ADDED : அக் 01, 2026 08:46 AM

அன்பெனும் சூழல்
கவுதமிற்கு வயது 30. அழகாக இருந்தான். இளம் தணிக்கையாளன். ஜி.எஸ்.டி., சட்ட நுணுக்கங்களில் கில்லாடி. இவன் ஏன் என்னைப் பார்க்க வந்திருக்கிறான்?
“ஒரு வட இந்திய கம்பெனி ஆலோசனைக்காக வந்தாங்க. நானும் எனக்கு தெரிஞ்சதெல்லாம் சொல்லிக் கொடுத்தேன். அத என் லெட்டர் ஹெட்டுல அடிச்சித் தரச் சொன்னாங்க. நான் கேட்ட பீஸ் கொடுத்துட்டாங்க.
“அதுக்கப்பறம் அவங்க ஜி.எஸ்.டி.,ல பெரிய தப்பு பண்ணி மாட்டிக்கிட்டாங்க. விசாரணையில நான்தான் ஐடியா கொடுத்தேன்னு சொல்லிட்டாங்க. என் லெட்டர் ஹெட்ட வச்சி போர்ஜரி பண்ணிட்டாங்க. நான் எந்த தப்பும் பண்ணல. என் பக்க வாதங்கள வச்சிருக்கேன். ஆயிரம் பக்கத்துக்கு ஆதாரங்களை கொடுத்திருக்கேன். விசாரணை சி.பி.ஐ.,க்குப் போயிரும்னு பேசிக்கறாங்க சார். அப்படி நடந்தா என் தொழில் போயிரும். என் பேரு போயிரும்”
அரை மணி நேரம் புலம்பி விட்டுப் போய்விட்டான்.
இரண்டு நாள் கழித்து கவுதம் அழைத்தான். வாய் விட்டு அழுதான்.
“நான் அழிஞ்சி போகணும்னு உங்க பச்சைப்புடவைக்காரி நெனச்சிட்டா”
“என்ன ஆச்சு?”
“கேஸ் சி.பி.ஐ.,க்குப் போயிருச்சி. விசாரணைக்காக டில்லி வரச் சொல்லி சம்மன் அனுப்பிச்சிருக்காங்க. பச்சைப்புடவைக்காரி கைவிட்டுட்டாளே...''
“பச்சைப்புடவைக்காரி யாரையும் கைவிட்டதா சரித்திரமே கிடையாது”
“வாயால வடை சுடறீங்க”- இணைப்பு துண்டிக்கப்பட்டது.
அன்று மதியம் சாப்பிடவில்லை. முன்னால் இருந்த பச்சைப்புடவைக்காரியின் படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.
திடீரென என் போன் அலறியது. பதறிப் போய் எடுத்தேன். நான் வழக்கமாக மருந்துகள் வாங்கும் கடையிலிருந்து ஒரு பெண் பேசினாள்.
“என்ன சார், மருந்து வாங்க வரலியே. மாத்திரை எல்லாம் தீர்ந்திருக்குமே”
கோபத்தில் கத்தினேன்.
“வரலேன்னவுடன நான் செத்துட்டேன்னு நெனச்சிட்டீங்களா? அத உறுதிப்படுத்தத்தான் இந்த போனா”
நான் கத்தியதால் அந்தப் பெண் இணைப்பைத் துண்டித்து விட்டாள். அலுவலகத்தில் யாரும் இல்லை.
திடீரென புயலைப் போல் ஒரு பெண் என் அறைக்குள் நுழைந்தாள்.
“கவுதம் எக்குத்தப்பாக மாட்டிக் கொண்டிருக்கிறான். அவன் படும் துன்பத்திற்கெல்லாம் நீதான் காரணம்”
வந்தவளை அடையாளம் கண்டு கொண்டு காலில் விழுந்தேன்.
“என்ன சொல்கிறீர்கள்? கவுதமை இப்போதுதான் பார்க்கிறேன். நான் எப்படி அவன் பிரச்னைக்கு...''
“கவுதமிற்காக என்னிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தாய்.உன் மனம் அன்பால் உருகியது. அந்தச் சமயத்தில் உன் மனம் என்னிடம் ஒன்றியிருந்தது. இன்னும் பத்து விநாடி அதே நிலை நீடித்திருந்தால் கவுதமின் பிரச்னை தீர்ந்திருக்கும். அதற்குள் உனக்கு வேறு ஒரு அழைப்பு வந்து விட்டது.
“கடைக்காரப் பெண்ணிடம் நீ ஏன் சீறினாய்? அவளுக்கு உன் நிலை தெரியுமா என்ன? அவள் தன் கடமையைச் செய்தாள். உன் இதயம் என்னோடு இணைந்திருக்கும் வேளையில் அபஸ்வரமாக உன் கோபம் வந்து விட்டது. நம் தொடர்புச் சங்கிலி அறுந்தது. அதனால் கவுதம்...''
வாக்கியத்தை முடிக்க விடாமல் கதறியபடி அவள் காலில் விழுந்தேன்.
“தவறு செய்த எனக்கு தண்டனை கொடுங்கள். கவுதமை தண்டிக்காதீர்கள்”
அவள் மனம் இரங்கினாள்.
“என்னை மன்னியுங்கள் தாயே!”
“கடைக்காரப் பெண்ணைக் காயப்படுத்தி விட்டு காளீஸ்வரியிடம் மன்னிப்பு கேட்கிறாயாக்கும்?”
“நான் என்னதான் செய்ய வேண்டும்”
“அந்தக் கடைக்காரப் பெண்ணிடம் உடனே மன்னிப்பு கேள்”
“ஒரு வேளை அவள் என் அழைப்பை ஏற்காவிட்டால்...''
“கவுதமின் கதை முடிந்தது. நாம் வேறு வேலை பார்க்கலாம்”
கண்களைத் துடைத்தபடி மருந்துக் கடைக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
“சொல்லுங்க, சார்.”
“என்ன மன்னிச்சிரு, தாயி. நீ பேசும்போது ஏதோ டென்ஷன்ல இருந்தேன். அதான் கத்திட்டேன். இன்னிக்குச் சாயங்காலம் மருந்து வாங்கிக்கறேன். ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி”
“எதுக்கு சார் பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க? நீங்க என் அப்பா மாதிரி. உங்களுக்கு மகளை திட்ட உரிமை இல்லையா, என்ன?”
எனக்கும் இன்னும் அதிகமாக அழுகை வந்தது. நான் பேசி முடிக்கும்வரை பச்சைப்புடவைக்காரி அதே இடத்தில் நின்றிருந்தாள்.
“அடுத்த திங்கள் கவுதம் டில்லியில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்திற்குச் செல்வான். அங்கே என்ன நடக்கிறது எனக் காட்டுகிறேன்”
ஒரு பெரிய அறைக்குள் கவுதம் நடுங்கியபடி நுழைந்தான். அதிகாரிகள் நான்கு பேர் இருந்தனர். நிற்க வைத்தே கேள்வி கேட்டனர். கவுதம் சொன்ன பதில்கள் தெளிவாக, உறுதியாக இருந்தன.
மூத்த அதிகாரி எழுந்து நின்று, “வாழ்த்துக்கள், கவுதம். ஜி.எஸ்.டி.,ல நடக்கற பிராடுகளைக் கண்டுபிடிக்க நாங்க சிறப்புப் படைய நியமிச்சிருக்கோம். அதுல நீங்களும் இருக்கப் போறீங்க. நாங்க கூப்பிடறப்போ டில்லி வரணும். விமான பயணம், நட்சத்திர ஓட்டல்ல தங்கறது எல்லாம் எங்க செலவு. அது போக பீஸ்க்காக நிறைய பணமும் கொடுப்போம். உங்க பாதுகாப்புக்காக இந்த ஏற்பாடு ரகசியமா இருக்கட்டும்”
“என்னை எப்படி இந்த பதவிக்கு...''
“உங்கள ஒரு கேஸ்ல மாட்டி விடப் பாத்தாங்கள்ல, அதுல நீங்க வச்ச வாதங்களப் பாத்தோம். உங்ககிட்ட அப்பழுக்கற்ற நேர்மையும், அதீத புத்திசாலித்தனமும் இருக்கு. இது சாதாரண பதவியில்ல, கவுதம். நீங்க எங்கயோ போகப் போறீங்க”
வேரறுந்த மரமாக பச்சைப்புடவைக்காரியின் காலில் விழுந்தேன்.
“கவுதமிற்கு பெரிய வாழ்க்கை காத்திருக்கிறது. அதற்கு தயார் செய்யத்தான் இந்தச் சின்ன சோதனை. அவனை நான் பார்த்துக்கிறேன். உனக்கு என்ன வேண்டும்?”
“உங்களை வழிபடும் வேளையிலும் நான் யார் மீதோ எரிந்து விழுந்தேன் என்றால்...''
“நான்தான் உன்னை அப்படிச் செய்ய வைத்தேன்”
“ஏன், தாயே?”
“கவுதமின் பிரச்னை விலக்க, இந்த சூழலில் இன்னும் நிறைய அன்பு தேவைப்பட்டது. உன் தவறை உணர்ந்து பொருளாதார நிலையில் உன்னை விடப் பல மடங்கு கீழே இருக்கும் பெண்ணிடம் நீ மன்னிப்பு கேட்டாய். உன் அன்பு தாங்காமல் அவள் அழுதாள். சூழலில் இருக்கும் அன்பு கூடிவிட்டது. அந்த அன்பின் பலனை கவுதமிற்குக் கொடுத்துவிட்டேன்... சரி, என்ன வேண்டும், சொல்”
“என்னை விட தாழ்ந்தவர் இந்த உலகில் யாருமே இல்லை என்ற பக்குவம் வர வேண்டும், தாயே!”
பச்சைப்புடவைக்காரி சிரித்தபடி மறைந்தாள்.
-தாயின் அன்பு தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com
