ADDED : நவ 20, 2026 08:32 AM

ஒரு கிராமத்தில் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவரது வீட்டில் தங்கத்தால் ஆன விளக்கு ஒன்று இருந்தது. ஆனால் அவருடைய மனம் முழுவதும் ஆணவத்தால் இருட்டாக இருந்தது. அதே ஊரில் ஏழைப்பெண் ஒருத்தி இருந்தாள். அவளிடம் மண் அகல் விளக்கு மட்டும் இருந்தது, ஆனால் நல்ல எண்ணத்தால் அவளின் மனம் முழுவதும் ஒளியுடன் இருந்தது.
திருக்கார்த்திகை நாள் வந்தது. பணக்காரர் மாளிகை எங்கும் நெய் விளக்குகள் ஏற்றினார். 'ஊரிலேயே பெரிய தங்க விளக்கு என் வீட்டில் தான் உள்ளது' என இறுமாப்புடன் விளக்கு ஏற்றினார். ஏழை பெண்ணோ குடிசை வீட்டில் ஒரு மண் விளக்கில், நல்ல எண்ணெய்யை ஊற்றி, ''முருகா, இந்த ஒளி மக்களின் மன இருளை போக வேண்டும். ஊரிலுள்ள மக்கள் எல்லாம் நலமாக வாழ வேண்டும்'' என பக்தியுடன் ஏற்றினாள்.
அப்போது காற்று வேகமாக வீசியது. பணக்காரரின் மாளிகை விளக்குகள் எல்லாம் காற்றில் அணைந்தன. ஆனால் குடிசையில் ஏற்றிய மண் விளக்கு மட்டும் அணையவில்லை. அதை கைகளால் அணைத்தபடி முருகப்பெருமானை வணங்கினாள். அந்த விளக்கு நீண்ட நேரம் எரிந்தது.
இதையறிந்த பணக்காரர், ''உன் வீட்டு மண் அகல் மட்டும் அணையாமல் இருந்ததே எப்படி'' என அந்த பெண்ணிடம் கேட்டார். ''விளக்கு தங்கமாக இருப்பது முக்கியம் இல்லை. நம் மனசு தான் முக்கியம். ஆணவத்தால் ஏற்றியதால் விளக்கு அணைந்தது. அனைவரும் நலமாக வாழ வேண்டும் என அன்பால் ஏற்றிய விளக்கு முருகப்பெருமானின் அருளால் அணையவில்லை'' என்றாள்.
மனதிற்குள் அன்பு விளக்கை ஏற்றுங்கள். ஒருபோதும் அணையாது.
