தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பெண்பிள்ளை ரகசியம் - 34

பெண்பிள்ளை ரகசியம் - 34

பெண்பிள்ளை ரகசியம் - 34


ADDED : அக் 01, 2026 09:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 09:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம்பாடுவான் போலே

“என்ன வெயில்! கொஞ்ச நாளா சாயந்திரம் கூட அனல் காத்து வீசுது” என்ற படியே பூங்காவுக்குள் நுழைந்தார் அமிர்தம்.

“களைப்பா, இளைப்பா சரியா சொல்லுங்க”

“களைப்பு தான். அது என்ன இளைப்பு? எனக்கு அர்த்தம் தெரியலையே... ஓ பெண் பிள்ளை ரகசியத்துக்குள்ள வந்துட்டீங்க”

“ஆமா, இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே என்பதுதான் பெண் பிள்ளை ராமானுஜரிடம் சொன்ன 33வது வாக்கியம். இதில் சொல்லப்படும் இளைப்பு விடாய் என்பது பிறவி என்னும் துன்பம். அதை நம்பாடுவான் தீர்த்தார் என வருகிறது. அது சரி யார் என பார்ப்போம்.

பாண்டிய நாட்டில் திருக்குறுங்குடி என்ற ஊரில் ஒரு பெருமாள் கோயில் இருந்தது. அந்த பெருமாளுக்கு 'அழகு நம்பி' என்று பெயர். இந்த நேரத்தில் திருக்குறுங்குடி மலை அடிவாரத்தில் வாழ்ந்தான் பாணர் குலத்தைச் சேர்ந்த நம்பாடுவான்.

தாழ்ந்த குலம் என்பதால் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. அதனால் தினமும் அதிகாலையில் நீராடி பாண் என்னும் வாத்தியத்தை இசைத்தபடி கோயில் வாசலில் நின்று பாடுவார். ஒரு கார்த்திகை மாத ஏகாதசி அன்று இரவு முழுதும் அழகிய நம்பியை தியானித்தார். மறுநாள் துவாதசிக்கு விடியற்காலை விரதத்தை முடிக்க கோயிலுக்கு புறப்பட்டார். சுற்றிலும் இருட்டு, கார்த்திகை மாத குளிர் காற்று வீசியது. எல்லோரும் துாங்கிக் கொண்டிருந்தனர். அவர் சென்றது காட்டு வழி. அங்கே ஒரு பிரம்ம ராட்சஷன் இருந்தான். 'எனக்கு கோரமான பசி உன்னை சாப்பிடப் போகிறேன்' என பிடித்துக் கொண்டது.

'நான் விரதத்தில் இருக்கிறேன், என்னை நீ இப்போது சாப்பிடாதே, வேண்டுமானால் விரதத்தை முடித்துக் கொண்டு நான் திரும்ப வரும்போது சாப்பிட்டுக் கொள்'' என்றார் நம்பாடுவான். இதைக் கேட்ட ராட்சஷனுக்கு கோபம் வந்தாலும் பயங்கரமாக சிரித்தது. என்னை ஏமாற்றலாம் என இப்படி உளறுகிறாய் என்றது. 'நான் அழகியநம்பியின் பரம பக்தன். ஒருபோதும் பொய் சொல்ல மாட்டேன் இது சத்தியம்'' என்றார்.

''உன் சத்தியத்தை எப்படி நம்புவது'' எனக் கேட்டது. அதற்கு நம்பாடுவான் 17 விதமான சத்தியங்களை சொல்லி என்னை விரதத்தை முடிக்க விடு என போராடினார்.அப்போதும் பிரம்ம ராட்சஷன் விடுவதாக இல்லை. உடனே நம்பாடுவான் 18வது சத்தியமாக ''நான் வராமல் போனால் 'பெருமாளையும், மற்ற தேவதைகளையும் சமமாக நினைத்தவருக்கு என்ன பாவம் கிடைக்குமோ அது எனக்கு கிடைக்கட்டும்' என சத்தியம் செய்யவே பிரம்ம ராட்சஷன் அவரை கோயிலுக்கு செல்ல அனுமதித்தது.

அழகிய நம்பியை வழிபடச் சென்றார். கோயிலுக்கு முன்பாக கைசிகப் பண்ணில் பாடி விரதத்தை முடித்தார்.

கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமே என ராட்சஷனை தேடி வேகமாக நடக்க ஆரம்பித்தார். வழியில் பார்த்த கிழவர், ''எங்கே வேகமாக செல்கிறாய்'' என கேட்க ''பக்கத்தில் இருக்கும் காட்டுக்குள் செல்கிறேன்'' என்றார். கிழவரோ, ''இந்த வழியில் ராட்சஷன் இருக்கிறான், வேறு வழியாக போ'' என்றார்.நம்பாடுவானோ கிழவரிடம் நடந்ததை விவரித்தார். ஒரு நல்லவனிடம் சத்தியம் செய்தால் நிறைவேற்றலாம்; ராட்சஷனிடம் செய்த சத்தியத்தை காப்பாற்றுவது தேவையற்றது'' என அறிவுறுத்தினார். ''உயிரே போனாலும் செய்த சத்தியம் மாறாது'' என்றார் நம்பாடுவான். கிழவர் வடிவில் இருந்த அழகிய நம்பி அவரது உறுதியைக் கண்டு 'சென்று வா' எனச் சொல்லி மறைந்தார்.

ராட்சஷனிடம் சென்ற நம்பாடுவான், 'இப்போது என்னை சாப்பிட்டுக் கொள்' எனச் சொல்ல பிரம்ம ராட்சஷன் தன் முற்பிறப்பு பற்றி சொல்லத் தொடங்கியது. முற்பிறவியில் சோம சர்மா எனும் அந்தணராக இருந்தேன், தவறாக யாகம் புரிந்ததால் இந்த நிலைக்கு ஆளானேன். நீ திரும்பி வந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். உன்னை கொல்ல மாட்டேன். ஆனால் நீ கோயிலின் முன் பாடிய பாடலின் பலனை மட்டும் எனக்கு கொடு என்றது. 'அது என்னால் முடியாது; சத்தியத்தின்படி நீ என்னை கொன்று தின்னலாம் என்றார் நம்பாடுவான்.

'எனக்கு முழு பாடலின் பலனை கொடுக்க வேண்டாம்; அதில் கொஞ்சமாவது கொடு' என கெஞ்சியது. அதையும் அவர் ஏற்கவில்லை. பிரம்ம ராட்சஷன், 'இன்று கடைசியாக பாடிய பாட்டின் பலனை மட்டுமாவது தர வேண்டும்' என காலில் விழுந்தது. நம்பாடுவானின் மனம் கரைந்தது.

'சரி... நான் கடைசிப் பாட்டின் பலனை மட்டும் கொடுக்கிறேன்' என்றதும் அவனது பாவம் நீங்கி மோட்சம் பெற்றான். அவனது பசிப்பிணி மட்டுமல்ல பிறவிப் பிணியும் தீர்ந்தது. அப்படி நம்பாடுவான் போல பாடி ஒருவனை ராட்சஷ பிறவியிலிருந்து விடுவிக்கவில்லையே சுவாமி. அதனால் திருக்கோளூரை விட்டு போகிறேன் என ராமானுஜரிடம் சொன்னாள் பெண் பிள்ளை” என முடித்தார் கிருஷ்ணவேணி.

“பக்தி பாட்டுக்கு தான் என்ன சக்தி. இசைக்கு வசப்படுபவர் கடவுள். நம்பாடுவானை பற்றி கேட்டதும் பாணபத்திரரின் நினைவு வருகிறது எனக்கு”

“ஓ! திருவிளையாடல் படத்தில் வருவாரே அந்த பாணபத்திரரா?” என பூரிப்புடன் கேட்டார் கிருஷ்ணவேணி.

“பேஷ் பேஷ்! அந்த திரைப்படத்தை ஞாபகம் வச்சிருக்கீங்களே. பாலையா ஏமநாதனா ஏகத்துக்கும் வந்து மிரட்டுவாரே, அதே பாணபத்திரர் தான். ஏமநாதன் என்ற இசைப்புலவர் மதுரையில் இசைத்திறனை வெளிப்படுத்தி வரகுண பாண்டியனிடம் பரிசு பெற்றார். பின் தன்னோடு இசையில் போட்டி போட ஒருவரும் இல்லை என ஆணவத்துடன் பாண்டிய நாட்டு மக்களை கேலி பேசினார்.

அனைவரும் இதைக் கேட்டு வருந்தினர். அரசவை புலவரான பாணபத்திரரை வரச் சொல்லி ஏமநாதனோடு போட்டியிட்டு பாடச் சொன்னார் மன்னர். போட்டிக்கான தேதியும் குறிக்கப்பட்டது. தினமும் கோயிலில் பாடும் வழக்கம் கொண்ட பாணபத்திரர் போட்டியில் வெல்வது பற்றி கடவுளிடமே முறையிட்டார். அதன்படி போட்டிக்கு முதல் நாள் மாலையில் சொக்கநாதரே விறகுவெட்டி வடிவில் வந்து ஏமநாதன் தங்கியிருந்த வீட்டு திண்ணையில் இளைப்பாறினார். பின்னர் சாதாரிப் பண்ணில் பாடல் பாடினார். 'பாட்டும் நானே' என திருவிளையாடல் படத்தில் அந்தப் பாடல் தொடங்கும். அதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட ஏமநாதன் ஓடி வந்து விசாரித்தார். தன் குருநாதர் பாணபத்திரர் என்றும், அவர் தனக்கு பாட வராததால் வகுப்பில் இருந்து தன்னை வெளியேற்றியதாகவும் சொன்னார் அந்த விறகு வெட்டி. இதைக் கேட்டதும் தலையில் இடி விழுந்தது போல இருந்தது ஏமநாதனுக்கு.

பாணபத்திரரின் இசைப் புலமையைக் கண்டு வியந்த ஏமநாதன் இரவோடு இரவாக சீடர்களுடன் பாண்டிய நாட்டை விட்டு வெளியேறினார். மறுநாள் ஏமநாதன் அரசவைக்கு வராததால் அக்கம் பக்கத்தினர் மூலம் விறகுவெட்டி பற்றி தெரிந்து கொண்டு பாணபத்திரரை விசாரித்தார் மன்னர். தனக்கு அப்படி எந்த சீடரும் இல்லை... நான் போட்டி பற்றி சொக்கநாதரிடம் முறையிட்டேன் என்றார் பாணபத்திரர். அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் விறகு வெட்டியாக வந்தது மதுரையில் அருள்புரியும் சொக்கநாதர் தான் என பூரிப்படைந்தார்” எனச் சொல்லி முடித்தார் அமிர்தம்.

“பக்தி பாடல்களை இசையோடு பாடும் போது மனம் வசமாகும். என் சின்ன வயசுல ஒரு பத்து பாட்டாவது மனப்பாடமாக பாடுவேன். அப்ப பாடினதோடு சரி,வேற எதுவும் புதுசா கத்துக்கல. இப்போ வரைக்கும் அந்த பாட்டுங்க மட்டும் எனக்கு தெரியும். சரி நம்பாடுவான், பாணபத்திரரைப் போல நாம் இனிமே தீவிரமா பக்தி செஞ்சு இளைப்பு விடாயை தீர்த்துக்குவோம். என்ன சொல்றீங்க அமிர்தம்?” என குறுகுறு என பார்த்தார் கிருஷ்ணவேணி.

“நீங்க சொன்னா சரிதான். சரி அடுத்த ரகசியத்தை இப்ப ரகசியமா சொல்லுங்க கேட்போம்'' என்றார் அமிர்தம்.

“இடைக்கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே”

-தொடர்வாள் பெண்பிள்ளை

முனைவர் பவித்ரா நந்தகுமார்

82204 78043

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us