ADDED : ஜூன் 20, 2025 08:23 AM

தீரர் சத்தியமூர்த்தி
இன்று மரக்கன்று நடுகிறோம். அது வளர்ந்து தரும் பலன்களை நம்மால் நுகர முடியாவிட்டாலும், நம் சந்ததி அனுபவிக்கும் சந்தோஷத்தை முன்னிறுத்தியே அச்செயலை மேற்கொள்கிறோம். இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளில் பலர் இப்படித்தான், விடுதலைக்காகப் போராடி, அவ்வாறு சுதந்திரம் கிடைத்ததை அனுபவிக்க முடியாவிட்டாலும், தமக்கு அடுத்தடுத்த தலைமுறையினர் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற பரந்த மனதோடு வாழ்ந்தவர்கள்.
சுதந்திரத்திற்குப் பிறகும், மக்களை வழிநடத்தும் அரசியல்ரீதியான பொறுப்பேற்ற பல பெரியவர்கள், மக்கள் நலனுக்காகப் பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினர். ஆனால் அந்தத் திட்டம் நிறைவேறும் முன்னரே அதன் பலனை மக்கள் அனுபவிப்பதை நிறைவாகக் காணும் முன்னரே மறைந்தனர்.
இத்தகையவர்களில் ஒருவர், தீரர் சத்தியமூர்த்தி. சென்னை மக்களின் தாகம் தீர்க்க இவர் திட்டத்தை முன்மொழிந்து அதை செயல்படுத்தினாலும், அதன் பலனைக் காண அவருக்கு கொடுத்து வைக்கவில்லை. ஆமாம்,
இன்றளவும் சென்னை நீர்த்தேவையை 'சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்' நிறைவேற்றுகிறது. ஆனால் துரதிருஷ்டம் என்னவென்றால், மக்கள் அனுபவிக்கும் இந்தப் பலனை அவர் காணாதது மட்டுமல்ல; இந்த ஏரியைப் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் போதெல்லாம் 'பூண்டி ஏரி' என்றே குறிப்பிடப்படுகிறதே தவிர, 'சத்தியமூர்த்தி ஏரி' என சொல்வதில்லை என்ற வேதனையும்தான்! ஏரிப் பகுதியில் 'சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்' என எழுதி வைக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான்.
தீரர் சத்தியமூர்த்தி, தஞ்சை மாவட்டம் செம்மனாம்பொட்டல் கிராமத்தில் 1887ல் ஆக.19ல் பிறந்தார். பெற்றோர் சுந்தர சாஸ்திரி, சுப்புலட்சுமி அம்மாள். இள வயதிலேயே தந்தையை இழந்த இவர் தாயார், எட்டு சகோதரர்களையும் ஆதரிக்கும் பாசமிகு குடும்பத் தலைவனாக இருந்தார். தந்தையின் மரணத்துக்கு ஆங்கிலேய நீதிபதி ஒருவரே காரணம் என்ற கொடூரமான உண்மை அவரது நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது. ஆமாம், ஒரு வழக்கில் சுந்தர சாஸ்திரி, நியாயத்துக்கு ஆதரவாக வாதாடினார்.
ஆங்கிலேய நீதிபதி அவரது வாதத்திறமையை கண்டு பொறாமை கொண்டார். அதனால் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வாதாடினார் என பொய்க்குற்றம் சாட்டி, வக்கீல் தொழிலை செய்ய முடியாதபடி தடை செய்தார். அதனால் வருமானம் இழந்த சுந்தர சாஸ்திரி உடல் நலம் குன்றி மரணமடைந்தார். வேறு வழியின்றி சத்தியமூர்த்தியின் தாய் சுப்புலட்சுமி அவ்வப்போது கிடைக்கும் சிறுசிறு பணிகளால் ஈட்டிய பணத்தால் சிரமத்துடன் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினார்.
தந்தையார் மரணம், தாயின் வேதனை எல்லாம் சத்திய மூர்த்தியின் மனதை முள்ளாக தைத்தன. இதற்கெல்லாம் மூலகாரணம் ஆங்கிலேய ஆட்சிதானே, அதை எப்படியாவது வேரறுக்க வேண்டும் என கங்கணம் கட்டினார். அதனால் படிப்பில் தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டார். உயர் படிப்புக்கு வசதி இல்லாத நிலையில், இவரது கல்வித் திறத்தைக் கண்டு வியந்த புதுக்கோட்டை மகாராஜா கல்லுாரியின் முன்னாள் முதல்வர் எஸ். நாராயணஸ்வாமி ஐயர் உதவினார்.
சட்டப்படிப்பை முடித்த சத்தியமூர்த்தி, ஆங்கிலேயருக்கு எதிராக சென்னையில் விபின் சந்திரபால் (1907) முழங்கிய வீரச் சொற்களைக் கேட்டு, தன்னை விடுதலை வேள்வியில் ஈடுபடுத்திக் கொண்டார். வழக்கறிஞர் பணியிலும் சிறந்து விளங்கினார்.
1918ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், முதல் உலகப் போரில் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இந்தியர்கள் பணியாற்ற வேண்டும் என்ற 'மாண்டேகு' சட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என அன்னிபெசன்ட் அம்மையார் கோரினார். ஆனால் மனோதிடம் கொண்ட சத்தியமூர்த்தி அங்கேயே ஏற்புடைய காரணங்களைக் கூறி மறுத்தார். அதை பிற உறுப்பினர்கள் வரவேற்க அந்த தீர்மானம் தோல்வி கண்டது என்பது குறிப்பிடத் தக்கது.
படிக்கும் காலத்திலேயே கல்லுாரி மாணவர் தேர்தலில் வெற்றி பெற்று சக மாணவர்களுக்கு, கல்லுாரி தர வேண்டிய அடிப்படை வசதி, உரிமைகளை ஆங்கிலேய நிர்வாகத்திடம் இருந்து பெற்றுத் தந்தார். எந்த பலனையும் எதிர்பாராமல் குடும்பத்தினருக்குக் குடையாகவும், மாணவ நண்பர்களுக்குப் பந்தலாகவும் சேவை புரிந்ததால் தேசிய அளவிலும், அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள இவரால் முடிந்தது.
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரான எஸ்.ஸ்ரீநிவாச ஐயங்காரிடம் சட்டப் பயிற்சி மேற்கொண்டார். ஆங்கிலேயருக்கு எதிராக நியாயமான முறையில் வாதாடும் வல்லமையும் கைவரப் பெற்றார். இந்த திறமையால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகி தேசிய தலைவர்களின் ஆதரவை பெற்றார். இவருடைய சமயோஜித புத்தியால் ஆங்கிலேயர் இயற்றிய சட்டங்களை எதிர்த்து வாதாடினார். மாண்டேகு சேம்ஸ்போர்டு, ரவுலட் சட்டத்தின் யதேச்ச அதிகார அம்சங்களை எதிர்த்து இணை நாடாளுமன்ற குழுவில் வாதாட இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட காங்கிரஸ் பிரதிநிதி இவருக்கு அப்போது வயது 32.
சென்னை மெரீனா கடற்கரையில் திலகரின் மறைவை முன்னிட்டு அனுதாபக் கூட்டம் நடந்தது. இதற்கு பங்களித்த இருவர் மகாகவி பாரதியாரும், சத்தியமூர்த்தியும். மாநாட்டில் காந்திஜி தலைமை உரையாற்றினார். அந்த ஆங்கில உரையை கொஞ்சம் கூட பொருள் பிசகாமல், தமிழில் மொழிமாற்றம் செய்தார் சத்தியமூர்த்தி. இந்த தமிழ் வடிவத்தை மக்கள் முழுமனதாக ஏற்றதை அவர்களின் மலர்ந்த முகங்களில் இருந்து புரிந்து கொண்ட காந்திஜி, சத்திய மூர்த்தியைப் பெரிதும் பாராட்டினார்.
அடிமைத்தளையை தகர்த்தறியச் செய்யும் பாரதியாரின் பாடல்கள், விடுதலை வேள்வியில் இட்ட நெய்யாக மணம் பரப்பின. 1928ல் இப்பாடல்களுக்கு பர்மாவை (மியான்மர்) ஆண்ட ஆங்கிலேய அரசு தடை விதித்தது. அதைப் பின்பற்றி இந்தியாவிலும் அதே விதியை அமல் செய்தது. பாரதியாரின் புத்தகங்கள் பறி முதல் செய்யப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. அவற்றை விற்பவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தத் தடையை சட்ட பூர்வமாக்க ஒரு மசோதாவை சட்ட மன்றத்தில் முன் வைத்தது ஆங்கிலேய அரசு. இந்த விவாதத்தில் பங்கு கொண்ட சத்தியமூர்த்தி, ''எங்கள் பாரதியின் பாடல்களை நீங்கள் தடை செய்யுங்கள். அவை யாருக்கும் கிடைத்து விடாதபடி தடுத்துக் கொள்ளுங்கள், ஏன் எரிக்கவும் செய்யுங்கள்'' என ஆரம்பித்தார். மன்றமே திகைத்தது. 'நம் சத்தியமூர்த்தியா இப்படிப் பேசுகிறார்?' என காங்கிரஸ் உறுப்பினர்கள் கதிகலங்கினர். சத்தியமூர்த்தி தொடர்ந்தார்: ''உங்களுடைய இந்த முயற்சிகள் எல்லாம் வீண் வேலை. உங்களால் மகாகவியின் பாடல்களை மறைக்கத்தான் முடியும்; புத்தகங்களை அழிக்கத்தான் முடியும். ஆனால் எங்கள் இதயத்திலும், நினைவிலும் நிலைத்திருக்கும் அப்பாடல்களை உங்களால் நெருங்க முடியுமா? எங்களுக்கு மனப்பாடமாக ஆகிவிட்ட அக்கவிதைகளை நாங்கள் தெரு எங்கும் முழக்கம் செய்வோம்.
மகாகவியின் பாடல்களை தெரியாத தமிழர்களே இல்லை என்ற இன்றைய நிலையில், எங்கள் மனதில் இருந்து அவற்றை உங்களால் நீக்கவே முடியாது'' என ஆணித்தரமாக வாதாடினார்.
இந்த உறுதிப்பாட்டை எதிர்பார்க்காத அரசு, பாரதியார் எந்தளவுக்கு தமிழர் நெஞ்சோடு கலந்திருக்கிறார் என்பதை உணர்ந்து தடை செய்யும் மசோதாவைத் தாக்கல் செய்யாமல் நிறுத்தியது. அது மட்டுமல்ல, பறிமுதல் செய்த பாரதியாரின் புத்தகங்கள் அனைத்தையும், திரும்ப உரியவர்களிடம் ஒப்படைத்தது. இந்தச் சம்பவம் பாரதியார் புத்தகங்கள் மேலும் பல்லாயிரம் மக்களைச் சென்றடைய உதவியது.
-அடுத்த வாரம் முற்றும்
பிரபு சங்கர்
72999 68695