ADDED : மே 24, 2024 08:03 AM

அவள் வைத்த தேர்வு
காலை நேரம். என் கார் கொடைக்கானலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அங்கே நடக்கும் பயிற்சி முகாமில் இளைஞர்களுக்கு வகுப்பு எடுக்க அழைத்திருந்தனர். விடுமுறை நாள் என்பதால் கிளம்பிவிட்டேன்.
நடுவில் காவல்துறை சோதனைச் சாவடியில் காரை நிறுத்தினார்கள். என்னிடம் வந்த போலிஸ்காரர், 'நான் யார், எங்கே செல்கிறேன்' என்ற விவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்த போது ஒரு பெண் போலீஸ் கதவைத் திறந்து காரில் ஏறினாள். காவலர் அவளுக்கு சல்யூட் அடித்து விட்டு நகர்ந்தார்.
அவளின் கம்பீரம் என்னைக் கவர்ந்தது.
“நேரமாகிறது. கிளம்பு''
அவளையே வெறித்துப் பார்த்தேன்.
“நீ என் அடிமை எனச் சொல்லிக்கொண்டு திரிவதால் சலுகை தர மாட்டேன். இன்று உனக்கு ஒரு தேர்வு வைக்கப்போகிறேன். அதில் தேர்ச்சி பெற்றால்தான் நீ தொடர்ந்து என் அன்பைப் பற்றி எழுத முடியும்”
“தாயே'' பதறினேன்.
“கடவுள் என்ற முறையில் தேர்வைப் பற்றி எச்சரிக்க வந்திருக்கிறேன். ஆனால் நீ தேர்வில் வெற்றி பெற வேண்டும் என தாயாக வாழ்த்த வந்திருக்கிறேன்”
காரை ஓரமாக நிறுத்திவிட்டு வணங்க ஓடினேன். அதற்குள் மறைந்து விட்டாள்.
என் பயணத்தைத் தொடர்ந்தேன்.
பயிற்சி முகாம் நடந்த அரங்கத்தில் நான் நுழைந்த போது 11:00 மணி.
“கொஞ்சம் லேட்டாத்தான் ஆரம்பிச்சோம். முந்தின செஷன் முடிய இன்னும் பத்து நிமிஷம் ஆகும்”
“காத்திருக்கிறேன்”
அரங்கத்தில் ஐம்பது இளைஞர்கள் இருந்தார்கள். ஒரு அழகான பெண் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தாள். அவள் பேச்சில் இருந்த கம்பீரம், மொழியின் மீது அவளுக்கு இருந்த ஆளுமை, விஷயத்தைச் சுவையாகச் சொல்லும் திறமை ஆகியவற்றை என்னையும் மறந்து கேட்டேன்.
“இவங்க பேரு பாலா. சென்னை காலேஜ்ல இங்கிலீஷ் புரொபசர். நல்லா வகுப்பெடுப்பாங்க” அருகில் இருந்த அமைப்பாளர் காதருகில் கிசுகிசுத்தார்.
பாலா பேசி முடித்தபின் நான் மேடையேறினேன். என் வகுப்பு முடிந்ததும் மதிய உணவு. அதன்பின் இன்னொரு வகுப்பு எடுக்க வேண்டியிருந்தது. மாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றேன். இரவு உணவை முடித்துவிட்டு எனக்காக ஒதுக்கிய அறைக்கு சென்றபோது இரவு 10:00 மணி.
உள்ளே யாராவது இருக்கிறார்களோ? என்ற சந்தேகத்தில் கதவை தட்டினேன்.
“யெஸ் கம் இன்” பெண் குரல் கேட்டது.
கதவைத் திறந்த போது அதிர்ச்சி காத்திருந்தது. காலையில் வகுப்பெடுத்த பாலா நைட்டியில் காட்சியளித்தாள்.
“சாரி ரூம் மாத்தி வந்துட்டேன் போல...'' மழுப்பினேன்.
“சரியாத் தான் வந்திருக்கீங்க. என் பேர வச்சி நான் ஆம்பளைன்னு நெனச்சி எனக்கும் உங்களுக்கும் ஒரே ரூம அலாட் பண்ணிட்டாங்க”
“ஐயையோ”
“ஏன் பதறீங்க? ரூம மாத்தச் சொல்லிக் கேட்டுப்பாத்துட்டேன். வேற ரூமே இல்லைன்னு சொல்லிட்டாங்க. என்ன செய்யறது?”
நான் அதிர்ந்தேன்.
“இங்க பாருங்க. நாமசின்னஞ் சிறிசுங்க இல்ல. அந்த சோபாவுல நான் படுத்துக்கறேன்.நீங்க பெட்ல படுத்துக்கங்க. காலையில நான் ஊருக்குக் கிளம்பிருவேன்”சொன்னவளின் முகத்தை உற்றுப் பார்த்தேன்.
பக்கத்தில் பார்க்க இன்னும் அழகாக இருந்தாள். அவள் குரலில் ஒரு மெல்லிய கிறக்கம் தென்பட்டது. ஒருவேளை இதுதான் என் தாய் எனக்கு ஏற்பாடு செய்திருக்கும் தேர்வா? இந்தத் தேர்வில் வெற்றி பெற முடியும் என எனக்குத் தோன்றவில்லை.
“ஒரு நிமிஷம் பெட்டிய எடுத்துட்டு வந்துடறேன்” பலவீனமான குரலில் சொன்னேன்.
“கதவைத் திறந்தே வைக்கட்டுமா?” பாலாவின் குரலில் இன்னும் அதிக கிறக்கம் தென்பட்டது.
“வேண்டாம். பூட்டிக்கங்க. என்கிட்ட இன்னொரு சாவி கொடுத்திருக்காங்க”
அரக்கப் பரக்க கீழே ஓடினேன்.
ரிசார்ட் ஊழியரிடம் என் நிலைமையைச் சொன்னேன்.
“ஒரு ரூம்கூட இல்ல சார். எல்லாமே புக் ஆயிருச்சி”
“எனக்குத் துாங்கறதுக்கு ஒரு இடமும், குளிருக்குப் போர்வையும் கொடுங்களேன்”
“இதோ இந்த சோபாவுல நீங்க படுத்துக்கலாம். போர்வையும் தலையணையும் இங்க இருக்கும். ஆனா 11:00 மணிக்கு லைட் எல்லாம் அணைச்சப்பறம்தான் படுக்க வர முடியும். அதுவரைக்கும் வெளிய உலாத்திக்கிட்டு இருக்கணும். பரவாயில்லையா?”
வேறு வழி?
11:00 மணிக்கு வந்து படுத்துக்கொண்டேன். குளிர் அதிகமாக இருந்தது. இரு கம்பளிகள் இருந்தும் போதவில்லை. என் தாய் வைத்த தேர்வை எழுதாமலேயே வந்துவிட்டேனே! தேர்வு எழுதித் தோற்பதை விட எழுதாமல் இருப்பதே மேல் என பட்டது. சற்று நேரத்தில் உறக்கம் ஆட்கொண்டது.
திடீரென கொலுசு சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன். அலைபேசியில் மணியைப் பார்த்தேன். நள்ளிரவு 1:00 மணி.
எழுந்து உட்கார்ந்தேன். கொலுசு சத்தத்துடன் சிரிப்பு சத்தமும் கேட்டது. சுற்றி முற்றி யாரும் இல்லை.
அடுத்த நொடி அந்த இடம் ஒளிமயமானது.
“என்னப்பா பயந்துவிட்டாயா?”
பச்சைப்புடவைக்காரியின் குரலைக் கேட்டதும் மனம் அமைதியானது.
வேரறுந்த மரமாக கால்களில் விழுந்தேன்.
“ மன்னித்து விடுங்கள் தாயே! நீங்கள் வைத்த தேர்வை எழுதவில்லை. கோழையைப் போல் தேர்வு எழுதாமல் ஓடி வந்துவிட்டேன்”
தாய் புன்னகைத்தாள்.
“அதற்காக இனிமேல் உங்கள் அன்பைப் பற்றி எழுத முடியாது என சொல்லி விடாதீர்கள். உங்களைப் பற்றி எழுதாமல் என்னால் உயிர் வாழ முடியாது. அதனால் உங்களிடம் மரணத்தை வரமாகக் கேட்கிறேன்”
என்னால் விம்மல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“ஏனப்பா புலம்புகிறாய்? நான் வைத்த தேர்வில் அமோகமாக வெற்றி பெற்றுவிட்டாயே”
“என்ன சொல்கிறீர்கள் தாயே?”
“உன் நிலையில் இருக்கும் பலர் அந்தப் பெண்ணுடன் தங்கியிருப்பார்கள். என்னால் புலன்களை வெல்ல முடியும் என சவால் விட்டிருப்பார்கள். உன்னை விட உன் புலன்கள் வலிமையானவை. அது உன் குறை இல்லை. படைப்புச் சூத்திரம் அப்படி. இது போன்ற சூழலில் ஆபத்தை அறிந்து விலகி இருக்கிறாயா என பார்க்கவே சோதனை வைத்தேன். அந்தப் பெண் உன்னை மயக்க முயற்சித்தாள். பிடி கொடுக்காமல் வந்து விட்டாய். குளிரையும் வசதிக் குறைவையும் பொருட்படுத்தாமல் இருக்கத் தீர்மானித்தாய். எனவே சோதனையில் வெற்றி பெற்றாய்”
இப்போது அதிகமாக அழுகை வந்தது.
“தேர்வில் வெற்றி பெற்றதற்குப் பரிசளிக்க விரும்புகிறேன். என்ன வேண்டும் சொல்”
“இரண்டு வரம் வேண்டும் தாயே”
“கேள்”
“முதல் வரம் ஆயிரம் சோதனைகளைக் கொடுங்கள். லட்சம் தேர்வுகளை எழுத வையுங்கள். ஆனால் தேர்ச்சி பெறாவிட்டால் உங்கள் அன்பைப் பற்றி இனி மேல் எழுதக்கூடாது என்ற நிபந்தனை விதிக்காதீர்கள். அதைத் தாங்க முடியாது”
“தந்தேன். அடுத்து?”
“வாழும் வரை உங்களைப் பற்றியும் உங்கள் அன்பைப் பற்றியும் எழுதும் வரம் வேண்டும்”
“என் அன்பைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் வரை நீ வாழ்வாய் என வரத்தை மாற்றித் தருகிறேன்”
ஒரு விம்மலுடன் அவள் காலடிகளில் விழுந்தேன். நிமிர்ந்து பார்த்த போது அவள் அங்கு இல்லை.
-தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com