ADDED : ஜூலை 23, 2026 08:46 AM

கேட்டதைக் கொடுப்பாளா?
முன்னால் அமர்ந்திருந்த பார்கவி அழகில் ஜொலித்துக் கொண்டிருந்தாள். ஆண்டுக்குப் பத்தாயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் தொழில் சாம்ராஜ்ஜியத்தின் தலைவி. வருமான வரி ஆணையர் ஏற்பாடு செய்த சந்திப்பு இது. பரஸ்பர அறிமுகம் முடிந்தவுடன் மென்மையான குரலில் பேசினாள்.
“ஆன்மிகத்தில ஒரு சந்தேகம்”
“சொல்லுங்க”
“பச்சைப்புடவைக்காரியிடம் இருக்கும் செல்வத்தின் அளவு என்ன? உதாரணமாக ஒரு மனிதனுக்கு ஐம்பதாயிரம் கோடி செல்வத்தைக் கொடுத்தால் அவளிடம் இருக்கும் செல்வம் குறைந்து விடுமா?”
“பச்சைப்புடவைக்காரியே உலகின் அதிபதி. அவளிடம் உள்ள செல்வத்திற்கு அளவே கிடையாது. இந்த உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர் ஆசைப்பட்ட அளவிற்கு செல்வத்தை வழங்கினாலும் அவளிடம் இருக்கும் செல்வம் ஊசி முனை அளவு கூட குறையாது”
“அப்புறம் ஏன் அவள் தன்னை வணங்குபவர்களைத் தவிக்க விடுகிறாள்?”
“யாரைத் தவிக்க விட்டாள்?”
“என்னைத்தான். எனக்கு அளவில்லாத செல்வத்தைக் கொடுத்திருக்கிறாள். அன்பான கணவரைக் கொடுத்திருக்கிறாள். ஆனால் தாய்மைப் பேறு மட்டும் கொடுக்க மறுக்கிறாளே... நான் தாயானால் குறைந்து விடுவாளா என்ன?”
எனக்கு என்ன பேசுவதென தெரியவில்லை.
“அவள் நினைத்தால் என்னைத் தாயாக்க முடியும், இருந்தாலும் அவள் எனக்கு தாய்மைப் பேற்றை தர மறுக்கிறாள். நானும் என் கணவரும் மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டோம். ஒரு குறையும் இல்லை. காலம் கனிய வேண்டும் என சொல்லி விட்டனர். அப்படி என்றால் அவள் வைத்துக் கொண்டு வஞ்சனை செய்கிறாள் என்று தானே அர்த்தம்”
என்ன பதில் சொல்வது? அவள் முன்னால் இருந்த அலைபேசிகளில் ஒன்று அலறியது. பேசி முடித்துவிட்டு என்னிடம் சொன்னாள்.
“பத்து நிமிஷம் சார். சின்ன எமர்ஜென்சி. வந்துடறேன்”
நான் தொலைவில் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“எம்.டி., மேடம் இல்லையா?” குரல் கேட்டுத் திரும்பினேன். நடுத்தர வயது பெண் நின்றிருந்தாள்.
“ஏதோ அவசரம் என்று...''
அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
“குழந்தை இல்லை என புலம்பினாளா?”
தாயை அடையாளம் கண்டு கொண்டு காலில் விழுந்தேன்.
“பார்கவி வந்ததும் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்க்க வேண்டும் எனச் சொல். உன்னை அழைத்துச் செல்வாள். அப்போது நானே விளக்கம் தருகிறேன்”
பார்கவி வர கால் மணி நேரமானது.
“என்ன யோசிச்சீங்களா?”
“எனக்கும் ஒண்ணும் புரியல. காலாற நடந்தா உங்க கேள்விக்குப் பதில் தெரியும்னு தோணுது. உங்க பேக்டரியச் சுத்தி காட்டுறீங்களா?”
“வாங்க, சார்.”
அந்த பிரம்மாண்டமான அமைப்பை மேலோட்டமாகப் பார்ப்பதற்கே அரை மணி நேரம் ஆகி விட்டது. நாங்கள் ஒரு பிரிவில் இருந்த போது தொழிலாளிகள் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
“கால் மணி நேரம் ப்ரீ டைம். அப்போ டீ கொடுப்போம். செல்போன் பேசலாம்” - பார்கவி விளக்கினாள்.
சற்று தள்ளி நின்ற ஒரு தொழிலாளி அலைபேசியில் சத்தமாகப் பேசினான்.
“அம்மாவுக்கு ஆஸ்பத்திரி செலவுக்கு 20,000 ரூபாய் வேணுமா? போன மாசம்தான் அட்வான்ஸ் போட்டேன். இந்த மாசம் கேட்டா தர மாட்டாங்களே...”
பார்கவியைத் திரும்பிப் பார்த்தேன். சட்டென பர்சை திறந்தாள். பின் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. மீண்டும் பர்சை உள்ளே வைத்தாள்.
“போகலாம் மேடம். உங்க கேள்விக்குப் பதில் தெரிஞ்சிருச்சி”
மீண்டும் அறைக்கு வந்ததும் நிதானமாகச் சொன்னேன்.
“உங்க சொத்து மதிப்பு 15,000 கோடி. உங்க கம்பெனியோட பேங்க் அக்கவுண்ட்ல ஐநுாறு கோடி இருக்கு. அந்த தொழிலாளியோட தேவை வெறும் 20,000 ரூபாய்தான். உடனே கொடுத்திருக்கலாமே”
பார்கவி என்னைப் புதிருடன் பார்த்தாள்.
“நீங்க ரொம்ப நல்லவங்க மேடம். உங்ககிட்ட வேலை பாக்கறவனுக்கு பணத்தேவைன்னு தெரிஞ்சவுடனே பர்சை எடுத்துட்டீங்க. அப்புறமாதான் யோசிச்சீங்க. யாருக்கு என்ன கொடுக்கறதா இருந்தாலும் அத கம்பெனி விதிகளுக்கு உட்பட்டு கொடுக்கணும்னு தோணிச்சி. இது முழுக்க முழுக்க உங்க கம்பெனி மேடம். உங்க கம்பெனி விதிகள் எல்லாம் நீங்களே உருவாக்கினது. அதை மீறவே உங்களுக்குத் தயக்கமா இருக்கே? ஏன்?”
“ஒரு தனியாளுக்கு விதிக்குப் புறம்பா பணம் கொடுத்தா பின்னால பிரச்னை வரலாம். இது தவறான முன்னுதாரணம் ஆகி அதனால தேவையில்லாத குழப்பம் வரலாம். அதனாலதான்...''
“தொழிலாளிகளத் துன்புறுத்தணும்னு நீங்க கம்பெனி விதிகள உருவாக்கல. இந்தக் கம்பெனி நிலைச்சு நிக்கணும்னா அத விதிக்கு உட்பட்டுத்தான் நடத்தணும். அந்த தொழிலாளியின் அவசர தேவைக்கு 20,000 ரூபாயை கொடுக்கறத விட ரிட்டயர்மெண்ட் வரைக்கும் அவனுக்கு வேலை, சம்பளம் கிடைக்கறதுதான் முக்கியம்''
“உலகத்துல ஒரு மூலையில இருக்கற கம்பெனி நல்லா நடக்கறதுக்கே இவ்வளவு விதி வேண்டியதிருக்கே, இந்த பிரபஞ்சத்தையே நிர்வாகம் செய்ய விதிகள் வேண்டாமா? அதுதான் கர்ம விதி... உங்க விதிகளையும் மீறி பணத்தை அந்த தொழிலாளிக்குக் கொடுக்க துடிச்சீங்க பாருங்க. அதே மனநிலையிலதான் பச்சைப்புடவைக்காரியும் இருக்கா. குழந்தை வரத்தை கொடுக்க அவளும் ஆசைப்படறா. பிறகு கர்மவிதிகளை மீறக் கூடாதுன்னு நிறுத்தி வச்சிடறா. நீங்க எடுத்த பர்சை திருப்பி வச்ச மாதிரி”
பார்கவியின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் கோர்த்துக் கொண்டு நின்றது.
“ஒரு வேண்டுகோள் பார்கவி. பச்சைப்புடவைக்காரிகிட்ட வம்படியா வரம் கேக்காதீங்க. கேட்டதை தந்தே ஆகணும்னு அடம் பிடிக்காதீங்க. கேட்டா கொடுத்திருவா. ஆனா அதனால நீங்க அனுபவிக்கிற கஷ்டம் இன்னும் அதிகமாத்தான் இருக்கும்”
பார்கவியிடம் விடைபெற்று லிப்ட்டில் ஏறிய போது அங்கே பச்சைப்புடவைக்காரி அதே தோற்றத்தில் இருந்தாள்.
“தாயே பார்கவி நல்லவளாக இருக்கிறாள். இவளுக்கு குழந்தை வரத்தை தரலாமே?”
“நல்லவளாக இருப்பதால்தான் அந்த வரத்தைத் தரவில்லை. இவளின் கணவரின் மரபணுக்களில் கோளாறு இருக்கிறது. குழந்தை பிறந்தால் அது மனவளர்ச்சி குன்றித்தான் இருக்கும். அதனால்தான் பார்கவியைத் தாயாக விடவில்லை. வருங்காலத்தில் அறக்கட்டளை தொடங்கி ஆயிரம் ஆயிரம் குழந்தைகளுக்குத் தாயாக விளங்குவாள். அவளை நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டும்?”
“பார்த்துப் பார்த்துக் கொடுக்கும் பாசமுள்ள தாயாக நீங்கள் இருக்கும் போது எதையும் எதிர்பார்க்காத மனதைத்தான் கேட்கிறேன்”
லிப்ட் தரைதளத்திற்கு வந்த போது பச்சைப்புடவைக்காரி மறைந்து விட்டாள்.
-தாயின் அன்பு தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com
