ADDED : மே 29, 2025 01:58 PM

காஞ்சிபுரம் குடலை இட்லி
ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 திவ்ய தேசங்களில் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலும் ஒன்று. இங்குள்ள அனந்தசரஸ் குளத்தில் புகழ் பெற்ற அத்திவரதர் பள்ளி கொண்டுள்ளார். 40 ஆண்டுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு இவர் காட்சி அளிக்கிறார்.
இத்தலத்தை பூதத்தாழ்வார் இரண்டு பாசுரங்களாலும், பேயாழ்வார் ஒரு பாசுரத்தாலும், திருமங்கை ஆழ்வார் நான்கு பாசுரங்களாலும் பாடியுள்ளனர். இக்கோயிலில் ஐராவதம் என்ற தேவலோக யானையே மலையாக நின்று பெருமாளை தாங்குகிறது. இதனால் இத்தலத்திற்கு 'அத்திகிரி' என்றும் பெயருண்டு.
வரதராஜப் பெருமாளுக்கும், பெருந்தேவி தாயாருக்கும் 'கோயில் இட்லி' என்ற பிரசாதம் நைவேத்யம் செய்யப் படுகிறது. இதற்காக தினமும் இரண்டு இட்லிகள் தயாரிக்கின்றனர். மூங்கில் குடலையில்(கூடை) தயாரிக்கப்படுவதால் 'குடலை இட்லி' என்றும் பெயருண்டு.
மனத்துாய்மை பெறுவதற்காக பிரம்மா காஞ்சிபுரத்தில் யாகம் நடத்த விரும்பினார். அதில் பங்கேற்க விரும்பிய மனைவி சரஸ்வதியை அவர் அனுமதிக்கவில்லை. மற்ற இரு மனைவிகளான சாவித்ரி, காயத்ரியை அழைத்து யாகத்தை நடத்தினார். இதனால் கோபமுற்ற சரஸ்வதி, பூலோகத்தில் வேகவதி என்னும் ஆறாக மாறி யாகத்தை தடுக்க முயற்சித்தாள்.
இதனால் மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தார் பிரம்மா. அவர் சரஸ்வதி நதி பாயும் வழியில் பள்ளி கொண்டு தண்ணீரின் ஓட்டத்தை தடுத்தார். பிரம்மாவின் வேண்டுதலை ஏற்று யாககுண்டத்தில் இருந்து புண்ணிய கோடி விமானத்துடன் மகாவிஷ்ணு தோன்றினார். அவரே இக்கோயிலில் வரதராஜப்பெருமாளாக இருக்கிறார். அத்துடன் அத்தி மரத்தால் ஆன பெருமாள் சிலையை பிரதிஷ்டை செய்தார் பிரம்மா.
சிருங்கிபேரர் என்னும் முனிவரின் மகன்களான ேஹமன், சுக்லன் என்பவர்கள் கவுதம முனிவரின் சீடர்கள். இவர்கள் பூஜைக்காக தீர்த்தம் கொண்டு வந்த போது, அதில் பல்லி இறந்து கிடந்தது. அதைக் கண்ட கவுதம முனிவர், இருவரையும் பல்லியாக மாறும்படி சாபமிட்டார். அவர்கள் பிராயச்சித்தம் கேட்ட போது காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளை வழிபடச் சொன்னார் கவுதமர். அதன்படியே இங்கு தங்கி வழிபட்டு பலன் பெற்றனர். அப்போது அவர்களிடம், 'இங்கு வரும் பக்தர்கள் உங்களை தரிசித்தாலும் தோஷம் தீரும்' என பெருமாள் வரமளித்தார். இக்கோயிலில் இவர்கள் தங்கம், வெள்ளியால் ஆன பல்லிகளாக உள்ளனர்.
கருவறையில் மூலவர் தேவராஜப் பெருமாள் அத்திகிரி மீது நின்ற கோலத்தில் மேற்கு நோக்கியபடி இருக்கிறார். உற்ஸவரின் பெயர் பேரருளாளன். தாயார் பெருந்தேவித்தாயார். குளத்தின் கிழக்கு திசையில் சக்கரத்தாழ்வார் பதினாறு கைகளுடன் சங்கு, சக்கரம் ஏந்தியபடி நிற்கிறார். இவரை வழிபட்ட பிறகே மூலவரை வழிபட வேண்டும். இக்கோயிலில் அனந்தசரஸ், பொற்றாமரை என இரண்டு குளங்கள் உள்ளன. தலவிருட்சம் அரச மரம்.
வைகாசியில் நடக்கும் கருட சேவையும், தேரும் சிறப்பானவை. காலை 7:30 - 12:30 வரையிலும், மாலை 3:30 - 8:30 மணி வரை கோயில் திறந்திருக்கும். காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் இக்கோயில் உள்ளது. சென்னையில் இருந்து 80 கி.மீ., செங்கல்பட்டில் இருந்து 35 கி.மீ., இங்கு இட்லி தயாரிப்பதற்காக மூங்கில் குடலை என்னும் கூடை பிரத்யேகமாக செய்யப்படுகிறது.
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 350 கி
உளுந்தம் பருப்பு - 250 கி
வெந்தயம் - 10 கி
மிளகுத் துாள் - 15 கி
சுக்குத் துாள் - 15 கி
சீரகத் துாள் - 15 கி
பெருங்காயம் - 5 கி
கறிவேப்பிலை - சிறிதளவு
ரீபைண்டு எண்ணெய் - 125 மில்லி
மேலே சொன்ன அளவில் ஒரு இட்லி தயாரிக்கலாம்.
செய்முறை: பச்சரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் மூன்றையும் இரண்டரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நைசாக அரைக்காமல் 'நறநற' பக்குவத்தில் மாவு அரைக்க வேண்டும். பின்னர் மற்ற பொருட்களை இத்துடன் கலந்து பன்னிரண்டு மணி நேரம் மாவை புளிக்க வைக்க வேண்டும்.
பின் அதை மூங்கில் குடலைக்குள் மந்தாரை இலை, வாழை இலையை வைத்து அதற்குள் ஊற்றி மூன்று மணி நேரம் வேக வைக்க வேண்டும். இந்த இரண்டு இலைகளால் இட்லிக்கு தனிச் சுவையும், மணமும் உண்டாகிறது. ஆற வைத்த பின் இந்த இட்லி சாப்பிட்டால் நாம் கிறுகிறுத்து போவோம்.
-தொடரும்
ஆர்.வி.பதி
94435 20904
