ADDED : அக் 01, 2026 08:42 AM

வயதானவர்கள் மீது காஞ்சி மஹாபெரியவருக்கு அன்பும் அக்கறையும் அதிகம். அதிலும் ஓய்வு பெற்றவர்கள் 'பிஸி'யாக இருக்க வேண்டும் என சுவாமிகள் வலியுறுத்துவார்.
ஓய்வு காலத்தில் அவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என மஹாபெரியவர் சொல்வதை கேளுங்கள்.
''ரிடையர்டு ஆன எங்களால் என்ன உதவி செய்ய முடியும்? என கேட்காதீர்கள். உங்களால் தான் சமுதாயத்திற்கு அதிகம் செய்ய முடியும்.
உங்கள் மீது நம்பிக்கை, எதிர்பார்ப்பு எனக்கு எப்போதும் உண்டு. கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சம் போன்றவர்கள் நீங்கள். கடவுளை நம்புங்கள். பலவீனம் ஓடி விடும். இளைஞர்களை விட உற்சாகமாக உங்களால் செயல்பட முடியும்.
வேலை நேரம் போக மற்ற நேரத்தில் தான் இளைஞர்களால் சேவை செய்ய முடியும். ரிடையர்டு ஆன நீங்களோ நினைத்த நேரத்தில் சேவை செய்யலாம். குடும்பத்தின் மீதுள்ள பற்றை கொஞ்சம் குறையுங்கள். ரிடையர்டு ஆகும் போதே குழந்தைகளின் படிப்பு, திருமணம் என உங்களின் கடமை முடிந்திருக்கும்.
அதன் பின் பேரக்குழந்தைகளின் படிப்பு, கல்யாணம் என இழுத்துப் போட்டுக் கொண்டால் அதற்கு முடிவே கிடையாது. சாஸ்திரம் சொல்லும் தர்மங்களை நீங்கள் கடைபிடிக்க வேண்டாமா?
குடும்ப பொறுப்பை சந்ததியிடம் ஒப்படைத்து விட்டு, ஆன்மிகத்தை தேடும் காலம் இது. ரிடையர்டு ஆன பின் சொந்த பிசினஸ் பண்ணலாமா, தொழிற்சாலை வைக்கலாமா அல்லது வேலையிலேயே நீடிக்கலாமா என சிந்திக்க வேண்டாம். ஆன்மிக வழியைத் தேடுங்கள். பிறவியை பயனுள்ளதாக்குங்கள்'' என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* ஒருமுறையாவது காசி, ராமேஸ்வரம் செல்.
* புண்ணிய தீர்த்தத்தை சுத்தமாக வைத்திரு.
* சனிக்கிழமையன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்ற ஆயுள் கூடும்.
* முடிந்தவரை கை, கால்களை கழுவிய பின் கோயிலுக்குள் நுழையுங்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவனே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com
