
சித்திர கூடத்தில் ஸ்ரீராமபிரான் தங்கி இருந்த போது நடந்த நிகழ்ச்சி இது.
சீதாபிராட்டி சமைத்த உணவை ஸ்ரீராமபிரான் விரும்பி உண்பது வழக்கம். ஒரு நாள் தான் சமைத்ததை ஸ்ரீராமபிரானுக்கு பரிமாறினாள். அந்த உணவு எப்படி இருக்கிறது எனக்கேட்டாள்.
அவரும் நன்றாக இருக்கிறது என்றார். மற்றொரு உணவை பரிமாறியவர் இது எப்படி இருக்கிறது என கேட்டாள். நன்றாக உள்ளதே என சொல்லிக் கொண்டே சாப்பிட்டார் ஸ்ரீராமபிரான். மூன்றாவதாக வேறொன்றை எடுத்தாள் சீதாபிராட்டி. அது தீய்ந்து இருந்தது. தயக்கத்துடன் பரிமாறினாள். பின்னர், இது எப்படி இருக்கிறது என மெல்லிய குரலில் கேட்டாள்.
எப்போதும் உண்மையை பேசுபவரும், பிறர் மனம் நோகச் செய்யாதவருமான ஸ்ரீராமபிரானுக்கு உண்மையை சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சிரித்துக் கொண்டே, ஸ்ரீராமபிரான் நீ நன்றாகத் தான் சமைத்திருக்கிறாய், ஆனால் இந்த அக்னி பகவான் சற்று கூடுதலாக அதை தீய்ந்து போகும்படி செய்து விட்டார் என்றார்.
அதைக்கேட்ட சீதாபிராட்டி, அப்படியானால் இந்த உணவு நன்றாக இல்லையா என பயத்துடன் கேட்டாள்.
அவளின் மனதை புரிந்து கொண்டவரான ஸ்ரீராமபிரான் அதெல்லாம் ஒன்றுமில்லை.
உணவு தீய்ந்து பார்ப்பதற்கு என்னைப்போல கருப்பாக இருப்பது அழகு தான். அதை சாப்பிடுவதும் ஒரு தனிச்சுவை தான் என்றார் ஸ்ரீராமபிரான்.
அப்பதிலை கேட்ட சீதாபிராட்டியின் முகம் வெட்கத்தில் ஜொலித்தது.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வாய்மையுடையதாகவும், ஏமாற்றம் இல்லாததாகவும் இருப்பின் அதுவே 'இன்சொல்' என்கிறது திருக்குறள்.
சத்தியத்திற்கு அரிச்சந்திரனையும், வள்ளலுக்கு கர்ணனையும், ஏகபத்தினி விரதத்திற்கு மன்மதனையும் சொல்வர். இந்த முக்குணங்களோடு பேச்சுக்கலையிலும் சிறந்தவர் ஸ்ரீராமபிரான் என்கிறார் வால்மீகி முனிவர்.