
காஞ்சி மஹாபெரியவரின் அருளைப் பெற நம் மனம் துாய்மையாக இருக்க வேண்டும். மனதில் அன்பு, பொறுமை, கருணை, இரக்கம், உதவும் எண்ணம் இருக்க வேண்டும். கோபம், பொறாமை, எரிச்சல், வெறுப்பு கூடாது.
சுத்தமான இடத்தில்தானே சுகாதாரம் இருக்கும்; சுத்தமான மனதில்தான் அமைதி குடிகொள்ளும்.
மனத் துாய்மையுடன் நாம் நல்லதைப் பின்பற்ற வேண்டும்.
'வேண்டவே வேண்டாம்' என அவர் தவிர்க்கச் சொன்ன பல விஷயங்களில் காபியும் ஒன்று.
'காபி...'
காபி இல்லாமல் இருக்க முடியுமா? அதிகாலை எழுந்தவுடன் இதைக் குடிக்காவிட்டால் அவ்வளவுதான்! தலைவலி வந்து விடும். வேலையும் ஓடாது!
சரி, ஏன் காபியை விடச் சொன்னார்?
காபி என்பது வெளிநாட்டு இறக்குமதி.
உள்நாட்டுப் பொருளையே அவர் ஊக்குவிப்பார்.
'காபி வேண்டாம்' என்றவர் அதற்கான மாற்றுவழியும் சொன்னார்.
அதுதான் கஞ்சி!
யோசித்துப் பாருங்கள்... காலையில் கஞ்சி குடித்து விட்டு விவசாயிகள் வயலுக்குச் சென்றனர்.
உடம்பு, மனம் இரண்டையும் கெடுக்கும் விஷமான கபைன் என்ற டிகாஷனை சேர்த்து சுவையான பாலை வீணடிக்கிறோம்.
காபி குடிப்பதற்கு பயன்படும் பாலை ஏழைகள், நோயாளிகள், ஆதரவற்ற குழந்தைகள், கோயிலுக்கு கொடுங்கள்.
பால் இல்லாமல் குழந்தைகள் நோஞ்சானாக இருப்பதை நினைத்துப் பாருங்கள்.
காபிக்கு பதில் மோர்க் கஞ்சி குடிக்கலாம். ஒரு பங்கு பாலில் இருந்து இரண்டு பங்கு மோர் கிடைக்கும். இதனால் சிக்கனமாக இருக்கலாம்.
சிலருக்கு பால் ஒத்துக் கொள்வதில்லை. அவர்களுக்காகவே கோமாதா(பசு) மோரை தருகிறாள்' என்கிறார் மஹாபெரியவர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com