ADDED : நவ 20, 2026 08:33 AM

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றின. அந்த தீயை தாங்க முடியாமல் அக்னி தேவன், கங்கையிடம் கொடுத்தான். கங்கையும் தாங்க முடியாமல் சரவணப் பொய்கையில் விட்டாள். அந்த பொய்கையில் ஆறு தாமரை பூக்களில் ஆறு குழந்தைகளாக மாறின.
வானத்தில் இருந்து ஆறு கார்த்திகை பெண்கள் அக்குழந்தைகளைக் கண்டு இறங்கி வந்தனர்.
''இந்த குழந்தைகளுக்கு வளர்க்கும் பாக்கியம் கிடைக்குமா?'' என்று சிவபெருமானிடம் கேட்டனர். அவரும், ''நீங்கள் தான் இவர்களை வளர்க்க பிறந்தவர்கள்'' என வாழ்த்தினார். ஆறு பெண்களும் ஆறு குழந்தைகளுக்கும் பாலுாட்டி சீராட்டி வளர்த்தனர்.
ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு தாயின் முகத்தை பார்த்து சிரித்தது.
ஆனால் குழந்தைகள் வளர்ந்து சிறுவர்களான பின் பார்வதி அவர்களை அழைத்து செல்ல வந்தாள்.
கார்த்திகை பெண்கள் ஆறு பேரும், 'பாசம் வைத்து வளர்த்தோம்; இப்போது பிரிய போகிறோமே' என கண்ணீர் விட்டனர்.
''அன்பு தாய்மார்களே... அழாதீர்கள். நீங்கள் என்னை வளர்த்ததால், இனி உங்கள் பெயரால் 'கார்த்திகேயன்' என நான் அழைக்கப்படுவேன். கார்த்திகை நட்சத்திரத்தன்று என்னை வழிபடுவோருக்கு விரும்பிய வரம் அளிப்பேன்'' என்றார். திருக்கார்த்திகை அன்று நாம் ஏற்றும் விளக்கு, முருகனின் மீது கார்த்திகை பெண்கள் கொண்ட
அன்பின் அடையாளம்.
பெற்றோர் காட்டும் அன்பை விட வளர்த்தவர்களின் அன்பு பெரியது. அதற்காகவே கார்த்திகை நாளில் விளக்கேற்றி முருகனை வழிபடுகிறோம்.
