ADDED : ஜன 05, 2024 10:47 AM

அங்கதனுக்குக் கிடைத்த அங்கதம்
'நம்பீ' என அழைத்து தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை ராமன் வெளிப்படுத்தினானே! அனுமனுக்கு நிகராக தன்னை நடத்துகிறானே! எத்தகைய பெருமை இது! என அங்கதன் நெகிழ்ந்தான்.
உற்சாகமுடன் புறப்பட்ட அங்கதன் விண்ணில் பறந்தான். ராவணன் அரண்மனைக்குள் புகுந்தான். அவனுடைய வேகம், ஆற்றலைக் கண்டதும் அனுமன் மீண்டும் வந்து விட்டானோ... இன்னும் என்ன துன்பத்தை தரப் போகிறானோ என காவலர்கள் நடுங்கினர்.
அப்போதுதான் தன் படைபலத்தை கணித்து விட்டு தர்பாருக்குத் திரும்பியிருந்தான் ராவணன். அவன் எதிரில் கம்பீரமாக நின்றான் அங்கதன். கண்கள் நெருப்பு உமிழ ராவணன், ''யார் நீ? என்னிடமே மாய வித்தை புரிகிறாயோ?'' எனக் கேட்டான்.
'ராமனின் துாதுவன் நான். அது மட்டுமல்ல... உன்னை வாலில் கட்டி கடல்களில் மூழ்கடித்து மலைக்கு மலை தாவி தன் வலிமையைக் காட்டினானே... அந்த வாலியின் மகன்' என்றான் பெருமையுடன்.
திடுக்கிட்டான் ராவணன். 'வாலியின் மகனா நீ? உலகமே எதிர்த்தாலும் வீறுடன் எழுந்து வெற்றி பெறும் தீரனின் மகனா? அவனுடன் நேருக்கு நேர் போரிட திராணியின்றி மறைந்திருந்து கொன்றவன் ராமன். அப்படி வஞ்சகம் புரிந்தவனுடைய துாதுவன் எனச் சொல்கிறாயே... வெட்கமில்லை?' என கோபமாக கேட்டான்.
கூடவே, 'நீ என்னுடன் சேர்ந்து விடு. உன் தந்தையின் சாம்ராஜ்யமான கிஷ்கிந்தைக்கு அரசனாக்குகிறேன். உன் தந்தையைக் கொன்ற துரோகியுடன் சேராதே. அவரது நண்பனான என்னுடன் சேர்ந்துவிடு. எத்தனை பிறவி எடுத்தாலும் அனுபவிக்க இயலாத எல்லா சுகங்களையும், அதிகாரத்தையும் உனக்களிக்கிறேன்' என ஆசை காட்டினான்.
பெரிதாகச் சிரித்தான் அங்கதன். 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்ற உண்மை என் தந்தையைப் பொறுத்தவரை சரியாகி விட்டது. அதனால்தான் இறக்கும் போது தன்னைக் கொன்ற ராமனிடம என்னை ஒப்படைத்தார். என் தந்தையின் ஆற்றலைக் கண்ட நீ தான் அவரிடம் நட்பு ஒப்பந்தம் வைத்தாயே தவிர, அவர் அதை ஏற்கவில்லை. அவரது பார்வையில் நீ பதர். ஒப்பந்தம் செய்ய அருகதை இல்லாதவன். ஆகவே நினைப்பை விட்டொழித்து இக்கணமே சீதையை ஒப்படைத்து விட்டு உயிர் பிழைத்துக் கொள்' என பதிலளித்தான்.
அதைக் கேட்ட ராவணன் திடுக்கிட்டான்.
'உன் பாட்டி தாடகையை ராமன் வதைத்தாரே, அப்போது எதிர்த்தாயா? அல்லது விஸ்வாமித்திரர் யாகத்தைக் குலைக்க வந்த சுபாகுவைக் கொன்ற போது வந்தாயா? உன் தம்பியரான கரன், திரிசரன் இருவரையும் அழித்தபோது உனக்கு சுரணை இல்லாமல் போனதா? உன் தங்கை சூர்ப்பனகையின் மூக்கு, காதுகளை அறுத்த போது கூட ராமன், லட்சுமணனுடன் போரிடவில்லையே... சீதையைக் கவர்வதில் ஆர்வம் காட்டிய பெண்பித்தன் தானே நீ? உன் மகன் அக்க குமாரனை காலுக்கடியில் இட்டுத் தேய்த்து மாய்த்தானே அனுமன், அப்போது எங்கே சென்றிருந்தாய்? உன் தம்பி விபீஷணனுக்கு, ராமன் இலங்கை மன்னனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தாரே, அச்செய்தி உன்னை எட்டவில்லையா? பெருங்கடலில் வீதி அமைத்து உன்னை நெருங்கியபோது எங்களைத் தடுக்க வேண்டும் என தோன்றவேயில்லையா? இலங்கையின் மதில் மீது தாவி, உன்னைத் தாக்கி மணிமகுடத்தை சுக்ரீவன் பறித்தானே அப்போது திகைத்து நின்றாயே?' என கேள்விக்கணைகளால் ராவணனைத் திணறடித்தான் அங்கதன்.
ராமன் சொன்னது என்னவோ ஒரு வாக்கியம்தான்... 'தேவியை விடுக அல்லது ஆவியை விடுக' எனச் சொல்லி வருமாறுதான் அங்கதனை அனுப்பினான். ஆனால் அவனோ ராமனின் பேராண்மையை வலியுறுத்தும் விதமாக அதேசமயம் ராவணனின் அற்ப சிந்தனையை கேலி செய்யும் வகையிலும் பேசினான்.
கடுங்கோபமுடன், 'குத்திக் கொல்லுங்கள் இந்த வானரத்தை' என ராவணன் ஆணையிட்டான். உடனே அங்கு வந்த நான்கு அரக்கர்களை அப்படியே அப்பளமாய் நொறுக்கினான் அங்கதன். பிறகு விண்ணில் தாவி ராமனை அடைந்தான். 'ராவணனுக்கு சொந்த புத்தியும் இல்லை; சொல் புத்தியும் இல்லை. சீதை மீது பித்து பிடித்த அவன் கொல்லப்படத் தக்கவன்தான்' என்று துாது சென்ற சம்பவத்தைச் சுருக்கமாகச் சொன்னான்.
'உற்ற போது அவன் உள்ளக் கருத்தெலாம்
கொற்ற வீரன் உணர்த்து என்று கூறலும்
முற்ற ஓதி என் மூர்க்கன் முடித்தலை
அற்றபோது அன்றி ஆசை அறான் என்றான்'
- கம்பர்
'போர்தான் பிணக்கைத் தீர்க்கும் ஒரே வழி' என்றாகிவிட்டது. முதல் நாளன்றே ராமனை எதிர்த்த ராவணன், பரிதாபமாக தோல்வி கண்டு திரும்பினான். தன் தம்பி கும்பகர்ணனை மறுநாள் போருக்கு அனுப்பினான். அவனை அங்கதன் எதிர்கொண்டான். 'வாலியின் மகனான நீ என் அண்ணனுக்கு எதிரானது எப்படி?' என்ற சந்தேகத்தை கும்பகர்ணன் எழுப்பியபோது, 'ஏற்கனவே உன் அண்ணனிடம் பதில் கூறிவிட்டேன், கேட்டுக்கொள்' என அவனைக் குத்தினான் அங்கதன். சுதாரித்துக் கொண்ட கும்பகர்ணன் ஓங்கி அறைய அங்கதன் சுயநினைவின்றி விழுந்தான்.
பிறகு வானரங்கள் அளித்த சிகிச்சையால் நலம் பெற்ற அங்கதன், தன் தோள் மீது லட்சுமணனை அமர்த்திக் கொண்டு (அனுமன் ராமனுக்குச் செய்தது போல) போரிட வழிசெய்தான். அதிகாயன் என்ற அரக்கனை லட்சுமணன் அழிக்க அங்கதன் உதவினான். தனிப்பட்ட முறையிலும் நராந்தகன் முதலான அரக்கர்களைக் கொன்று ராமனின் வெற்றிக்கு வழிவகுத்தான். அது மட்டுமல்ல, லட்சுமணனும், இந்திரஜித்தும் போரிட்ட போது அங்கதன் ஒரு மரத்தைப் பிடுங்கி எறிய அது இந்திரஜித்தின் தேரை தவிடு பொடியாக்கியது. சற்றே சவாலாகத் தெரிந்த மாபெரும்பக்கன் என்ற அரக்கனை இரண்டாகப் பிளந்தான் அங்கதன்.
இந்திரஜித் மீது பிறைவாளி எறிந்து அவனது தலையைக் கொய்தான் லட்சுமணன். உடனே அந்தத் தலையுடன் சென்ற லட்சுமணனை பின்தொடர, ராமன் பாதத்தில் அதை சமர்ப்பித்தான் அங்கதன்.
ஒரு கட்டத்தில் வன்னி என்ற அரக்கனின் தலைமையில் போரிட வந்த வீரர்களைக் கண்டு மனம் பேதலித்த வானரர்களை, அங்கதன் நேர்வழிப்படுத்தினான். 'ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, எனக்கு போர் வேண்டாம்' என பயந்து ஒடுங்கியவர்களிடம், ராமனின் மேன்மையை விளக்கி பயத்தை போக்கினான். 'எத்தனை கோடி அரக்கர் வரினும், ராமனின் அறம் ஒன்றே வெல்லும்' என தைரியமூட்டினான்.
அயோத்தி மன்னராக முடிசூடிய பிறகு அங்கதனின் சேவையை பாராட்டி உடைவாள், அங்கதம் என்னும் தோள்வளையை பரிசளித்தான் ராமன்.
ராமனின் முன்னோர்களான இக்ஷ்வாகு குலத்திற்கு பிரம்மன் அளித்த பொக்கிஷம் இந்த தோள்வளை. அங்கதம் என்னும் தோள்வளையே சிறந்த பரிசு என தேர்ந்தெடுத்துக் கொடுத்த ராமனின் கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் விட்டான் அங்கதன்.
அங்கதன் என்றால் 'குற்றமற்றவன்' என பொருள்.
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695