ADDED : மார் 09, 2023 11:07 AM

மாதலி
அர்ஜுனன் இந்திர லோகத்தில் இருந்து வந்த பின் குபேரன் மாளிகைக்கு தர்மன் வருவதாகச் சொல்லவும் குபேரன் புன்னகையோடு அதை மறுத்தான்.
''தர்மராஜனே! நான் சகல புவனங்களுக்கும் சென்று திரும்பும் தேவதேவன். இந்திர லோகத்துக்கு சென்று அங்கு அர்ஜுனனை நேரிலேயே காண என்னால் இயலும். இப்போதே நான் இந்திர லோகம் சென்று அர்ஜுனனை அனுப்பித் தரும்படி கூறுவேன். அவனும் நேராக இங்கே என் பட்டினத்திற்கே வந்து சேர்வான்.
ஒருமுறை இங்கு வந்து விட்ட நீங்கள், திரும்பிச் சென்று மீண்டும் வனப்பரப்பில் நடந்து என் பட்டினம் வரத் தேவையில்லை. இப்போது வந்து விட்ட நீங்கள் என் அரண்மனைக்கு வந்து என் மதிப்பிற்குரிய அதிதிகளாய் சில காலம் தங்கியிருந்து என் உபசரணைகளை ஏற்று என்னை பெருமைப்படுத்த வேண்டும்'' என்றான் குபேரன்.
தர்மர், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோரும் அதற்கு சம்மதித்தனர். அதேவேளை திரவுபதி ஆர்ஷ்டிேஷணரின் ஆசிரமத்தில் இருப்பதை உணர்ந்து, ''திரவுபதியை அழைத்து வரவாவது நாங்கள் திரும்பிச் செல்ல வேண்டும்'' என்றனர்.
''கவலை வேண்டாம். என் விமானம் திரவுபதியை அழைத்துக் கொண்டு வந்து விடும். நீங்கள் என்னோடு இப்போது அரண்மனைக்கு வாருங்கள்'' என நால்வரையும் விமானத்தில் ஏற்றிக் கொள்ள அது பயணிக்கத் தொடங்கியது. பயணத்தை பாண்டவர்கள் ரசித்தனர். காற்றானது முகத்தில் மோதிட, மேகக் கூட்டங்கள் இடை மறித்திட, விண்ணில் பறந்தபடி இருந்த பட்சியினங்கள் அவர்கள் வருகையைப் பார்த்து விலகிப் பறந்தன.
''பிரம்மன் பரிசாய் தந்த விமானம் இது. சில காலம் என் சகோதரன் ராவணன் வசம் இருந்த போது சீதையையும் இந்த விமானம் சுமந்து பறந்துள்ளது'' என்றான் குபேரன்.
அதைக் கேட்ட பாண்டவர்கள் அந்த நினைவுகளால் சிலிர்த்தனர். அதன்பின் அவர்களை குபேரனின் அரண்மனையில் விட்டு விட்டு ஆர்ஷ்டிேஷணரின் ஆசிரமத்தை அடைந்து திரவுபதியை அழைத்துக் கொண்டு திரும்பி வந்து சேர்ந்தது.
திரவுபதியை கண்ட பாண்டவர்கள் வரவேற்று நடந்தவைகளை கூறத் தொடங்கினர். பின் குபேரன் பாண்டவர்கள் தன் மாளிகையில் இருக்கும் செய்தியை இந்திரனுக்கு அனுப்பிவித்தான்.
இந்திரனும் தன் அமராவதி பட்டினத்தில் பல வித்தைகளை கற்றுக் தெளிந்தவனான அர்ஜுனன் முன் பிரசன்னமானான்.
''வந்தனம் தேவேந்திரப் பிரபு... அழைத்திருந்தால் வந்திருப்பேனே''
'' உன் சகோதரர்களோடு சேரும் காலம் வந்து விட்டது. அதைக் கூறவே வந்தேன்''
''ஓ... அதற்குள் ஐந்தாண்டு ஓடி விட்டனவா?''
''ஆம்... காலகதிக்கு எப்போதும் வேகம்தான். என் அமராவதி பட்டினத்திலோ அது கழிவதையே உணர முடியாது''
''மகிழ்ச்சி பிரபு. வனத்தில் திரிந்த என்னை விண்ணவன் என்றாக்கி வித்தைகளை எல்லாமும் கற்பித்து பலவானாக்கி விட்டீர்கள். என் நன்றிகள் என்னாளும் உரியது''
''நானும் உனக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். தேவர்களுக்கு எதிரிகளாய், கொடுமைகள் நிறைந்தவர்களாய் திகழ்ந்த நிவாத கவசர்களை எல்லாமும் எங்கள் பொருட்டு அழித்து தேவருலகுக்கு நிம்மதியையும் பெருமையையும் சேர்த்துள்ளாய். அதை நாங்களும் என்றும் மறவோம்'' என்ற இந்திரன் பாண்டவர்கள் தற்போது குபேர பட்டினத்தில் அவன் மாளிகையில் இருப்பதைக் கூறி, ''நீ அவர்களுடன் அங்கே தான் சென்று சேர வேண்டும்'' என்றான்.
''மகிழ்ச்சி. இந்திரலோகவாசியான நான் அடுத்து செல்லவிருப்பது குபேரபுரிக்கா... என் சகோதரர்களும் அங்கு உள்ளனரா... ஆஹா'' என வியந்தான் அர்ஜுனன்.
அதை தொடர்ந்து மாதலி என்ற சாரதியை அழைத்தான் இந்திரன். மாதலியும் கையில் சாட்டை, கிரீடமுடன் பிரசன்னமானான்.
மாதலியை அர்ஜுனன் முன்பே அறிவான். நிவாத கவசர்கள் எனப்படும் அசுரர்கள் விண்மிசை இந்திரனுக்கும், தேவர்களுக்கும் எதிராக பலப்பல அடாத செயல்களை செய்து வந்தனர். அவர்களை மானிடன் ஒருவனைத் தவிர வேறு எவராலும் அழிக்க முடியாது என்பது அவர்களது வரசித்தியாகும். எனவே இந்திரன் உள்ளிட்ட எவராலும் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை.
இந்நிலையில் தான் அர்ஜுனனை இந்திரன் அவர்களை நோக்கி அனுப்பிவித்தான். அப்போது அர்ஜுனனுக்கு சகல விதத்திலும் துணையாக நின்றவனே மாதலி. அந்த மாதலி திரும்பவும் பிரசன்னமாகி அர்ஜுனனை தன் ரதத்தில் அழைத்துக் கொண்டு இந்திரனின் அமராவதிப் பட்டினத்தில் இருந்து குபேரனின் அழகாபுரிப் பட்டினம் நோக்கிப் புறப்பட்டான்.
புறப்படும் முன் இந்திரன் அர்ஜுனனுக்கு திவ்ய கவசம் எனப்படும் எவராலும் எதனாலும் உடைக்க முடியாத கவசத்தையும், தேவதத்தம் எனப்படும் சங்கினையும், பின் திவ்ய கிரீடத்தையும், பின் திவ்யாஸ்திரங்களையும் அணிவித்து ஆரத்தழுவி முத்தமிட்டு பிறகே அனுப்புவித்தான்.
அதன்பின் மாதலி ரதத்துடன் விண்மிசை பயணித்தான். அர்ஜுனன் முகத்தில் சகோதரர்களைக் காணப் போகும் மகிழ்வு கூத்தாடியது. அதைக் கண்ட மாதலி, ''ப்ரபோ... இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறீர்கள்'' என பேச்சைத் தொடங்கினான்.
''ஆம். மாதலி... ஐந்து வருடப் பிரிவுக்கு பிறகல்லவா நான் என் சகோதரர்களை சந்திக்கப் போகிறேன்''
''உண்மைதான்! இந்த பாசப்பிணைப்பு எல்லாம் பூவுலகில் பிறந்தவர்களுக்குத் தான்! என் போன்ற தேவ புருஷர்களுக்கு இந்த வகை இன்பம் என்றால் என்னவென்றே தெரியாது''
''இன்ப துன்பங்களை மானிடர்க்கென்றே பிரம்மன் வகுத்துக் கொடுத்து விட்டான். என்ன செய்வது? ஆனாலும் அசுரர்களால் நீங்களும் வருந்தினீர்களே...''
''அது மானுடவருத்தம் போன்றதல்ல... எங்கள் வருத்தங்கள் வெறும் பாவனையே. எக்காலத்திலும் ஒரு தேவனின் விழிகள் கண்ணீர் விட்டு அழாது''
''அப்படி என்றால் நான்கூட இதுவரை கண்ணீர் விட்டு அழுததில்லை. கவுரவர்களால் நசுக்கப்பட்ட போது கூட கோபித்துள்ளேன் - கொந்தளித்துள்ளேன். அழுததில்லை! நல்ல ஆண்மகன் அழக்கூடாது. அழுதால் அவன் சுத்த வீரனாக மாட்டான் என எங்கள் குருவான துரோணாச்சாரியார் கூறுவார்''
''அப்படியெல்லாம் சொல்லலாம். ஆனால் அழாமல் மானிடர்களால் வாழவே முடியாது. உதாரணமாக பெற்றோரை காலன் கொண்டு செல்லும் போது கண்ணீர் தானாக வந்து விடுமல்லவா?''
''ஆம் மாதலி... நீ சொல்வது உண்மைதான்! அவ்வளவு ஏன்... இப்போது கூட என்னை குபேர மாளிகையில் விட்டு விட்டு சென்று விடுவாய். இதன்பின் நான் உன்னை எப்போது காண்பேனோ... அதை நினைக்கும் போதே கண்ணீர் வந்து விடும்''
''பிரபோ... இந்த சாரதி ஒரு சாமான்ய தேவ புருஷன். எனக்காக கூடவா அழுவீர்கள்''
''மாதலி... ஏன் உன்னை தாழ்த்திக் கொள்கிறாய்? உன்னால் அல்லவா நான் நிவாத கவசர்கள் முதல் காலகேயர்கள், பவுலோமர்கள் என்ற அசுரர்களை எல்லாமும் வெல்ல முடிந்தது?
என் வாழ்வில் மறக்க முடியாதவர்களில் நீயும் ஒருவன். இந்திர லோகத்து என் வாழ்வில் உன் நட்பும் பங்கும் தான் பெரியது'' - அர்ஜுனன் அவ்வாறு கூறவும் மாதலி முகம் பெரிதும் பிரகாசித்தது. அதேவேளை குபேரனின் அழகாபுரிப் பட்டினமும் கண்ணில் பட்டது. இந்திரனின் ரதமும் குபேரன் அரண்மனையின் முன்னால் நின்றது.
இந்திரனும் அர்ஜுனன் மாதலியுடன் வரும் தகவலை குபேரனுக்கு முன்பே தெரிவித்து விட்டிருந்ததால் குபேரன் பாண்டவர்களுடன் அர்ஜுனனை வரவேற்கத் தயாராக பூர்ண கும்பமுடன் நின்றபடி இருந்தான்.
ரதத்தை விட்டு இறங்கிய அர்ஜுனனை எதிர்கொண்டு வரவேற்கவும் செய்தான். அவன் கால்களில் விழுந்து வணங்கிய அர்ஜுனன் அடுத்து வேகமாய் சென்று காலில் விழுந்தது தர்மன் காலடிகளில் தான்!
ரதசாரதியான மாதலி அக்காட்சியைப் பார்த்து பரவசப்பட்டான். ''சரி... நாம் வந்த வேலை முடிந்தது. புறப்படுவோம்'' என மாதலி புறப்பட்ட போது, 'நில் மாதலி' எனத் தடுத்தான் அர்ஜுனன்.
-தொடரும்
இந்திரா செளந்தர்ராஜன்

