ADDED : அக் 17, 2025 08:27 AM

ராகவேந்திரர் - பரிமள பிரசாதம்
மகான் ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்த இடம் ஆந்திரா கர்னுால் மாவட்டம் மன்சாலி எனப்படும் மாஞ்சாலி கிராமம். இங்கு பிருந்தாவனத்தில் 1671ல் ராகவேந்திரர் ஜீவசமாதி அடைந்தார். மந்த்ராலயம் எனப்படும் இந்த பகுதி துங்கபத்ரா நதிக்கரையில் உள்ளது. மத்வாச்சாரியரின் துவைத சம்பிரதாய வழியில் வந்தவர் இவர். மகான் ராகவேந்திரர் காலத்தில் துவைதம் தழைத்தோங்கியது.
மந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திர சுவாமிகளின் மடத்தில் தரப்படும் பரிமள பிரசாதம் பிரபலமான ஒன்று. ராகவேந்திரர் எழுதிய 'ந்யாய ஸுதா பரிமள' என்ற புனித நுாலின் அடிப்படையில் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புனித நுாலானது மத்வாச்சாரியாரின் துவைத தத்துவத்தை விளக்க ஜெயதீர்த்தரால் எழுதப்பட்ட 'ந்யாய ஸுதா பரிமள' என்ற நுாலுக்கு ராகவேந்திரர் எழுதிய விளக்க உரையாகும்.
ராகவேந்திரர் தமிழ்நாட்டில் கடலுார் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் 1595ல் திம்மண்ண பட்டர், கோபிகாம்பா தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இயற்பெயர் வேங்கடநாதன். ராகவேந்திரர் கும்பகோணத்தில் இருந்த மத்வ மடத்தில் கல்வி கற்றார். மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த சுதீந்திர தீர்த்தர் துவைத சித்தாந்தத்தைக் கற்பித்தார். உரிய வயதில் சரஸ்வதி என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு லட்சுமிநாராயணன் என்ற குழந்தை பிறந்தது.
சுதீந்திர தீர்த்தர் தனக்குப் பின் மடத்தின் பொறுப்பை ராகவேந்திரர் ஏற்க வேண்டும் என விரும்பினார். இதை அறிந்த ராகவேந்திரர் இல்லற வாழ்வைத் துறந்து மடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க முடிவு செய்தார்.
ராகவேந்திரர் 1621ல் துறவறம் பூண்டு மடத்தின் பீடாதிபதியாக ராகவேந்திர தீர்த்தராக பொறுப்பேற்றார். மடாதிபதியான பின் கும்பகோணம் மடத்தில் தங்கி பணியாற்றி வந்தார். மூலராம பூஜையை தினமும் செய்து வந்தார். புனித யாத்திரைத் தொடங்கி ராமேஸ்வரம், ராமநாதபுரம், ஸ்ரீரங்கம், மதுரா, உடுப்பி, சுப்பிரமணியா, பண்டரிபுரம், கோலாப்பூர், பிஜாப்பூர் போன்ற தலங்களுக்குச் சென்று திரும்பினார்.
1671ல் ஒருநாள் தன் சீடர்களை அழைத்த ராகவேந்திரர் பிருந்தாவனப் பிரவேசம் செய்யப் போவதாக அறிவித்தார். அவருடைய அறிவுறுத்தலின்படி மாஞ்சலம்மாவின் கோயிலுக்கு அருகில் பிருந்தாவனம் அமைக்கப்பட்டது. அவரது சீடர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். தமக்குப் பின்னர் மத்வ மடத்தின் பணிகளைத் தொடர்ந்து கவனிக்க சீடரைத் தேர்வு செய்து அவருக்கு யோகீந்திர தீர்த்தர் என்ற தீட்சா நாமம் சூட்டினார்.
பிருந்தாவனத்தைச் சுற்றிலும் சீடர்கள், பக்தர்கள் சூழ்ந்திருக்க 1671ல் ஆவணி தேய்பிறை துவிதியை திதியுடன் கூடிய வியாழன் அன்று பிருந்தாவனப் பிரவேசம் செய்தார் மகான் ராகவேந்திர தீர்த்தர்.
ராகவேந்திரர் ஸ்தோத்திரம்
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய தர்ம ரதாயச்ச
பஜதம் கல்ப வ்ருக்ஷாய நமதம் காமதேஹ்நவே
பொருள்
சத்திய தர்மத்தின் காவலரான ராகவேந்திரரை வணங்குகிறேன். தெய்வீக விருட்சமான கல்பதரு போன்ற புனிதமானவரை வணங்குகிறேன். தெய்வீக பசு காமதேனு போல புனிதமானவரை வணங்குகிறேன். கற்பக மரம், காமதேனு போல வழிபடுவோரின் விருப்பங்களை ராகவேந்திரர் நிறைவேற்றுகிறார்.
ராகவேந்திரர் பிருந்தாவனப் பிரவேசம் செய்யும் முன் தாம் இன்னும் 700 ஆண்டுகள் ஜீவனோடு பிருந்தாவனத்தில் தங்கி வழிபடுவோருக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் அதனால் நாடெங்கும் 700 மிருத்திகா பிருந்தாவனங்கள் தோன்றும் என்றும் திருவாய் மலர்ந்தார்.
மிருத்திகா பிருந்தாவனம் என்பது மந்த்ராலய மூல பிருந்தாவனத்தில் இருந்து பீடாதிபதிகளிடம் இருந்து புனிதமான மண்ணைப் பெற்று வேறொரு இடத்தில் பிரதிஷ்டை செய்வதாகும். ராகவேந்திரர் கூறியபடி மிருத்திகா பிருந்தாவனங்கள் தோன்றியுள்ளன.
ராகவேந்திரர் பிருந்தாவனப் பிரவேசம் செய்த நாளன்று மந்த்ராலயம் உள்ளிட்ட எல்லா மடங்களிலும் ஆராதனை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பரிமள பிரசாதம் செய்ய
தேவையான பொருட்கள்
1. சிரோட்டி ரவை - 1 கப்
2. சர்க்கரை - 1 கப்
3. முந்திரி - சிறிதளவு
4. ஏலக்காய்த்துாள் - சிறிதளவு
5. குங்குமப்பூ - சிறிதளவு
6. ஆரஞ்சுகலர் பவுடர் - சிறிதளவு
7. பச்சைக்கற்பூரம் - சிறிதளவு
8. நெய் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
அகலமான கடாயில் நெய்யை ஊற்றி காய்ந்ததும் அதில் முந்திரி துண்டுகளையும் பின்னர் சிரேட்டி ரவையையும் போட்டு மிதமான சூட்டில் ஐந்து நிமிடம் வரை வறுத்துக் கொள்ளவும்.
ஒரு கப் சர்க்கரையை ஒரு கப் தண்ணீரை ஊற்றிக் காய்ச்சவும். அதில் சிறிதளவு குங்குமப்பூவை தண்ணீரில் இட்டுக் கரைத்து ஊற்றவும். இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சிறிது நேரம் கழித்து கம்பிப்பாகு பதம் வந்ததும் (சர்க்கரை கரைசலை ஆள்காட்டி, கட்டைவிரல்களில் தொட்டுப் பிரித்தால் மெல்லிய கம்பி போல நீளும்) அடுப்பை அணைக்கவும். பின்பு ஏலக்காய்த்துாளை அதில் துாவி ஆரஞ்சு கலர் பவுடரைச் சேர்த்து கலக்கவும்.
ஏற்கனவே நெய்யில் வறுத்த சிரோட்டி ரவையில் சர்க்கரைக் கரைசலை ஊற்றிக் கலக்கவும். இரண்டு நிமிடம் நன்றாகக் கலந்த பின் அடுப்பை அணைக்கவும். ஒரு சதுரமான தட்டில் நெய்யைத் தடவி அதில் கலவையை ஊற்றி சமமாக்கி சற்று ஆறிய பின்னர் கத்தியால் சதுர வடிவத்தில் வெட்டி துண்டுகளை தனியே ஒரு தட்டில் அடுக்கவும்.
இப்போது மந்த்ராலய மகான் ராகவேந்திரருக்கு பிடித்த பரிமள பிரசாதம் தயார்.
-பிரசாதம் தொடரும்
ஆர்.வி.பதி