ADDED : மே 07, 2026 08:52 AM

நம்மாழ்வாரைப் போலே
அன்று சீக்கிரமே வந்த கிருஷ்ணவேணி, ''என்ன அமிர்தம்மாவை காணல” என யோசித்தபடி அமர்ந்திருக்க அமிர்தம் அலைபேசியில் அழைத்தார்.
“சொந்தக்காரங்க வந்துட்டாங்க, இதோ வந்துட்டே இருக்கேன்” என சொல்லிவிட்டு உடனே இணைப்பை துண்டித்தார் அமிர்தம்.
அவர் வந்ததும் பரபரப்பாக நடக்கத் தொடங்கினர் இருவரும். அப்போது கிருஷ்ணவேணி,'14ம் வாக்கியமான 'அவன் சிறியன் என்றேனோ ஆழ்வாரைப் போலே'ன்னு பெண்பிள்ளை சொன்னாளே... அந்த ஆழ்வார் யார் தெரியுமா?
சிறப்பு மிக்க நம்மாழ்வார் தான். மற்ற ஆழ்வார்கள் எல்லாம் உடல் என்றால் நம்மாழ்வார் தான் உயிர்.
திருக்குருகூர் என்ற ஊரைச் சேர்ந்த காரியார், உடைய நங்கை தம்பதிக்கு திருக்குறுங்குடி பெருமாளின் அருளால் குழந்தை பிறந்தது. பிறந்தது முதல் அது பால் அருந்தவில்லை. அழவில்லை, கண் திறந்து பார்க்கவில்லை.
ஆனால் குழந்தை உயிருடன் இருந்தது. மாறுபாடாக இருந்ததால் 'மாறன்' என பெயர் சூட்டினர்.
குழந்தையை எப்படி வளர்ப்பது எனத் தெரியாமல் பிறந்த 12ம் நாளன்று, மனதை கல்லாக்கியபடி திருகுருகூர் கோயிலில் உள்ள புளிய மரத்தடியில் தொட்டில் கட்டி பெருமாளிடம் ஒப்படைத்தனர்.
அந்தக் குழந்தை தவழ்ந்து சென்று மரத்திலுள்ள பொந்தில் உட்கார்ந்தது. இப்படியே 16 வருடங்கள் கடந்தன. அது கண் திறக்காமல், வாய் பேசாமல், யோக நிலையிலேயே உயிருடன் இருந்தது.
இந்த நிலையில் மதுரகவி யாழ்வார் ஒரு நாள் வட இந்திய யாத்திரை சென்றார். அயோத்தி ராமரை தரிசித்து விட்டு இரவில் ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்தபடி வானத்தை பார்த்தார்.
அப்போது ஒரு பேரொளி தெரிந்தது. அது தென்திசையில் இருந்து தான் வருகிறது என அறிந்து அதை நோக்கி நடந்தார். இப்படி மாதக்கணக்கில் நடந்த பின் ஒரு நாள் ஒளி மறைந்தது. ஒளி தோன்றிய இடம் வந்து விட்டது என்பதை அவர் உணர்ந்தார். அதனால் அங்குள்ளோரிடம் இது எந்த ஊர்? இங்கு என்ன விசேஷம் என கேட்ட போது இந்த ஊரின் பெயர் குருகூர்
(துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி).
இங்குள்ள கோயிலில் ஒரு குழந்தை
16 வருடமாக மூச்சுப் பேச்சு இல்லாமல், கண் திறக்காமல், ஆகாரம் இன்றி ஒரு புளியமரப் பொந்திலேயே உள்ளது என்றார்கள்.
மதுரகவியாழ்வாருக்கு அது விசேஷமான குழந்தையாக இருக்கும் என மனதிற்கு தோன்றியது. அங்கு போன போது, ஆச்சரியம் காத்திருந்தது. வானத்தில் பார்த்த அதே ஒளி குழந்தையின் முகத்தில் தெரிந்தது. ஆனால் குழந்தை அசையாமல் இருந்தது. கண்களை மூடி மவுனமாக இருந்த குழந்தை மீது மதுரகவியாழ்வார் ஒரு கல்லை வீசினார். உடனே அது கண் திறந்து பார்த்தது.
மதுரகவியாழ்வார் அதனிடம், 'செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” எனக் கேட்டார். சிறிதும் யோசிக்காமல், 'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்' என்றது. இதுவே அக்குழந்தை பேசிய முதல் வாக்கியம்”
''கிருஷ்ணவேணிம்மா... இந்த வாக்கியத்திற்கு என்ன அர்த்தம்?” எனக் கேட்டார் அமிர்தம்.
''உயிர் இல்லாத இந்த உடம்பில் ஜீவன் என்ற சிறியது பிறந்தால் அது எங்கே இருக்கும்?' என மதுரகவியாழ்வார் கேட்க 'இந்த உடல் எடுக்க காரணமானது வினை. அந்த வினை தீரும் வரை அந்த ஜீவன் அந்த உடம்பிலேயே கிடக்கும்' என பதிலளித்தது அந்த குழந்தை.
இதன் மூலம் மதுரகவியாழ்வார் குழந்தையின் பெருமையை உணர்ந்து குருவாக ஏற்றுக் கொண்டார். அவரே பின்னாளில் நம்மாழ்வார் எனப்பட்டார். பிறகு அவருக்கு தொண்டு செய்து, அவர் பாசுரம் பாட அதை ஓலைச்சுவடியில் எழுதி வந்தார். நம்மாழ்வார் வேதத்துக்கு சமமாக நான்கு பிரபந்தம் பாடினார். பல திவ்யதேச பெருமாளைப் பற்றி நம்மாழ்வார் பாட அதை அனைவரிடமும் கொண்டு சேர்த்தவர் மதுரகவியாழ்வார் தான்.
ஒரு சமயம் நம்மாழ்வார் கடவுளின் உயர் பண்புகளை ஆழ்ந்து சிந்தித்து, 'பெருமாளே... உலகை எல்லாம் காப்பவனே... இந்த பெரிய உலகமும், அரிய ஞானமும் உனக்குள் அடங்கியிருக்க இத்தனை பெரிய நீ என்னுடைய செவி வழியே சிறியனாய் உள் புகுந்து என்னை ஆட்கொண்டு என்னுள் வசிக்கிறாயே... உன்னிடம் ஒன்று கேட்கிறேன். இந்தப் பிரபஞ்சம், பஞ்சபூதங்களை அடக்கிய பெருமை உனக்கு உண்டு, அப்படி இருக்க நீ பெரியவனா... இத்தனை சிறப்பான உன்னை என் மனதிற்குள் சுமக்கும் நான் பெரியவனா?' என கேள்வி கேட்டார் நம்மாழ்வார். அப்படி சிறியன் என்று என்னால் சொல்ல முடியவில்லையே சுவாமி...
நம்மாழ்வாரைப் போல பெருமாள் மீது அந்தளவுக்கு நான் பக்தி கொள்ளவில்லையே என பெண் பிள்ளை ராமானுஜரிடம் பணிவாக விளக்கினாள்.
''பதிலுக்கு ராமானுஜர் என்ன சொன்னார் தெரியுமா... கடவுள் பெரியவரா, அடியவர்கள் பெரியவரா என கேட்கும் போது கடவுளை விடவும் அடியவர்களே பெரியவர் என்பார்கள் வைணவர்கள். கடவுளை வழிபட்டால் கடவுளை மட்டும் வழிபட்டதாக பொருள். ஆனால் அடியவர்களை வழிபட்டால் அவர்களின் நெஞ்சில் குடியிருக்கும் கடவுளையும் சேர்த்து வழிபட்டதாகி விடும்.
இதனால் பகவானை காட்டிலும் பக்தருக்கே பெருமை அதிகம். இது வழக்கம் தான் என புன்முறுவல் பூத்தார் ராமானுஜர்.
அப்போது பெண்பிள்ளையிடம், மதுரகவியாழ்வார் எங்கு பிறந்தார் தெரியுமா எனக் கேட்டார் ராமானுஜர். அவர் எங்கள் ஊர் திருக்கோளூரில் பிறந்தவராச்சே எனச் சொல்ல ராமானுஜர் அவளின் பக்தி, உலக அறிவைக் கண்டு மெச்சினார்.
''இந்த ஆழ்வாருக்கு யார் நம்மாழ்வார் என பெயரிட்டனர்?” என அமிர்தம் கேட்க
''அந்த காலத்தில் மரியாதைக்குரிய நபர்களை 'ந' கரம் சேர்த்து அழைப்பது மரபு. அதனால் தான் கீரன் என்பதை நக்கீரன் என்றும் பசலையார் என்பதை நப்பசலையார் என்றும் அழைப்பது வழக்கம். அப்படித் தான் இந்த உயர்ந்த ஆழ்வாரை நம்மாழ்வார் என அழைத்தனர்.
மற்ற ஆழ்வார்கள் ஊர் ஊராகச் சென்று பாசுரம் பாட, நம்மாழ்வார் மட்டும் புளிய மரப்பொந்தில் இருந்தே பாசுரம் பாடினார். இவரே ஆழ்வார்களுக்கு எல்லாம் தலைமையானவர். 16 வருடம் வரை வாய் பேசாமல் பின் பாசுரம் பாடி 32 வயது வரை வாழ்ந்தார் நம்மாழ்வார்”
நம்மாழ்வாரின் வரலாறை அறிந்து அப்படியே உறைந்து போனார் அமிர்தம். ''நம்மாழ்வார் இப்படி உண்ணாமல் வாய் பேசாமல் இருந்ததை கேள்விப்படும் போது ஆச்சரியமாக இருக்கு. எனக்கு இப்போது பிறவியிலேயே பார்வை இல்லாத தண்டியடிகள் தான் நினைவுக்கு வருகிறார்” என்றார் அமிர்தம்.
“அவர் ஒரு சிவனடியார் தானே”
“ஆமா, நாயன்மாரில் ஒருவர். தண்டியடிகள் நாயனார் என்பார்கள். திருவாரூரில் பிறந்த இவர் பார்வை இல்லாமல் இருந்தாலும் 'நமசிவாய' என்ற மந்திரத்தை எப்போதும் ஜபிப்பார். திருவாரூர் தியாகராஜரை வழிபடுவதையே கடமையாக கொண்டிருந்தார். திருவாரூர் கோயில் குளமானது வேற்று மதத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது.
தண்டியடிகள் அதை செப்பனிட குளத்தின் நடுவே ஒரு கம்பையும், குளக்கரையில் மற்றொரு கம்பையும் நட்டார். இரண்டுக்கும் இடையே கயிற்றை கட்டினார். கயிற்றை தடவிக் கொண்டே போய் மண்ணைத் தோண்டி கூடையில் எடுத்து வந்து கரையில் கொட்டினார். யாருடைய உதவியும் இல்லாமல் தானே முன் நின்று பணி செய்தார்.
இதைப் பார்த்த மாற்று மதத்தினர், மண்ணைத் தோண்டும் போது சிறு உயிர்கள் செத்துப் போகின்றன. அதனால் வேலையை இத்துடன் நிறுத்து என மிரட்டினர். தண்டியடிகள் வருத்தமுடன் சிவனிடம் முறையிட்டார்.
மன்னரின் கனவில் தோன்றிய சிவன், உடனே தண்டியடிகளுக்கு உதவி செய்யும்படி கட்டளையிட்டார். மறுநாள் மன்னர் முன்னிலையில் தண்டியடிகள் குளத்தில் மூழ்கி எழுந்த போது அவருக்கு பார்வை கிடைத்தது. அதே நேரத்தில் எதிரிகள் பார்வையை சில மணி நேரத்திற்கு இழந்தனர். இதை பார்த்த அனைவரும் தண்டியடிகளின் பக்தியை உணர்ந்தனர்” என்றார் அமிர்தம்.
''உடலில் குறை இருந்தாலும் நம்மாழ்வாரும், தண்டியடிகளும் பக்தியில் குறை வைக்கவில்லை இல்லையா?” என கிருஷ்ணவேணி கேட்டதும் 'ஆமாம்' என ஆமோதித்தார் அமிர்தம்.
-தொடர்வாள் பெண்பிள்ளை
முனைவர் பவித்ரா நந்தகுமார்
82204 78043
