ADDED : ஜூலை 23, 2026 08:51 AM

நடுத்தரக் குடும்பம் ஒன்றில் ஒரு சிறுவனும், ஒரு சிறுமியும் இருந்தனர். பெற்றோர் அமைதியானவர்கள். ஆனால் குழந்தைகள் எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டபடி இருந்தனர். குழந்தைப் பருவத்திற்கே உரியது என்றெண்ணி பெற்றோர் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் நாளுக்கு நாள் முரட்டு சுபாவம் தீவிரமாகி கொண்டிருந்தது.
பெற்றோர் கவலைப்பட்டனர். எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. இப்படியே விட்டால் வளர்ந்து ஆளானதும் பொறுப்பற்றவர்களாகி விடுவார்களே என வருந்தினர்.
ஆடிவெள்ளியான அன்று ஊரிலுள்ள மாரியம்மன் கோயிலுக்கு சென்றாள் அம்மா. ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா... நாங்க எண்ணி வந்த வரம் அனைத்தும் தாரும் அம்மா என்ற பாடல் கேட்டு மகிழ்ந்தாள். அங்கு கோயில் வாசலில் இருக்கும் துறவி ஒருவர் பக்தர்களின் பிரச்னைக்கு தீர்வு சொல்வதாக கேள்விப் பட்டாள். அன்று மாலையில் கணவருடன் போய் துறவியை சந்தித்தாள். பிரச்னையை கேட்ட துறவி அவர்களுக்கு மந்திரம் ஒன்றைக் கற்றுக் கொடுத்தார். அதன் பின் குழந்தைகள் ஒற்றுமையுடன் செயல்பட ஆரம்பித்தனர். அப்படி என்ன மந்திரம் அது? அது தான் கடுகு, கம்பு மந்திரம்.
சிறுவர்கள் தங்களுக்குள் சண்டையிடும் போதெல்லாம் அடுப்படிக்கு ஓடுவாள் அம்மா. ஒரு கையில் கடுகையும், ஒரு கையில் கம்பு தானியத்தையும் கலந்து கொள்வாள். சண்டைக்குத் தயாராகும் குழந்தைகளிடம், ''என் கண்ணுகளா! இந்த கடுகு, கம்பை பிரித்துக் கொடுப்பவருக்கு பரிசு தருவேன்'' என்பார். அவ்வளவு தான்... சண்டையை விட்டு பரிசுக்காக தானியத்தை பிரிக்கும் பணியில் ஆர்வமுடன் ஈடுபட ஆரம்பித்தனர். நாளடைவில் சண்டையிடும் பழக்கம் மறைந்தது.
அவர்களின் மனம் மாறியது எப்படி? மாயாஜாலம் ஏதுமில்லை. மனதை திசை திருப்பும் வழிதான் இது. சண்டையிடும் எண்ணத்தை கைவிட்டு புதிய விஷயத்தில் மனம் ஈடுபட ஆரம்பித்து விட்டது. எதிர்மறை எண்ணங்களை சுமந்து கொண்டிருந்தால் மனம் அதிலேயே ஈடுபடும்.
வேண்டாத எண்ணத்தை கைவிட்டால் நேர்மறை எண்ணங்கள் மனதை வழி நடத்தும். அதுவே மகிழ்ச்சிக்கான மந்திரம்.
