தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி - 26

பச்சைப்புடவைக்காரி - 26

பச்சைப்புடவைக்காரி - 26


ADDED : அக் 08, 2026 01:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2026 01:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பெனும் அருமருந்து

அன்று அலுவலகத்திலிருந்து நான் கிளம்பிய போது இரவு மணி 10:30. ஒரு இளம் பெண் எதிரில் உணவு பொட்டலத்துடன் வந்தாள். ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்கிறாள் போலும்.

என்னிடம், “நான் நேஹா. வயது 20. படிக்க காசு இல்ல. நான் மட்டும் காலமெல்லாம் கஷ்டப்படணும்னு பச்சைப்புடவைக்காரி விதிச்சிட்டாளே, ஏன் சார்?

“அப்பா இல்ல. அம்மாதான் கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க. ப்ளஸ் டூ முடிச்சேன். இன்ஜினியரிங் காலேஜ்ல இடம் கெடைச்சது. பீஸ் கட்டறதுக்குள்ள அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாங்க. நான் இந்த வேலைக்கு வந்துட்டேன். எங்கம்மா பச்சைப் புடவைக்காரியோட பக்தை. அப்படியிருந்தும் அவ ஏன் கருணை காட்டல? ராத்திரி பத்தரை மணிக்கு ஒரு 65 வயசு அம்மாவுக்கு பாதாம் அல்வா கொடுக்கறதுக்காக 10 கி.மீ., டூவீலர்ல வந்திருக்கேன். என்ன கொடுமை சார், இது?”

“நேஹா, நாளை மதியம் மூணு மணிக்கு என்னைப் பார்க்க வர்றியா?”

அவள் சென்ற பிறகும் அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.

மறு நாள் காலை சீக்கிரமே விழிப்பு வந்தது. நடைப்பயிற்சி சென்ற போது ஒரு கோயில் சுவரில் தத்ரூபமாக வரையப்பட்ட பச்சைப் புடவைக்காரியின் படத்தைப் பார்த்து நின்றேன். என் கண்கள் நிறைந்துவிட்டன.

நேஹாவிடம் என்ன சொல்வது? படுவேகமாக வந்த ஒரு கார் அருகில் நின்றது.

காரிலிருந்து இறங்கியவள், “என்ன இந்த படத்தின் அழகில் மயங்கி விட்டாயோ?”

“உங்கள் அன்பில் மயங்கிவிட்டேன்”

“நேஹாவிற்கு என்ன சொல்லப் போகிறாய்”

“எனக்கு எதுவும் புரியவில்லை.”

“நான் தோற்றுவிக்கும் வார்த்தைகளை அவளிடம் சொல்.”

“ஏன் பொறுப்பு இல்லாமல் பேசுகிறீர்கள்?”

“மருந்தைச் சாப்பிடு என்று தான் மருத்துவர் சொல்வார். நோயாளி சாப்பிட்டால் தானே குணமாகும்”

பச்சைப்புடவைக்காரி மறைந்துவிட்டாள்.

சரியாக மூன்று மணிக்கு நேஹா வந்தாள். “நேஹா, என்ன நடக்கப் போகுதுன்னு தெரியல. ஏதோ ஒரு சக்தி உன்னை வளர விடாம அமுக்கிக்கிட்டு இருக்கு. உன் மனசுல நிறைய அன்பு இருக்கணும். உன்னை பலர் காயப்படுத்தலாம். அவங்ககிட்டயும் நீ அன்பு காட்டணும். ஏதாவது ஒரு வழி தெரியும்னுதான் தோணுது”

“ஏன் சார் இப்படி வழவழன்னு பேசறீங்க?”

வசனம் என்னுடையது அல்ல. அந்த ஈஸ்வரியோடது. அதைக் கூட்டவோ குறைக்கவோ முடியாதே!

மறுநாள் நடைப்பயிற்சியின் போது கோயில் சுவரில் இருந்த பச்சைப் புடவைக்காரி முன் கண்ணீர் மல்க நின்றிருந்தேன்.

ஒரு பெண், கோயிலைக் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் கையில் துடைப்பத்துடன் வந்தாள்.

“உனக்கே நம்பிக்கை இல்லையே! அவளுக்கு எப்படி வரும்”

“பொதுவாக ஆறுதல் சொல்லியிருக்கிறீர்கள். இன்னும் குறிப்பாக... இப்படித்தான் நடக்கும் எனச் சொன்னால்...''

“சொன்னால் அந்தப் பெண்ணிற்கு நம்பிக்கை வந்து விடும். அகங்காரம் ஏற்படும். அகங்காரம் வந்தால் அன்பு ஏற்படாது. அதனால்தான் உன்னைப் பிடி கொடுக்காமல் பேச வைத்தேன்”

“என்ன நடக்கும், தாயே?” சொல்ல தொடங்கினாள்.

பத்து நாள் கழித்து... இரவு 10:30 மணிக்கு நேஹா எங்கள் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தாள். ஒரு முதியவளுக்குச் சாப்பாட்டுப் பொட்டலங்களை டெலிவரி செய்தாள்.

“ஒரு நிமிஷம் இரு”

நேஹா அங்கேயே நின்றாள்.

முதியவள் உணவைச் சாப்பிட்டுப் பார்த்தாள். அடுத்த கணம் அந்த உணவுப் பொட்டலத்தை நேஹாவின் முகத்தில் வீசி எறிந்தாள். அதில் இருந்த உணவு நேஹாவின் முகத்தில் பட்டு வழிந்தது. நேஹா வீறிட்டாள். அங்கு கூடிய அக்கம் பக்கத்தினர் எல்லோரும் முதியவளைத் திட்டினர். பக்கத்து வீட்டு பெண் நேஹாவைக் கையைப் பிடித்துத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அங்கு நேஹா முகத்தைக் கழுவிக் கொண்டாள்.

“வேற ஏதாவது வேணுமாம்மா?”அன்புடன் கேட்டாள் அந்தப் பெண்.

“அந்தம்மா சாப்பாட்ட என் மேல விட்டெறிஞ்சிட்டாங்க. இனிமே ஆர்டர் பண்ணி வர நேரமாயிரும். பாவம் அவங்க வயசுக்கு சுகரோ, பிரஷரோ இருந்தா சாப்பிடாம இருக்கறது பெரிய பிரச்னையாயிரும். எதுனாச்சும் இருக்கா?”

அந்தப் பெண் அசந்து போனாள்.

“உன் மூஞ்சில சாப்பாட விட்டெறிஞ்சவளுக்காக நீ ஏம்மா பிச்சை எடுக்கற?”

“அவங்களுக்கு என்ன கஷ்டமோ...”

அந்தப் பெண் சாம்பார் சாதமும் வாழைக்காய்ப் பொரியலும் கொடுத்தாள். அவளும் கூடவே நேஹாவுடன் போனாள்.

நேஹா ஒன்றும் பேசாமல் அந்தச் சாப்பாட்டை முதியவளிடம் நீட்டினாள்.

“சாப்பாட்டை கொட்டிட்டீங்க. இனி ஆர்டர் பண்ண முடியாது. அதான்...''

அந்த முதியவள் பெருங்குரலெடுத்து அழுதாள். நேஹாவிடம் நள்ளிரவு வரை பேசிக் கொண்டிருந்தாள்.

அங்கேயே படுத்து விட்டு காலையில் கிளம்பினாள் நேஹா.

மூன்று மாதம் கடந்தது.

நேஹாவின் அலைபேசிக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

“நான் வக்கீல் பாஸ்கர் பேசறேன். உங்க பேரு மிஸ் நேஹா தானே”

“ஆமாம்”

அவளைப் பற்றிய விவரங்களை கேட்டு உறுதி செய்து கொண்டார் பாஸ்கர்.

“மரகதம்மாள்ங்கறவங்க ஒரு வாரத்துக்கு முன்னால இறந்துட்டாங்க. அவங்க பேங்க் அக்கவுண்டுல இருந்த இருபது லட்சம் ரூபாயை உங்க பேருக்கு உயில் எழுதி வச்சிருக்காங்க. நாளைக்குச் சாயங்காலம் எங்க ஆபீசுக்கு வந்தீங்கன்னா...''

அதற்கு மேல் வழக்கறிஞர் சொன்னது எதுவும் நேஹாவின் காதில் விழவில்லை.

வேரறுந்த மரமாக பச்சைப் புடவைக்காரியின் காலில் விழுந்தேன்.

“நேஹா படிப்பாள். பெரிய வேலையில் சேர்வாள். நன்றாக வாழ்வாள். உனக்கு என்னப்பா வேண்டும்?”

“என்னை எத்தனையோ பேர் துன்புறுத்தியிருக்கிறார்கள். அவர்கள் துன்பப்படவேண்டும் என சபித்திருக்கிறேன். என் சாபம் பலிக்கக் கூடாது. அவர்கள் நல்லபடியாக வாழ வேண்டும்”

“அதற்காக நீ என்னிடம் எப்படி பிரார்த்தனை செய்யப் போகிறாய்?”

“அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்”

கையில் இருந்த துடைப்பத்தால் என் தலையில் தட்டி விட்டு மறைந்தாள் பச்சைப்புடவைக்காரி. -தாயின் அன்பு தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us