தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பெண்பிள்ளை ரகசியம் - 24

பெண்பிள்ளை ரகசியம் - 24

பெண்பிள்ளை ரகசியம் - 24


ADDED : ஜூலை 23, 2026 08:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 08:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆழிமறை என்றேனோ வசுதேவரைப் போலே

“அமிர்தம்மா... இன்று 23வது ரகசியமான 'ஆழிமறை என்றேனோ வசுதேவரைப் போலே'வின் விஸ்வரூபத்தை பார்க்கலாம். இதுவும் கிருஷ்ணாவதாரத்தில் வரக்கூடிய நிகழ்வுதான். ஆழ்வார்களும் ஆழ்ந்து போய் நின்ற இடம் இந்த கிருஷ்ணாவதாரம். அத்தனை சிறப்பு வாய்ந்தது. இதில் தான் பல அதிசயங்களை நிகழ்த்தினான்.

பூதகியின் முலையை சுவைத்து அவள் உயிரை கவர்ந்தான். கன்று கொண்டு கனி வீழ்த்தினான். அத்துடன் பல சந்தர்ப்பங்களில் தானே கடவுள் என்பதை உலகிற்கு காட்டினான். தேவையான போது சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தந்தான்.

சில சமயத்தில் தன் பிரம்மாண்டமான விஸ்வரூபத்தையும் காட்டினான். இப்படி கிருஷ்ணாவதாரத்தின் வீச்சும் வேகமும் ராம அவதாரத்திலிருந்து முற்றிலும் வேறுபடும். சரி, வாக்கியத்துக்குள் வருவோம்.

வட மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் உக்ர சேனர். இவரை அக்கிர சேனர் என்றும் சொல்வர். அவருடைய பெயரால் உருவாக்கப்பட்டதே யமுனை ஆற்றின் கரையில் இருக்கும் ஆக்ரா என்ற நகரம். அவருடைய மகன் தான் கம்சன். கம்சனின் தங்கை தேவகி. தேவகியின் கணவர் வசுதேவர். இவர்களுக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் கம்சன் உயிரிழப்பான் என அசரீரி சொன்னதை போன வாக்கியத்திலேயே பார்த்தோம் இல்லையா... கம்சன் கொடுங்கோல் ஆட்சி நடத்தினான். இதனால் கிருஷ்ணன் பிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தேவகியின் வயிற்றில் எட்டாவது குழந்தையாக அவதரித்தான் கண்ணன். பிறந்த உடனேயே பெற்றோருக்கு தான் பரம்பொருள் எனக் காட்டினான். அவன் பிறந்த போது பெற்றோரின் அடிமைச் சங்கிலி தானாக அறுந்து வீழ்ந்தன. வசுதேவரும் தேவகியும் அந்த குழந்தையை பார்த்தனர். தான் கடவுள் என்பதைக் காட்டினான்.

அழகான திருமேனி, செந்தாமரை பாதம், ஆச்சரியமான விரல்கள், அதி ஆச்சரியமான கணுக்கால்கள், தங்கக் கண்கள், ஜோரான முழங்கால்கள், ஒட்டி பருத்த தொடை, சின்ன இடை, பட்டு பீதாம்பரம், அழகான நாபிக்கமலம், அகன்று விசாலமான நீண்ட கைகள், உருண்டு திரண்ட தோள்கள், நான்கு திருக்கைகள், சங்கு சக்கரம் வெளிப்பட, அழகிய கழுத்து, தீர்க்கமான நாசி, வில் போன்ற புருவம், பரந்த நெற்றி, கஸ்துாரி திலகம், சுருள் சுருளான கேசம், காதில் குண்டலம், வைர கிரீடம், மஞ்சள் பட்டு உடுத்தி தானே பரம்பொருள் என்பதை பெற்றோருக்கு காட்டினான். இப்படி குழந்தையை பார்த்த வசுதேவரும் தேவகியும் பரவசப்பட்டனர்.

குழந்தையின் அழகு அவர்களின் நெஞ்சத்தை கொள்ளை கொண்டது. கண்ணனின் அழகும் இவர்களின் பாசமும் இணைந்து அவர்களுக்கு பிரேமையை உண்டு பண்ணியது. அந்தப் பிரேமை தோன்றியதும் பயமும் வந்தது. உலகத்தை படைத்து காத்து அருளும் அருஞ்செயலை விளையாட்டாக நடத்தும் அந்த நாராயணன் தங்களுக்கு மகனாக பிறந்திருக்கிறான் என்பது தெரிந்தும் மனம் கலங்கினர். கம்சனால் இடைஞ்சல் நேருமோ என வருந்தினர். ''உன்னுடைய சங்கு சக்கரத்தை மறைத்து சாதாரண குழந்தையாக தோற்றமளிக்க வேண்டும்'' என வேண்டினர். அப்படி தட்டு மாறி நின்று வசுதேவர் கண்ணனிடம் ஆழிமறை என்று வேண்டினார்”

“தட்டு மாறிய நிலை என்றால் என்ன?” முகத்தில் ஒருவித குழப்பத்துடன் கேட்டார் அமிர்தம்.

''அதுவா, தட்டு மாறிய நிலை என்றால் தங்களை காக்கும் கடவுளிடம் தங்களை காக்க வேண்டும் என வேண்டாமல், அவன் அழகிய உருவத்தைப் பார்த்து அவனுக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என அவனைக் காக்க முயற்சிப்பதே தட்டு மாறிய நிலை. அதாவது காக்கும் கடவுள் நிற்க வேண்டிய தட்டில் காக்கப்பட வேண்டியவன் நின்று கொண்டு கடவுளை எதிர் தட்டில் நிறுத்தி அவனுக்காக கலங்குவது தட்டு மாறிய நிலை என்பர்.

வசுதேவர், கண்ணனுக்கு தந்தையானாலும் நாராயணனின் தீவிர பக்தர். அதனால் அவரும் ஆழ்வார்களைப் போல அவனைக் காப்பாற்ற வேண்டுமே என கலங்கி ஆயுதங்களை மறைத்திடு என தட்டுமாறி நின்று வேண்டினார்.

கண்ணனுக்கு கம்சனால் தீங்கு வரும் என எண்ணி உன்னுடைய சங்கு சக்கரத்தை மறைத்துக் கொள் என்று சொன்ன வசுதேவரைப் போல நானும் என்னுடைய ஊரில் இருக்கும் வைத்தமாநிதி பெருமாளை பார்த்து, ஒரு நாள் கூட பெருமாளே... பேரழகு கொண்ட உனக்கு திருஷ்டி ஏற்பட்டு விடப் போகிறது என்று சொல்லும் மனநிலையை பெறவில்லையே சுவாமி... அதனால் நான் ஊரை விட்டு போகிறேன் என ராமானுஜரிடம் பணிவாக தெரிவித்தாள் பெண் பிள்ளை” என கிருஷ்ணவேணி பெருமூச்சுடன் முடித்தார்.

அவர் சொல்லச் சொல்ல குழந்தை கண்ணனின் அழகை அப்படியே நேரில் தரிசித்தது போலிருந்தது என நெகிழ்ந்தார் அமிர்தம். சில நிமிடத்திற்கு அந்த தாக்கம் ஆட்கொண்டிருந்தது. பின்னரே பேசத் தொடங்கினார். ''மகாவிஷ்ணுவின் அழகு இவ்வாறெல்லாம் இருக்க சிவபெருமானின் அழகை நான் என்னவென்று சொல்வது” என மெதுவாக ஆரம்பித்தவர், ''சிவனுக்கு சாம்பல் பூசப்பட்ட உடல், அதாவது உடல் முழுவதும் திருநீறு பூசி இருப்பார்.

வாழ்வு நிலையற்றது என்பதை நமக்கு எடுத்துச் சொல்லும். கழுத்திலும் கைகளிலும் பாம்பை ஆபரணமாக சிவன் அணிந்திருப்பார். சிவனுக்கு பயம் என்பதே கிடையாது என்பதை குறிப்பதோடு அவர் மரணத்தை வென்றவர் என்பதை இது காட்டுகிறது. இவருக்கு முடி அலங்காரம் இல்லை. சிக்கலான ஜடை தான். அதிலும் தலை மீது கங்கை பாய்ந்து கொண்டிருக்கும். கங்கை நதியை காப்பாற்ற தன் தலையில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார். சிவன் மண்டை ஓட்டை ஏந்தி பிச்சை எடுப்பார், அதாவது அகம்பாவம் இல்லாத தன்மை. உலகின் ராஜாவாக இருந்தும் பிச்சைக்காரன் போல எளிமையாக இருப்பவர். அழகான ஆடைகளை உடுத்தாமல் புலித்தோலை உடுத்தியிருப்பது மிருகத்தன்மையை அடக்கியவர் என்பதைக் காட்டும். நெற்றியில் ஒரு கண் இருக்கும்.

இது ஞானக்கண், அதாவது அறிவால் அனைத்தையும் காண்பவர்.

சிவனுடைய இயல்பும் அழகும் இவ்வாறு இருக்க திருநாவுக்கரசர், சுந்தரர், ஞானசம்பந்தர் பாடிய பதிகங்களில் சிவனின் திருமேனி அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. அதாவது பக்தன் உணர்வது அவருடைய அருள், கருணை, பரம்பொருள் தன்மையைத் தான்.

இது கண்களால் பார்ப்பதல்ல ஒவ்வொரு பக்தனும் மனதால் உணர்வது. இது ஒவ்வொன்றுக்கும் ஆழமான ஆன்மிக அர்த்தம் இருக்கிறது. ஆனால் கோயில்களில் லிங்க வடிவில் அவரை வழிபடுகிறோம். அவர் லிங்க வடிவம் எடுத்தது எப்போது தெரியுமா? அது ஒரு சுவாரஸ்யம். ஒருமுறை விஷ்ணுவுக்கும் பிரம்மாவிற்கும் இடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பெரிய அக்னி கோலமாக அவர்களின் நடுவே தோன்றினார் சிவபெருமான்.

அன்று முதல் இன்று வரை சிவன் லிங்க வடிவில் தான் வழிபடப்படுகிறார். லிங்கம் என்றால் வானத்தைக் குறிக்கும். அதனுடன் கீழ் பாகத்தில் ஒட்டி இருக்கும் ஆவுடை பூமியை குறிக்கும். விண்ணுக்கும் மண்ணுக்குமாக சிவபெருமான் எழுந்து இருந்ததை இது சொல்கிறது. அதிலும் முக்கிய விஷயம் என்னவென்றால் லிங்க வடிவம் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என மூன்றாக பிரிக்கப்பட்டிருக்கும். ருத்திர பாகம் என்பது லிங்கத்தின் மேல் பாகம். கோயில்களில் லிங்கத்தின் ருத்ர பாகம் மட்டுமே நம் கண்களுக்கு தெரியும். அதற்கு மட்டுமே பூஜை நடக்கும்.

விஷ்ணு பாகம் ஆவுடையுடன் பொருந்தியிருக்கும். பிரம்ம பாகம் முழுதும் புதைந்திருக்கும். லிங்கத் திருமேனியை பார்த்தே பக்தர்கள் சிலிர்க்கின்றனர்” என முடித்தார் அமிர்தம்.

“ஆமாமா... சிவன் அபிஷேக பிரியர், விஷ்ணு அலங்கார பிரியர் என்று சொல்வாங்க. அவங்கவங்க உருவ அமைப்பும் அதற்கு ஏதுவா அமைஞ்சிருக்கு”

“என்ன பிரமாதம்! கிருஷ்ணர், சிவனை மனசுக்குள்ளே தரிசிச்ச உணர்வு. அடுத்த வாக்கியம் என்ன கிருஷ்ணவேணிம்மா?”

''ஆயனை வளர்த்தேனோ யசோதையாரைப் போலே”



-தொடர்வாள் பெண்பிள்ளை

முனைவர் பவித்ரா நந்தகுமார்

82204 78043

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us