sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 32

/

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 32

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 32

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 32


ADDED : ஏப் 12, 2024 03:11 PM

Google News

ADDED : ஏப் 12, 2024 03:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மண்டோதரியின் மனக்கலக்கம்

ஒருமுறை பொழுது போக்காக காட்டில் உலா சென்றான் ராவணன். அங்கு பளிச்சென ஒரு பெண் அவன் கண்களில் பட்டாள். பேச ஆசைப்பட்ட போது, விருப்பத்துக்கு இடையூறாக பெரியவர் ஒருவர் அவளுடன் இருந்தார். யார் அவர்?

யோசித்தபடியே நெருங்கினான். அவனைக் கண்டதும் நட்புடன் சிரித்தார் பெரியவர். ''ஐயா... தாங்கள் யார்? உங்களுடன் வந்திருக்கும் இந்த பேரழகி யார்?'' எனக் கேட்டான்.

''என் பெயர் மயன். நான் தேவலோக தச்சன். இவள் என் மகள் மண்டோதரி. என் மனைவி ஹேமை வழியாகப் பிறந்தவள். ஹேமை மீதுள்ள காதலால் 'ஹேமாபுரி' என்ற நகரையே உருவாக்கினேன். ஆனால் என்ன காரணத்தாலோ என்னை விட்டுப் பிரிந்தாள். ஆனாலும் மண்டோதரிக்கு திருமணம் நடத்த வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது அல்லவா?'' என்றார் மயன்.

பெண் கேட்கும் விதமாக ராவணன் தன்னைப் பற்றியும், தன் தாத்தா புலத்தியர், தந்தை விச்ரவசு என பரம்பரை பற்றியும் விவரித்தான். புலத்தியரின் பெயரைக் கேட்ட மயன் மகிழ்ந்தார். பெருமை மிக்க வம்சம் அல்லவா அது! அப்போதே மண்டோதரியை ராவணனுக்கு மணம் முடித்துத் தர சம்மதித்தார்.

நேரம், காலம், முகூர்த்தம் எதுவும் பார்க்கவில்லை. அக்னியை வளர்த்து தன் மகள் மண்டோதரியை கன்னிகாதானம் அளித்தார் மயன். சீதனமாக சக்தி மிக்க வேல் ஒன்றை பரிசளித்தார்.

பின்னாளில் சீதையைத் தேடி இலங்கைக்குள் நுழைந்த அனுமன், அங்குள்ள மாளிகையை ஒவ்வொன்றாகக் பார்த்தபடி சென்றான். மண்டோதரியின் மாளிகையில் அழகு மிக்க அவள் அயர்ந்து உறங்குவதைக் கண்டான். அவள் தான் சீதையோ என சந்தேகம் அவனுக்கு வந்தது. ஆனால் உடனே ஊகத்தை மாற்றிக் கொண்டான். காரணம்... ராவணனால் சிறை வைக்கப்பட்ட சீதை முகமலர்ச்சியுடன் துாங்க வாய்ப்பில்லையே... எப்படியாவது சீதையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அக்கறை ஒருபுறம், சீதையைப் பற்றி ராமனிடம் கேள்விப்பட்டிருந்தாலும் சீதையை நேரில் பார்க்காததால் இப்படி தவறாக ஊகித்தான்.

குணவதியான பெண்களுக்கு சாந்தமான முகம் இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தாள் மண்டோதரி.

கணவன், பிள்ளைகளுக்கு பாசமிகு மனைவியாக, தாயாக அவள் இருந்தாள். சீதையை அபகரித்த ராவணனின் செயலை அவள் அங்கீகரிக்கவில்லை. அவனிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள். ராவணனின் அந்தப்புரத்தில் ஆசைப் பெண்டிராக ஏராளமான பெண்கள் சிறை பிடிக்கப்பட்டு இருந்தனர். ஆரம்ப காலத்தில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், நாளடைவில் அவனுக்கு உடன்பட்டனர். ஆனால் கற்புத்தீயான சீதை அப்படிப்பட்டவள் அல்ல. மற்ற ஆடவர் எவராலும் தீண்டவே முடியாதவள். அதனால்தான் சீதை கடத்தப்பட்டதை மண்டோதரியால் ஏற்க முடியவில்லை.

எத்தனையோ பெண்கள் ராவணனின் காலடியில் விழுந்து கெஞ்ச, அவன் போய் சீதையின் கால்களில் விழுந்து கெஞ்சுகிறானே என கோபம் கொண்டாள். ஆனாலும் மனம் திருந்தாத ராவணனை அவள் பொறுத்துப் போகவும் வேண்டியிருந்தது. சீதையின் விஷயத்தில் தன் கணவன் தோல்விக்கு ஆளாவான் என்றே தோன்றியது.

சீதையிடம் கணையாழியைக் கொடுத்து சூளாமணியைப் பெற்ற அனுமன், இலங்கைக்கு வந்ததன் அடையாளமாக அந்நகரை அழிக்க முற்பட்டான். வானரமான அனுமன் அட்டகாசம் செய்வதாக அறிந்த ராவணன் படையை அனுப்பினான். ஆனால் அனுமனின் தாக்குதலைத் தாங்க முடியாத படை அவலக்குரல் எழுப்பியது. அப்போது ராவணனின் மகன் அக்ககுமாரன், 'தனியாளாகச் சென்று அனுமனை அரண்மனைக்கு இழுத்து வருகிறேன்' எனச் சூளுரைத்தான். ஆனால் எறும்பை நசுக்குவது போல அனுமன் அவனைத் தரையில் தேய்த்துக் கொன்றான்.

தன் மகன் கோரமாக கொல்லப்பட்டதை அறிந்த மண்டோதரி கண்ணீருடன் வயிற்றில் அடித்தபடி அழுதாள். இந்த சம்பவத்துக்குப் பிறகாவது ராவணன் திருந்துவான் என எதிர்பார்த்தாள். ஆனால் அவன் இர(ற)ங்கவே இல்லை.

பக்தையான மண்டோதரி, பல சிவத்தலங்களைத் தரிசித்து வந்தாள். அவற்றில் முக்கியமானது தமிழகத்திலுள்ள திருப்பெருந்துறை ஆத்மநாதர் கோயில்(புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில்). அவள் அங்கு வந்ததை மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். திருவாதவூரில் அவதரித்த மாணிக்கவாசகருக்கு 'நரியைப் பரியாக்கி' தெய்வீக அனுபவத்தைத் தந்து ஆட்கொண்டார் சிவன்.

'குயில் பத்து' என்ற பாடல் தொகுப்பில் 'ஆர்கலி சூழ் தென்னிலங்கை அழகமர் மண்டோதரிக்குப் பேரருள் இன்பமளித்த பெருந்துறை மேயபிரான்' எனக் குறிப்பிட்டு மண்டோதரியின் வருகையைப் பதிவிட்டிருக்கிறார். இந்தளவுக்கு புகழ் மிக்க மண்டோதரிக்கு சொந்த வாழ்வில் ஏற்பட்ட சோகம் அவளின் மறைவிற்குப் பிறகே நீங்கியது என்பதுதான் சோகம்.

அக்ககுமாரன் மறைவுக்குப் பிறகு அவள் சந்தித்த இன்னொரு பேரிடி இந்திரஜித் வதம். மாயக்கலைகளில் மன்னவனான அவன், நிகும்பலா யாகம் நடத்தி யாராலும் வீழ்த்த முடியாது என்னும் நிலையில், லட்சுமணனின் அம்புக்கு பலியானான் என்ற செய்தி மண்டோதரியைப் பெரிதும் தாக்கியது.

இதில் கொடுமை என்னவென்றால் இறந்தபின் அவனுடைய தலையை மட்டும் வெட்டி எடுத்து, ராமனின் காலடியில் சமர்ப்பித்தான் அங்கதன். இதனால் தலை இல்லாத உடலையே ராவணன், மண்டோதரியால் காண முடிந்தது. பத்துத் தலைகளுடன், அத்தனை தலைகளிலும் அகம்பாவம் என்ற கனத்துடன் இருந்த தன் கணவனையும், தலையற்ற உடலுடன் காட்சியளிக்கும் மகனையும் கண்டு துடித்தாள் மண்டோதரி.

'கம்பீரமாக களிறு போல உலவிய அருமை மகனே, அன்றொரு நாள் நிலவை நோக்கி, 'வா' என அழைத்தாய். ராவணனின் மகனான நீ அழைத்தும் வராவிட்டால் கோபத்துக்கு ஆளாக வேண்டுமே என பயந்து பூமிக்கு சந்திரனும் வந்தான். அவனை உன் கைகளில் ஏந்திய போது, அவன் மீது உண்டாகியிருந்த களங்கத்தைப் பார்த்து 'ஓ, இது முயலோ?' என்று சொல்லி அதைத் துடைக்க முனைந்தாயே, அந்த சாகசத்தை மீண்டும் செய்துகாட்ட மாட்டாயா மகனே' எனக் கதறினாள்.

அம்புலி அம்மா வா என்று அழைத்தாலும் அவிர்

வெண் திங்கள்

நம்பி உன் தாதை ஆணைக்கு அஞ்சினன்

மருங்கு நண்ண

வம்புறும் மறுவைப் பற்றி முயல் என வாங்கும்

வண்ணம்

எம் பெருங்களிறே காண ஏசற்றேன் எழுந்திராயோ

-கம்பர்

- தொடரும்

பிரபு சங்கர்

72999 68695






      Dinamalar
      Follow us