தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி - 5

பச்சைப்புடவைக்காரி - 5

பச்சைப்புடவைக்காரி - 5


ADDED : மே 07, 2026 08:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2026 08:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாடகியின் வெற்றி

சென்னை அடையாறு பகுதியில் ஒரு வசதியான அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தேன். முன்னால் அமர்ந்திருந்த ஜனனிக்கு முப்பது வயதுகூட இருக்காது. அழகி.

“ரெண்டு நிமிஷம் பாடறேன். அப்புறம் பேசலாம்”.

'தீர்த்தக் கரையினிலே', என்ற பாரதியார் பாடலைப் பாடினாள். ஜனனியின் குரல் வளம், அவளுடைய இசைப் பயிற்சி, தாளம் தப்பாத துல்லியம் அனைத்தையும் தாண்டி அவள் குரலில் இருந்த பாவம் என்னை உருக்கிவிட்டது. இவள் இசை உலகையே ஆளப் பிறந்தவள். இவளுக்கு என்ன பிரச்னை இருக்க முடியும்?

“நான் ஒரு பாட்டுப் பைத்தியம், சார். ஓரளவு வசதியான குடும்பம். அம்மா, அப்பா ஊர்ல இருக்காங்க. எனக்குப் படிப்பு ஏறல. பாட்டுதான் என் உயிரு. எப்பவும் பாடிக்கிட்டேதான் இருப்பேன். முறையா கர்நாடக சங்கீதம் கத்துக்கிட்டேன். கச்சேரி வாய்ப்பு நெறையக் கெடைச்சது. இன்னும் ஆழமாக் கத்துக்கணும்னு அவர்கிட்ட பாட்டு கத்துக்கப் போனேன்”

ஒரு இசையுலக ஜாம்பவானின் பெயரைச் சொன்னாள் ஜனனி. மிகப் பெரிய இடம்.

“அவரும் வச்சிக்கிட்டு வஞ்சனை பண்ணாம தனக்கு தெரிஞ்சதெல்லாம் சொல்லிக் கொடுத்தாரு. இப்பப் பாடினேனே பாரதியார் பாட்டு இது கூட அவர் சொல்லிக் கொடுத்ததுதான். பயிற்சி முடிஞ்சதும் குரு தட்சணை என்ன வேணும்னு கேட்டேன். என் மொத்தச் சொத்தையும் கேட்டாலும் எழுதி வைக்கத் தயாரா இருந்தேன்.

“அவரு -அந்தக் கிராதகன் - என் கற்பை விலையாக் கேட்டான். நான் மாட்டேன்னு சொன்னதும் என்னை பலாத்காரம் செய்யப் பாத்தான். எப்படியோ தப்பிச்சி வந்துட்டேன்.”

“போலீஸ்ல புகார் கொடுத்தீங்களா?”

“போலீசுக்குப் போனா அந்தாளு பேரவிட உன் பேருதான் அதிகமா நாறிப்போகும்னு எல்லாரும் சொல்லிட்டாங்க. பல்லக் கடிச்சிக்கிட்டு சும்மா இருந்துட்டேன். ஆனா அந்தாளு சும்மா இல்ல, சார். எல்லா சபாக்களுக்கும் சொல்லி எனக்கு கச்சேரியே இல்லாமப் பண்ணிட்டான் சார். போன வருஷம் டிசம்பர் சீசன்ல பத்து இடத்துல என் கச்சேரி இருந்துச்சி. இந்த வருஷம் ஒண்ணுகூட இல்ல.

“அந்தக் காமாந்தகாரனோட ஆசைக்கு இணங்காதது என் தப்பா, சார்? அந்தத் தப்புக்கா உங்க பச்சைப்புடவைக்காரி எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையக் கொடுத்திருக்கா?”

வாசலில் நிழலாடியது.

“இஸ்திரி போடத் துணியிருக்கா?” - என்ற கேள்வியுடன் ஒரு பெண் நின்றிருந்தாள்.

“வழக்கமா வர ஆளு எங்க?”

“அவருக்கு உடம்பு சரியில்லம்மா.”

“ஒரு நிமிஷம் இரு.”

ஜனனி உள்ளே சென்றவுடன் இஸ்திரிக்காரி என்னைப் பார்த்துச் சிரித்தாள். என் கண்கள் பொங்கிவிட்டன. அவளிடம் ஓடினேன்.

“புலம்புகிறாளோ?”

அவள் யாரென்று உணர்ந்து அவள் காலில் விழுந்தேன்.

“உலகமே போற்றும் பாடகியாக வரப் போகிறாள். அதற்கு முன் அவள் மனதில் இருக்கும் அகந்தைப் பாம்பை அழிப்பதற்காக நான் அரங்கேற்றிய நாடகம் இது. வந்தவுடன் மனதில் பட்டதைச் சொல்லிவிடு.”

ஜனனியிடம் துணிகளை அவள் வாங்கிய போது அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஜனனி ஏதோ பேச ஆரம்பித்தாள். நான் நடுவில்,

“பக்கத்துல ஒரு மாரியம்மன் கோவில் இருக்கா?” எனக் கேட்டேன்.

“ஆமா. எதுக்குக் கேக்கறீங்க?”

“அங்க ஆடி மாசம் திருவிழா நடக்கும் இல்லையா?”

“ஆமா”

“அதுல உங்களப் பாடச் சொன்னாங்களா?”

“ஆமா. நான் எப்படி சார் அங்க பாட முடியும்? பெரிய, பெரிய சபால பாடற நான் எப்படி ஒரு சின்னக் கோயில்ல பாடறது?”

நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“அந்தச் சின்னக் கோயில்ல பாடாதது அவ்வளவு பெரிய தப்பா? அதனாலதான் அந்தாளு என்னைக் கற்பழிக்கப் பாத்தானா? அதனாலதான் என் கச்சேரி சான்ஸ் போச்சா? உங்க பச்சைப்புடவைக்காரி அவ்வளவு பெரிய கொடுமைக்காரியா?”

“பாடறதும் பாடாததும் உங்க இஷ்டம். அந்தக் கோயில் ஆளுங்கமேல வார்த்தைக் கங்குகளக் கொட்டினீங்களே அதுதான் நீங்க செஞ்ச பெரிய தப்பு. அந்தப் பாவம்தான் உங்க வாழ்க்கையோட வெளையாடுது.”

கோபமாகக் கத்திவிட்டு வெளியேறினேன்.

வெளியே வந்தபோது இஸ்திரிக்காரியைப் பார்த்தேன். பிரபஞ்சத்திற்கே படியளப்பவள் ஒரு மனுஷப்பிறவியின் துணிகளைத் தேய்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்க என் மனம் பொறுக்கவில்லை. அவள் காலில் விழுந்தேன்.

“என்ன நடக்கும் எனக் காட்டுகிறேன் பார்”

பாடகியின் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் ஒரு சின்ன விழா நடந்தது. அதில் பாடுவதற்காக ஒரு இசைக்கலைஞரை அழைத்திருந்தார்கள். அந்தக் கலைஞரால் கடைசி நேரத்தில் வர முடியாமல் போய்விட்டது அங்கே வேலை பார்த்த ஆசிரியர் பரந்தாமனுக்குப் பாடகி ஜனனியைத் தெரியும். அவளிடம் ஓடி வந்தார்.

“கலெக்டர் வந்திருக்காரும்மா. எங்க மானத்த நீங்கதாம்மா காப்பாத்தணும். என்ன கேட்டாலும் தரோம்மா” - பரந்தாமன் கெஞ்சினார்.

“ஒண்ணும் தர வேண்டாம். நான் பாடறேன்”, என்றாள் ஜனனி.

“வழக்கம்போல பாடினா அங்க எடுபடாதும்மா. சினிமாவுல வர பக்திப்பாட்டுபாடுங்கம்மா. ”

கச்சேரி களை கட்டியது. கைதட்டல் காதைப் பிளந்தது.

ஜனனி பாடிய ஒரு பாடலை தன் அலைபேசியில் ஒலிப்பதிவு செய்து கொண்டார் பரந்தாமன். அதைத் தன் துாரத்துச் சொந்தக்காரரான ஒரு இசையமைப்பாளரிடம் போட்டுக் காட்டினார்.

அசந்துவிட்டார் இசையமைப்பாளர்.

“நாளைக்கே என்னை வந்து பாக்கச் சொல்லுங்க” - என்றார் இசையமைப்பாளர்.

யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்குப் புகழ் பெற்றாள் ஜனனி.

“எல்லாம் சரிதான், தாயே! தன்மகள் வயதுள்ளவளிடம் தப்பாக நடந்து கொண்ட அந்தக் காமக்கொடூரனுக்கு என்ன தண்டனை கொடுத்தீர்கள்?”

“ஜனனியின் புகழ்தான் அவனுக்கு நான் கொடுத்த தண்டனை. ஜனனி பொதுவிடத்தில் அவனுடைய மோசமான நடத்தையைப் பற்றிச் சொல்லி விட்டால் அவனுடைய வாழ்க்கையே முடிந்து விடும். ஆனால் ஜனனி சொல்ல மாட்டாள். அவள் சொல்லி விடுவாளோ என்ற பயத்திலேயே அவன் வாழ்வான். ரத்தக் கொதிப்பும் இதய நோயும் வந்து விடும். பல வருடங்கள் படுத்த படுக்கையாக இருப்பான். தன் தவறை உணர்வான். அடுத்த பிறப்பு நன்றாக இருக்கும். உனக்கு என்ன வேண்டும் என்று சொல்.”

“சொல்லாலும் செயலாலும் எண்ணங்களாலும் யாரையும் காயப்படுத்தாத மனம் வேண்டும் தாயே!”

“பேராசைதான் உனக்கு.”

பெரிய சிரிப்புடன் மறைந்தாள் என்னைக் கொத்தடிமையாகக் கொண்டவள்.



-தாயின் அன்பு தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us