தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பெண்பிள்ளை ரகசியம் - 40

பெண்பிள்ளை ரகசியம் - 40

பெண்பிள்ளை ரகசியம் - 40


ADDED : நவ 20, 2026 08:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 08:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வசிஷ்டரைப் போலே

''என்ன அமிர்தம் இவ்வளவு தாமதமா வந்து இருக்கீங்க. திடீர் வேலை வந்துடுச்சா?”

“இல்ல கிருஷ்ணவேணிம்மா, நீங்க திருக்கோளூர் போக கூப்பிட்டீங்களே... பையன் கிட்ட அதை பேசிட்டு இருந்தேன்”

“நான் தான் தம்பிட்ட பார்த்துக்கிறேன்னு சொன்னேனே. இன்னுமா பயம்”

“போக சொல்லிட்டான். அவன் தலையாட்டவே இத்தனை நேரம் காத்துட்டு இருந்தேன்.”

“அனுப்பு என வசிஷ்டர் சொன்ன பிறகும் தசரதனுக்கு இருந்த தயக்கம் போல தம்பிக்கும் இருக்கும் தானே” என கேட்டார் கிருஷ்ணவேணி.

“பெண் பிள்ளை ரகசியத்துக்குள்ள வசிஷ்டரும் வர்றாரா?” என ஆர்வமானார் அமிர்தம்.

''ஆமா, இந்த வாக்கியத்துக்குள்ள வர்றார். பெண் பிள்ளை 39வது ரகசியமா 'அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே' என ராமானுஜரிடம் சொல்றா இல்லையா…

வசிஷ்டர் யாரை அனுப்பி வைத்தார் தெரியுமா? ராமனைத் தான். அயோத்தியை தசரதர் ஆண்டு வந்தது நமக்கு தெரியும். தசரதனுக்கு குழந்தைப் பேறு மட்டும் இல்லை. குலகுரு வசிஷ்டர் புத்ர காமேஷ்டி யாகம் செய்யச் சொல்ல அதை நடத்தினார் தசரதர். அதன் பலனாக ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன் பிறந்தனர். ராமன் என்றால் மகிழ்ச்சி தருபவன். லட்சுமணன் - அடையாளம், பரதன் - நாடாளப் போகிறவன், சத்ருக்னன் - எதிரியை வெல்பவன் என்பது பொருள். இங்கே லட்சுமணனுக்கு அடையாளம் எது தெரியுமா? அவன் ராமனின் தொண்டன். அதுவே அவனது அடையாளம்.

இப்போது ராஜகுமாரர் நால்வரும் வளர்ந்து இளமை பருவத்தை அடைந்தனர். ஒரு நாள் விஸ்வாமித்திரர் அயோத்திக்கு வருகை புரிந்தார். வரவேற்ற தசரதன், 'தங்களின் நோக்கத்தை நிச்சயம் நிறைவேற்றுகிறேன்' என வாக்குறுதி அளித்தான். 'நான் செய்யும் யாகத்தை அரக்கர்கள் தடுக்கிறார்கள். அவர்களை அழித்து யாகத்தைக் காக்க உன் மகன் ராமனை அனுப்பி வை. அதற்காகவே இங்கு வந்தேன்' என்றார். தசரதனுக்கு அதிர்ச்சி. அவனை எப்படி அனுப்புவான்? ராமன் சிறுவன். நான் வேண்டுமானால் படையுடன் வந்து யாகத்தை காக்கிறேன்' என்றான். விஸ்வாமித்திரருக்கு கோபம் வந்தது.

வசிஷ்டர், 'வாக்கு கொடுக்கும் முன் யோசிக்க வேண்டும் தசரதா! நீ செய்த தானம், தர்மம், யாகம் எல்லாம் கொடுத்த வாக்கை காப்பாற்றா விட்டால் பலன் தராது. அதனால் ராமனை விஸ்வாமித்திரருடன் அனுப்பு. வேண்டுமானால் லட்சுமணனையும் அனுப்பி வைக்கலாம் என யோசனை சொன்னார்.

மனித நிலையில் நின்று கொண்டு மாயம் செய்யும் அரக்கர்களோடு மோதவும், இலங்கை மன்னர் ராவணனை வெல்லும் ஆற்றலை சாமானிய மனித வடிவில் தோன்றியுள்ள ராமனுக்கு கொடுக்கவே விஸ்வாமித்திர முனிவர் வந்துள்ளார். மிதிலையில் வாழும் சீதையை ராமனிடம் உரிய காலத்தில் சேர்க்கவும் வந்திருக்கிறார். ராமனது அவதார நோக்கம் ஈடேற வேண்டும் என்ற நோக்கத்தில் விஸ்வாமித்திரர் வந்திருக்கிறார் என வசிஷ்டர் யூகித்து, 'ராமனை அனுப்பி வையும்' என நம்பிக்கை அளித்தார். தசரதனும் மனதை கல்லாக்கிக் கொண்டு அனுப்பி வைத்தார்.

ராமன் விஸ்வாமித்திரருடன் செல்வது பின்னாளில் காட்டுக்குச் செல்லும் போது துணையாக அமையும். அதே போல ராமன் காட்டில் அரக்கரை அழித்தான்; அகலிகை சாபம் நீங்கப் பெற்றாள். அதோடு சுயம்வரத்தில் சீதையை திருமணம் செய்தான். ராமனின் அவதார நோக்கம் நிறைவேற அவன் விஸ்வாமித்திரருடன் செல்வது தான் சரி என யூகித்து செயல்பட்டார் வசிஷ்டர். அதனாலேயே தசரதனிடம் உரிமையாக 'ராமனை அனுப்பி வையும்' எனக் கூறினார். அப்படி வசிஷ்டரை போல நற்செயல்கள் செய்யத் துணிந்தேனா? இல்லையே சுவாமி. அதனாலேயே இந்த திருக்கோளூரை விட்டு போகிறேன் என்றாள் பெண்பிள்ளை” என நிறுத்தினார் கிருஷ்ணவேணி.

“வசிஷ்டரை பற்றி கேட்டதும் முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் மீட்டது தான் என் நினைவுக்கு வருது”

“சொல்லுங்க” என சிரித்தார் கிருஷ்ணவேணி.

“ஒரு சமயம் சுந்தரர் திருப்புக்கொளியூர் என்ற அவிநாசியை அடைந்தார். அங்கே வேதியர்கள் அவரை வரவேற்றனர். செல்லும் வழியில் எதிர் எதிராக இருந்த வீடுகளில் ஒரு வீட்டில் இருந்து மங்கள வாத்தியம் முழங்கியது. அதற்கு எதிர் வீட்டில் அழுகுரல் கேட்டது. சுந்தரர் மனம் வருந்தியது. ஏன் அழுகுரல் கேட்கிறது என விசாரித்தார். அதற்கு ஒருவர் பதில் சொன்னார். இந்த இரண்டு வீட்டின் சிறுவர்களும் மூன்று ஆண்டுக்கு முன் குளத்தில் குளித்தனர். அதில் ஒருவனை முதலை இழுத்துக் கொண்டு போய் விட்டது.

குளத்துக்குச் சென்ற இன்னொருவன் வீடு வந்து சேர்ந்தான். அவனுக்கு இன்று பூணுால் சடங்கு நடக்கிறது. அதனால் மங்கள வாத்தியம் ஒலிக்கிறது. மாறாக எதிர் வீட்டில் குழந்தையை பறி கொடுத்ததால் பெற்றோர் அழுகின்றனர். இதைக் கேட்ட சுந்தரரின் மனம் உருகியது. ஆறுதல் சொல்ல சென்ற சுந்தரரிடம் அவர்கள்'' எங்கள் மகன் இந்நேரம் இருந்தால் அவனுக்கு பூணுால் சடங்கை செய்திருப்போமே' என அழுதனர்.

சிவபெருமானின் துாதராக என்னை ஏற்று பாதம் தொட்டு வணங்கிய இவர்களின் துன்பத்தை போக்காமல் அவிநாசி அப்பரை தரிசிக்க மாட்டேன் என சபதம் எடுத்துக் கொண்டார் சுந்தரர். குளத்திற்கு புறப்பட்டார். 'எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே' எனத் தொடங்கும் பதிகத்தை பாடத் தொடங்கினார்.

எல்லாம் வல்ல அந்த சிவபெருமானை நினைத்து பதிகம் பாடும்போது அந்தச் சிறுவனை விழுங்கிய முதலையை மட்டும் குறிப்பிடாமல் சிறுவனின் உயிரை எடுத்துக் கொண்ட எமனையும் பணிந்து கேட்பது போல பதிகத்தை பாடி முடித்தார். 'என்ன ஆச்சரியம்! நான்காம் பாடலை பாடியதும் எமன் சிறுவனுக்கு உயிர் தந்து அவன் உடலை மீண்டும் முதலைக்குள் செலுத்தினார். அந்த முதலை என்ன செய்தது தெரியுமா? அது மீண்டும் கரைக்கு வந்து மூன்று ஆண்டுக்கு முன் விழுங்கிய சிறுவனை தற்போது உயிரோடும் மூன்றாண்டு வளர்ச்சி பெற்ற உடலோடும் உமிழ்ந்தது. முதலையிடம் இருந்து மீண்டு வந்த சிறுவனுக்கு பூணுால் சடங்கை சுந்தரரே முன் நின்று நடத்தினார். சிவனின் கருணையையும் சுந்தரரின் பக்தியையும் நினைத்து அனைவரும் மெய் சிலிர்த்தனர்” என முடித்தார் அமிர்தம்.

''விஸ்வாமித்திரரிடம் ராமனை அனுப்பி வையும் என நம்பிக்கை கொடுத்து தசரதரின் மனதில் பாலை வார்த்தது போல முதலை விழுங்கிய பிள்ளையை மீட்டுக் கொடுத்து அந்த சிறுவனின் பெற்றோரின் வயிற்றில் அமிர்தத்தை வார்த்தார் சுந்தர.” என நெகிழ்ந்த கிருஷ்ணவேணி “அப்போ இந்த சனிக்கிழமையே தக்கல்ல ரயில் டிக்கெட் பதிவு பண்ணி வந்தே பாரத்ல திருநெல்வேலி போறோம். காலையில எழுந்து நவதிருப்பதி தரிசனம் செய்றோம். திருக்கோளூரும் நவதிருப்பதியில் அடக்கம் தான். அப்புறம் நெல்லையப்பர் தரிசனம் முடிக்கிறோம். நவதிருப்பதி கோயில்களில் இருந்து திருச்செந்துாருக்கு செல்ல 40 நிமிஷம் தான். உடம்புல தெம்பு இருந்தா அங்கேயும் போகலாம்”

“ அடுத்த வாக்கியம் உண்டா?”

“ஏன் இல்லாம! அதான் ரயில்ல போக போறோமே, அப்ப சொல்றேன். 40வது வாக்கியம் அடி வாங்கினேனோ கொங்கு பிராட்டியைப் போலே''

“அட வாக்கியமே சுவாரஸ்யமா இருக்கே!”

“அதோட பொருள் அதை விட சுவாரஸ்யம்” என்றார்.

- அடுத்த வாரம் முற்றும் பெண்பிள்ளை

முனைவர் பவித்ரா நந்தகுமார்

82204 78043

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us