ADDED : ஜன 05, 2024 10:50 AM

தரிசனம் அளித்த மகாகாளி
மச்சநாட்டு அரசனான விராடனை சந்திக்க சென்ற பாண்டவர்கள் வன எல்லையில் அருவியை ஒட்டியிருந்த பிரம்மாண்ட காளியின் முன் நின்றனர். காளிதேவியானவள் வன வேடுவர்களால் வணங்கப்படுபவள். அவளது தோற்றம் கரியதாகவும், சிவந்த நாக்குடனும், கபாலமாலையுடனும், வாள், கோடரி, மழு, வில், கதாயுதம், வஜ்ராயுதம் ஏந்திக் கொண்டு காலடியில் மகிஷன் கிடக்க காட்சியளித்தாள்.
காளியின் முன் யாக குண்டம் ஒன்றில் அக்னியானது அவிசுகளோடு புகைந்து கொண்டிருந்தது. பலி பீடத்தில் ரத்தம் உறைந்து காணப்பட்டது. காளியை பாண்டவர்கள் வலம் வந்து வணங்கினர். அப்போது தர்மன், காளி பற்றி பேசினான்.
''சகோதரர்களே! திரவுபதியே! நம் பன்னிருஆண்டு வனவாழ்வு இன்றோடு முடிகிறது. நன்மையும், தீமையும் கலந்த ஒன்றாகவே நம் வனவாழ்வு அமைந்திருந்தது. நாளை முதல் அக்ஞாதவாசம். நாம் திரும்ப வந்து நல்லாட்சி புரிவோம் என அஸ்தினாபுரத்து மக்களும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
நாம் காளிதேவியின் அருளைப் பெற வேண்டுவோம். இவள் ரூபத்தில் கோரமானவள். அருள்புரிவதில் தாராளமானவள். நமக்கு துணையாக விளங்கும் கிருஷ்ணரின் மாயவடிவமே இவள்.
கருப்பும், வெள்ளையும் நிறங்களில் சேராது. அவை ஒன்றின் இருப்பையும், இல்லாததையும் உணர்த்துவதாகும். அந்த வகையில் இல்லாத கருப்பை தன் வடிவாக்கிக் கொண்டு பிறருக்கு ஒளியை வழங்குபவள். எப்படி கரிய கார்மேகமானது நிறமற்ற அமுதமான மழைத்துளிகளை தருகிறதோ அது போல கருணை மழை பொழிபவள்.
இவள் அருள் பெற்றிட வேத மந்திரங்கள் தெரிந்திருக்க தேவையில்லை. எளிய பக்திக்கு வயப்படுபவள். இவளுக்கு பலியாகும் ஜீவன்கள் இறவாத நிலை அடையும். முதிர்ந்த வயதை அடைந்து மரணிக்க இயலாது முடங்கி கிடக்கும் பிராணிகளை பிரசாதமாக ஏற்று அவற்றுக்கு முக்தி தருகிறாள்.
இவளது கபாலமாலை நிலையாமைக்கு சாட்சி. எண் சாண் உடம்புக்கு தலையே பிரதானம். இந்த தலையில் தான் பஞ்ச பூதங்கள் ஒருங்கே உள்ளன. ஒளியைக் காணும் கண்கள், ஒலியை கேட்கும் காதுகள், காற்றை உள்வாங்கும் மூக்கு, சுவையை உணரும் நாக்கு, அனைத்தையும் அறியும் மூளை என ஐந்தும் இருப்பது கபாலமாகிய தலையில் தான்... இதில் தான் உயிருள்ள அதே சமயம் உயிரற்ற கேசமும் தழைக்கிறது. இந்த கேசமே கபாலத்திற்கு கூரையாகவும் இருக்கிறது. இளமையில் கருத்தும், முதுமையில் நரைத்தும் வாழ்வின் தன்மையை சொல்கிறது. அப்படிப்பட்ட தலையின் மூல வடிவமே கபாலம். அதை மாலையாக அணிந்து நானே முடிவானவள் என உணர்த்துகிறாள்.
இவள் காலடியில் கிடக்கும் காளன் அசுர சக்திகளின் தொகுப்பு. இதமானது தேவம், இடரானது அசுரம். தேவத்துக்கு இதயத்திலும், அசுரத்துக்கு காலடியிலும் இடம் அளித்துள்ளாள்.
தேவ அசுரக் கலப்பே மனித வாழ்வு! வாழ்வில் தீய எண்ணங்களும் செயல்களும் அசுர குணம் கொண்டவை. அவைகளை இவள் காலடியில் சமர்ப்பித்து தேவ குணங்களால் ஆராதித்தல் வேண்டும் வரம் தந்து துணை நிற்பாள். நாமும் இவளை நம் தேவ குணங்களால் வேண்டி நிற்போம். ஆணவம், கன்மம், குன்மம், அச்சம், பேதமை போன்ற சகலத்தையும் அழித்து விடு தாயே என இவள் காலடியில் அவற்றை சமர்ப்பணம் செய்வோம்.
தைரியம், கருணை, விவேகம், வீரம், சாதுர்யம் இவற்றை வேண்டுவோம்.
இந்த காளியின் ரூபலாவண்யத்தை உணர்ந்து வணங்கினால் நமக்கு நன்மை அதிகரிக்கும். சக்தியின் விகார சொரூபமானாலும் இவளே மிக உகந்தவள்'' என்று தர்மன் நெடிதாக பேசி வணங்கினான். மற்றவர்களும் அவனது விளக்கங்களால் தெளிந்து காளியை வணங்கினர். அப்போது பீமன், ''அண்ணா... அன்பே வடிவான சக்திதேவி ஏன் இப்படி கோரரூபம் கொண்டிருக்கிறாள் என சந்தேகம் இருந்தது. அது உங்களால் தெளிந்தது.
தன்னை கோரமாக்கிக் கொண்டு நம் வாழ்வை அழகாக்குபவள் இவள் என்பதை இன்று உணர்ந்தேன். என் பார்வையே இப்போது மாறி விட்டது'' என்றான்.
''ஆம் பீமா... காளியை வேண்டினால் ஓடி வந்து காட்சியளிப்பாள். இவளின் எந்திர வடிவமும், ஆகம வடிவங்களும் வசீகரிக்க இயலாதவை. கிணற்று நீர் போன்றவை. பக்தி என்னும் கயிறு கொண்டு நியமம் என்னும் குடத்தை கட்டி மந்திரம் என்னும் பலத்தால் மட்டுமே அந்த நீரை பெற முடியும். இவளின் இந்த ரூபமோ ஆற்றுநீர் போன்றது. அள்ளிப் பருக கைகள் இருந்தால் போதும். பாமரர்களுக்கு அருளவே தன்னை இப்படி ஆக்கி கொண்டாள். மிக வரபிரசாதியானவள்'' என தர்மன் விளக்கமளித்தான். அப்போது சகாதேவன், ''காளி தரிசனம் நமக்கு இப்போது வாய்க்குமா'' என ஆவலாகக் கேட்டான்.
''எப்போது அவளைக் காணும் ஆவல் உண்டாகி விட்டதோ அதுவும் அவள் கருணை தான். ஒருமித்து வழிபட்டால் நிச்சயம் தோன்றுவாள்'' என தர்மன் தம்பிகளோடு காட்டு மலர்களைப் பறித்து வந்து அவள் காலடியில் கொட்டி, ''தாயே.. உன் மங்கள வடிவத்தைக் காட்டி அருள்வாய்'' என வேண்டினான். அடுத்த நொடியே அங்கு மணம் வீசியது. தென்றல் வீசியது.
விண்ணில் இருந்து ஒளிக்கற்றை காளி சிலை முன் உண்டாகி, அது அப்படியே அம்பிகையின் திவ்ய மங்கள சக்தி ரூபமாக காட்சியளித்தது.
அந்த ஆதிசக்தி அலங்கார பூஷிதையாக விஷ்ணு துர்கையாக சங்கு, சக்கரத்துடன் நின்றிருந்தாள். பாண்டவர்களும், திரவுபதியும் பரவசமானார்கள். விழுந்து வணங்கினர்.
''எழுந்திருங்கள். உங்களின் ஒருமித்த பிரார்த்தனை என்னை வரவழைத்து விட்டது. வனவாச காலத்தில் சேமித்த புண்ணியமே இங்கே என்னை தரிசிக்க காரணம். உண்மையில் உங்கள் வனவாசம் என்பது வண்ண வாசமே! உங்களுக்கு என் ஆசிகள்'' என திருவாய் மலர்ந்தாள் காளி.
''அம்மா... எங்கள் பிரார்த்தனைக்கு இணங்கி அருள்புரிந்த உன் கருணைக்கு எங்களின் வந்தனங்கள்'' என்றான் தர்மன்.
''ஆம் தாயே... நாங்கள் மனிதப்பிறவி எடுத்ததன் பயனை அடைந்தோம். உன் தரிசனம் எங்களை பூரணர்களாக்கியது'' என்றான் பீமன்.
''அம்மா... இனி வரும் காலம் எங்களுக்கு சோதனையாக இல்லாமல் சாதனையாக திகழ்ந்திட நீ துணைநிற்க வேண்டும்'' என்றான் சகாதேவன்.
''இரவு என்றால் பகல் உண்டு; பகல் என்றால் இரவு உண்டு. பிறப்பு என்றால் மரணம் உண்டு. நல்லதென்றால் அல்லது உண்டு. இதுவே இயற்கையின் நியதி. மாந்தராய் பிறந்தவர்கள் இந்த நியதிப்படியே வாழ்ந்தாக வேண்டும். அந்த வகையில் இரண்டும் கலந்த வாழ்வை இதுநாள் வரை வாழ்ந்த நீங்கள் இனி வெற்றிப்பாதையிலேயே செல்வீர்கள். எங்கும் எதிலும் உங்களுக்கு வெற்றியே விளையும்.
உங்களால் அழிக்கப்படுவது அசுரமாகவும் அஞ்ஞானமுமாகவே இருக்கும். அவை வளர்ந்து நிற்பதே உங்களால் அழியத்தான்... எனவே தர்மத்தை நிலைநாட்ட நீங்கள் உங்களை போராளிகளாக ஆக்கிக் கொள்ள தயங்காதீர்கள். அந்த போராட்டத்தின் போது மனம் என் மாயா விலாசங்களால் உழற்சி காணும். ஆயினும் அது பின் தெளிந்து இறுதி வெற்றி உங்களுக்கே கிடைக்கும். உங்கள் வாழ்வு உலகிற்கு ஒரு பாடம். உங்கள் வரலாறு அழியாத புராணமாகி யுகங்கள் கடந்து நிற்கும். உங்களால் என் காள ரூபமும், என் காள ரூபத்தால் நீங்களும் சிந்திக்கப்படுவீர்கள் ததாஸ்து!'' என்று கூறி மறைந்தாள் காளி. திரவுபதியுடன் பாண்டவர்கள் ஐவரும் மெய் சிலிர்த்து நின்றனர்.
--தொடரும்
இந்திரா செளந்தர்ராஜன்
98947 23450