sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஆண்டாளும் அற்புதங்களும் - 13

/

ஆண்டாளும் அற்புதங்களும் - 13

ஆண்டாளும் அற்புதங்களும் - 13

ஆண்டாளும் அற்புதங்களும் - 13


ADDED : மார் 09, 2023 11:12 AM

Google News

ADDED : மார் 09, 2023 11:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டாளின் சரணாகதி தத்துவம்

இந்த உலக நடப்புகளை பற்றி புரிந்து கொள்ள மனித இனம் வெகுகாலம் முயன்று வந்திருக்கிறது. உலகம் எப்படி தோன்றியது? உலகை இயக்கும் சக்திகள் யாவை? நம் உணர்வுகளுக்கும் இந்த சமூக வாழ்வு நிலைக்கும் இடையிலான தொடர்பு என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காண முனைந்ததன் விளைவே தத்துவம். ஒருவர் தான் உணர்ந்தவற்றை கூறுவது தத்துவம்.

நம் நாட்டில் தத்துவம் என்பதை எப்படி அறிவுறுத்தி உள்ளார்கள் என பார்க்கலாமா? சீடன் ஒருவன் தன் குருவிடம், “ கடவுள் எங்கே இருக்கிறான்?” எனக் கேட்டான். குரு வானத்தைக் காட்ட சீடன் ''வானம் தான் கடவுளா?” எனக் கேட்டான். குரு அடுத்து பறவையைக் காட்டுகிறார். சீடனும் ''அப்போ பறவை தான் கடவுளா?” என்றான். அடுத்து குரு ஒரு மரத்தைக் காட்டவே, ''அப்போ மரம்தான் கடவுளா குருவே?” எனக் கேட்டான். குரு கடைசியில் சீடனையே சுட்டிக் காட்டினார். அப்படி கடைசியில் கடவுள் உனக்குள் இருக்கிறார். அது நீயே என முடிக்கிறார். இதுதான் தத்துவம் என உபநிடதங்கள் கூறுகின்றன.

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைந்தன பார்முதல் பூதம்

பரத்தில் மறைத்தன பார்முதல் பூதமே

இது திருமூலரின் திருமந்திரம். இதில் காணப்படும் அழகியல் நுட்பம் ஒரு தத்துவம். ஒரு யானை வாகனம் செய்தார் தச்சர். அதைக் காண மற்றொரு தச்சர் குழந்தையுடன் சென்றார். யானையை பார்த்த குழந்தை பயந்தது. இது மரப்பொம்மை தான் என சமாதானம் செய்தார் தச்சர். அந்த வாகனம் மரம் என்ற ஞானம் குழந்தையிடமிருந்து மறைந்தது. தச்சருக்கோ யானைத்தன்மை முற்றிலும் மறைந்தது. யானை வேறு, மரம் வேறு இல்லை என்பது போல் பிரபஞ்சம் வேறு, கடவுள் வேறில்லை என்று இப்படி ஒரு பார்வையைக் காட்டி விளக்குகிறார் திருமூலர். பெரிய தத்துவங்களை இப்படி இலகுவாக சொல்லியிருக்கிறார். நாம் எப்படி அதைப் புரிந்து கொண்டோம் என்பதில் தான் சூட்சுமம் இருக்கிறது.

ஆண்டாள் அருளிய திருப்பாவையிலும் நம் ஆழ்மனம் உணரும் அற்புதங்களே தத்துவங்களாக நிலை பெற்றுள்ளன. பாசுரங்களில் உள்ள சொற்சுவை, பொருட்சுவையை ரசித்துப் பார்க்கும் பொழுது சொல்ல வந்த தத்துவத்தை ஆழ்ந்து நோக்க தவறுகிறோம் என்றே தோன்றுகிறது. இங்கே துயில் எழுப்புதலும் நீராட அழைத்தலும் சாதாரண மானிடப்பிறவிக்கான எழுப்புதல் என்ற பொதுவான அர்த்தம் கொண்டிருந்தாலும் நோக்கம் என்ன தெரியுமா? அது ஆன்மாவின் துயில் நீக்கத்தை உணர்த்துவது தான். அதுமட்டுமா... நோன்பு இருக்க வேண்டிய அவசியத்தை சொல்கிறாள் கோதை. ஆனால் நாம் இங்கு உற்று நோக்க வேண்டியது வாழ்வையே நோன்பாக பார்த்திருக்கிறாள் கோதை என்பதைத்தான். இது நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய தத்துவப் பார்வை.

அதில் தத்துவங்களை சொல்லும் சில பாசுரங்களை பார்ப்போம்.

முதல் பாசுரத்தில் ' நாராயணனே என்பதற்கு 'நரன்+ அயணன்' என பிரித்துப் பார்த்தால் மனிதர்களுக்கு நெருக்கமானவன் என்றும் நமக்கே பறை தருவான் என்பதால் அந்த எம்பெருமானை சரணடைய வேண்டும் என்ற சரணாகதி தத்துவத்தை சொல்கிறது.

இரண்டாவது பாசுரத்திலோ சரணாகதி அடையும் வழி கூறப்பட்டிருக்கிறது. கடவுளின் திருவடியை அடைதல் என்பது தான் நம் இலக்கு. இதை உணர்ந்த கோதை பரமன் அடி பாடி என்று இப்பாடலில் தொடங்கி 'பொற்றாமரை அடியை போற்றும் பொருள் கேளாய் என முடித்துள்ளார்.

மூன்றாம் பாசுரத்தில் நம்முடைய ஆத்மா குருவின் காலடியை பற்றி ஞானம் பெற்றால் கடவுள், 'பொறி வண்டு போல' உறங்குவான் என்கிறாள். வைணவ மரபில் குருவுக்கு பெரிய மரியாதை உண்டு. ஆழிமழைக் கண்ணா எனத் தொடங்கும் பாசுரத்திலோ கண்ணனை குருவாக ஏற்று அதன் உள்ளுறையை மனதில் கொண்டு மற்றவர்களுக்கு ஞான மழை பெய்ய வேண்டும் என உரைக்கிறாள். ஐந்தாவது பாசுரத்தில் கண்ணன் மக்களை மாயை மூலம் மயக்கம் செய்வான். பின் மாயையை விலக்கி தெளிவிக்கும் வேலையை செய்வான். அத்தகைய ஆற்றல் உடையவன் என்பதை குறிப்பால் உணர்த்துகிறாள்.

வாழ்வின் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பலர், “ தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு. என்னவோ... அப்படி ஒரு ஆபத்திலிருந்து கடவுள்தான் காப்பாற்றினார்” என இப்படி சொல்லக் கேட்டிருக்கிறோம் தானே. இங்கும் அப்படித்தான். ஆறாம் பாசுரத்திலோ 'அரி' என்ற கடவுளின் நாமத்தை ஏற்றால் உள்ளம் குளிரும் என உணர்த்துகிறாள் கோதை.

மாயையை விலக்குவார் என சொன்னோம் இல்லையா? அடுத்த பாசுரத்தில் நம் மாயையை விலக்கி ஞானத்தை நம்முள் புகுத்தும் தத்துவம் பேசுபொருளாகிறது. பத்தாவது பாசுரத்தில் கோதை சரணாகதி தத்துவத்தை எவ்வளவு உயர்வாக உயர்த்திப் பிடிக்கிறாள் பாருங்கள். கடவுளை கர்ம வினையான பக்தியால் சேரலாம் என்றும் ஆனால் அவற்றை செய்யாமல் சரணாகதி என்ற ஒன்றின் மூலம் அடைதல் மிக உயர்ந்தது என்றும் மறைபொருளாக உணர்த்தியுள்ளாள்.

சரி இங்கிருந்து 18ம் பாசுரத்துக்கு தாவுவோம். இதில் பூமியில் வாழும் கோழியும் மரத்தின் மேலே வாழும் குயிலும் சொல்லப்பட்டுள்ளன. கடவுளுக்கு முன் அனைவரும் சமம் என்ற உண்மை இதன் மூலம் வெளிப்படுகிறது. பந்தார் விரலி என்பது கையில் பந்தை உடையவள் எனப் பொருள்படுகிறது. பந்து ஏழு உலகம் ஏழு ஜீவனை குறிக்கிறது.

கோதை ஒரு கையில் பகவானையும் மறுகையில் ஜீவனையும் பிடித்துள்ளாள். அதாவது ஜீவனை கடவுளிடம் சேர்ப்பிப்பவள் என்பதாம். 'பிராட்டி வழியாக பிரார்த்தனை அடைதல்' என வைணவமும் 'அன்னை அருளால் அப்பனை அடைதல்' என சைவமும் கூறுகிறது அல்லவா? ஒருவரை விட்டு ஒருவரை வணங்குதல் கூடாது என்பதும் சொல்லப்படுகிறது. சூர்ப்பனகை சீதையை விட்டு ராமனை மட்டும் பிடித்தாள். ராவணன் ராமனை விட்டு சீதையை மட்டும் பிடித்தான். இறுதியில் இருவரும் அழிந்தனர். இந்த தத்துவம் இங்கு உணர்த்தப்படுவதால் இப்பாசுரம் சிறப்பு பெறுகிறது.

அடுத்து 22ம் பாசுரத்தில் ஐம்புலன்கள் இயங்கும் இந்த உடம்பின் மீதுள்ள பற்று நீங்கினால் கடவுளை அடையலாம் என கூறப்பட்டுள்ளது. இறுதி பாசுரமான வங்கக் கடல் கடைந்த எனத் தொடங்கும் இதில் கடவுள் முதலும் முடிவுமாக இருப்பவன் என்ற உண்மை உணர்த்தப்படுகிறது.

எப்பொழுதும் ஆழமான உண்மைகள் வெளிப்படையாக இருக்காது. திருப்பாவையில் நாம் அனைவரும் புரிந்து கொள்ள ஏதுவான நேரடி அர்த்தங்களும், மறைமுகமாக உணர்ந்து கொள்ளும் அர்த்தங்களான இரண்டும் ரசிக்கத்தக்கவை. ஒரு பாடல் இசைக்கப்பட்டால் கேட்கும் திறன் உள்ளவர்கள் அனைவருக்கும் அந்த பாடல் கேட்கத்தான் செய்யும். ஆனால் ரசிக்கத் தெரிந்த காதுகளுக்கு மட்டுமே அவை தேன் விருந்தாக அமையும்.

அதுமட்டுமல்ல... சில நேரங்களில் தத்துவம் என்பது ஒரு சிந்தனை பயிற்சியாக பார்க்கப்படுகிறது. வெவ்வேறு சந்ததிகள் குறித்து இடையறாத கேள்விகளை உள்ளுக்குள் எழுப்புவதும் தொடர்ந்து சிந்திப்பதும் ஆகும். இந்தத் தொடர் செயல்கள் மூலம் இரண்டு காரியங்கள் நிகழும். ஒன்று நமக்குள் ஒரு கருத்து தீர்மானமாக உருவாகும். மற்றொன்று, ஓர் கட்டுமானம் உருவாகும். வீடு கட்ட மனதில் ஒரு தீர்மானம் போட்டுக் கொண்டு கட்டடம் கட்டத் தொடங்குவது போல! ஆனால் இது போன்ற நிலைகளை எட்டுவதற்கு தொடர்ச்சியான தீவிர பயிற்சி தேவைப்படும். திருப்பாவை பாசுரங்கள் கூட இப்படித்தான். வாழ்வு குறித்தான நம் சிந்தனை கட்டுமானங்களை அறிந்து கொள்ள பயிற்சி செய்வது என்றும் கொள்ளலாம். நாமெல்லாம் உடற்பயிற்சி செய்கிறோமே... அது போலத்தான். உடற்பயிற்சி செய்வதால் உடல் ஆரோக்கியம் பெருகும். இப்படிப்பட்ட தத்துவங்களால், ஏற்படக்கூடிய சிந்தனை பயிற்சி மன ஆரோக்கியத்தை கொடுக்கும். இந்த தத்துவக் காட்டுக்குள் போவது கடினமாக இருந்தாலும் தீர்க்கமான சிந்தனையை நமக்குள் கடத்தும். இது நாம் வழக்கமாக அடைந்திருக்கும் பழக்கப்பட்ட பார்வைகளை உதறிவிட்டு புதிய பார்வைகளைப் பெற உதவுகிறது. சிறு சிறு கற்களாக எடுத்து வைத்துக் கொண்டே வந்தாலும் காலம் கடந்து பார்க்கும் போது பெரிய கோட்டையே உருவாகி விடும் தானே! மனதிற்குள் ஒரு கோட்டையைக் கட்ட தொடர்ந்து பயணிப்போம்... வாருங்கள்!.

-தொடரும்

பவித்ரா நந்தகுமார்

82204 78043

arninpavi@gmail.com






      Dinamalar
      Follow us