கட்டியணைத்தாள். ஆனால் சங்கசூடணன் கண்ணியமுடன், “குருநாதரின் மகளான நீ எனக்கு தங்கை முறை. உன் காதலை ஏற்க முடியாது'' என புறப்பட்டான்.
தனக்கு நேர்ந்த ஏமாற்றம், அவமானத்தை சுமுகியால் தாங்க முடியவில்லை. தந்தை இல்லாத நேரத்தில் வந்த சங்கசூடணன் தகாத முறையில் நடந்ததாக பழி சுமத்தினாள். மகளின் பேச்சை நம்பி மன்னரிடம் முறையிட்டார் குருநாதர். மகன் என்றும் பாராமல் தண்டனைக்கு உத்தரவிட்டான் மன்னன். பாறை மீது கிடத்தி சங்கசூடணனின் கை, கால்களை வெட்டச் சொன்னான்.
'தர்மம் உலகை விட்டு மறைந்து விட்டதா' என அவன் முறையிட்டான். என்ன அதிசயம்! உடனே அவனைக் கிடத்திய பாறை இரண்டாகப் பிளந்தது. பூமியை தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேஷன் உள்ளிருந்து வெளிப்பட்டு, “சங்கசூடணா! கவலைப்படாதே! இப்பிறப்பில் உன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய சுமுகியை அடுத்த பிறவியில் நானே என் கையால் பழி வாங்குவேன். இது சத்தியம்'' என வாக்கு கொடுத்தான்.
சங்கசூடணன் மறுபிறவியில் ராவணனின் தம்பி விபீஷணனாகவும் பிறந்தான். அவனுக்கு தங்கையாகப் பிறந்த சுமுகியே 'சூர்ப்பணகை' எனப் பெயர் பெற்றாள். லட்சுமணனாகப் பிறந்த ஆதிசேஷன் அரக்கியான சூர்ப்பணகையின் மூக்கை அறுத்தான். வால்மீகி ராமாயணத்தில் இந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. முருகன் அடியாரான அருணகிரிநாதர் 'தாக்கமருக்கு' எனத் தொடங்கும் திருத்தணி திருப்புகழில் சூர்ப்பணகையை 'விபீஷணர் சோதரி' எனக் குறிப்பிடுகிறார். அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்ற உண்மை இதன் மூலம் நிரூபணம் ஆனது.
-பக்தி தொடரும்
உமா பாலசுப்ரமணியன்
umakbs@gmail.com

