sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஷிர்டி பாபா (4)

/

ஷிர்டி பாபா (4)

ஷிர்டி பாபா (4)

ஷிர்டி பாபா (4)


ADDED : டிச 27, 2013 02:12 PM

Google News

ADDED : டிச 27, 2013 02:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிர்டியிலுள்ள வேப்ப மரத்தடியில் தியானம் செய்துகொண்டிருந்தானே வசீகரம் நிறைந்த இளைஞன் ஒருவன்! அவனை மறுநாள் காணோம். அதை அறிந்து, சொந்த மகனைத் தொலைத்தது போல், பாய்ஜா மாயி கண்களிலிருந்து கரகர வெனக் கண்ணீர் வழிந்தது. எங்கே போனான் அவன்?

தாயுள்ளம் கொண்ட அந்த பக்தையின் கண்ணீரைக் காலம் தன் பேரேட்டில் குறித்துக்கொண்டது. 'அழுதால் அவனைப் பெறலாம்' என்பதல்லவா சத்திய வாசகம்! இறைவனுக்காக அழுபவரைத் தேடி இறைவன் வராவிட்டால் அப்புறம் அவன் எப்படி இறைவனாவான்? ஷிர்டிக்கு மீண்டும் அந்த இளைஞன் வருவான் என்பதை அவள் கண்ணீரே உறுதி செய்கிறதே!

1854ல் ஷிர்டியில் நடந்த சம்பவம் இது......

சூரியதேவன் தன் ஏழுவண்ணக் குதிரைகளின் லகானைப் பிடித்துச் சுளீரென்று ஒரு சொடுக்குச் சொடுக்கினான். குதிரைகள் வேகமெடுத்துப் பாய்ந்தன. நான்கு ஆண்டுகள் கிடுகிடுவெனப் பஞ்சாய்ப் பறந்தன. அதன்பின் இன்னொரு கிராமத்தில் இன்னொரு நாள்...

நைஜாம் சமஸ்தானத்தைச் சேர்ந்த அவுரங்காபாத் பகுதியில், தூப்காவன் என்றொரு சிறிய கிராமம். சாந்த்படீல் என்ற

முஸ்லிம் பெருமகன் அங்கே வாழ்ந்து வந்தார். இறைநம்பிக்கை உடைய நல்ல மனிதர்.

யாரையும் ஏமாற்றாமல் நியாயமாக வணிகம் செய்து வாழ்பவர். ஐந்துவேளை தொழுகை நிகழ்த்துபவர்.

அன்பு மயமான அவர், ஒருநாள் சில குதிரைகளுடன் ஒரு வேலை நிமித்தம் அருகேயிருந்த அவுரங்காபாத் நகருக்குச் சென்றார். பார்த்துப் பார்த்துத்தான் பயணம் செய்தார். குதிரைகள் அவரது செல்வம் அல்லவா? அவற்றை மிக எச்சரிக்கையாகத் தான் கூட்டி வந்தார். ஆனால், வந்து சேர்ந்தபின், கணக்கிட்ட போதுதான் தெரிந்தது, அவற்றில் ஒரு பெண்குதிரையைக் காணோம்! என்ன ஆச்சரியம்! எங்கே போயிற்று அது?

ஒரு குதிரை தொலைவது என்பது அவரது செல்வத்தின் ஒரு பகுதி தொலைவதுபோல் அல்லவா? மீண்டும் ஒரு குதிரையை விலைக்கு வாங்க அவர் எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்? அவர் பதட்டத்தோடு, தான் வந்த வழியே தொலைந்துபோன குதிரையைத் தேடிச் சென்றார். ஆனால், என்ன சோதனை! குதிரை எங்கும் தென்படவே இல்லை. என்ன மாயம் இது! யார் அந்தக் குதிரையை மறைத்தார்கள்?

இரண்டு மாதங்கள் மிகுந்த முயற்சியுடன் தேடித் தேடிப் பார்த்தார். கண்டுபிடிக்க இயலவில்லை.

உண்ணும்போதும் உறங்கும்போதும் தொலைந்துபோன குதிரையைப் பற்றித்தான் அவருக்குச் சிந்தனை. மிகவும் சோர்வடைந்தார். 'யாருக்கு என்ன கெடுதல் செய்தேன், என் குதிரை இப்படித் தொலைவானேன்!' என்று அவர் உள்ளம் மருகியது. அவர் உடல் மெலியத் தொடங்கியது.

ஒருநாள் இன்று எப்படியும் குதிரையைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னந்தனியாய், மீண்டும் முன்னர் தேடிச் சென்ற பாதையிலேயே நடந்து தேடலானார்.

காட்டுப் பாதை. கல்லும் முள்ளும் காலைக் குத்திக் கிழித்தன. எங்கேதான் போயிருக்கும் குதிரை? ஏதாவது மரத்தடியில் புல் மேய்ந்து கொண்டிருக்குமோ என்று பல இடங்களில் தேடினார். குளம் குட்டைகளில் தண்ணீர் அருந்திக் கொண்டிருக்குமோ என்று அங்கெல்லாம் போய்ப் பார்த்தார். எங்கு தேடியும் காணவில்லை. நடந்து நடந்து கால்கள் வலிகண்டதுதான் மிச்சம்.

மிகுந்த ஏமாற்றத்துடன் தளர்ந்த நடையோடு வந்த வழியே திரும்பி நடக்கலானார். இனி, தன் குதிரை மீண்டும் தனக்குக் கிடைக்கும் என்ற எண்ணம் அவர் மனத்திலிருந்து விடைபெறத் தொடங்கியது.

அப்போது ஒரு மாமரத்தின் நிழலில் ஒரு பக்கிரி அமர்ந்திருப்பதைப் பார்த்தார். தலையில் ஒரு குல்லாய். நீண்ட அங்கி. கையில் சட்கா என்னும் குட்டையான ஒரு தடி.

'ஏ சாந்த்படீல்!' என்று கூவி அழைத்தார் பக்கிரி. சாந்த்படீலுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

'யார் இவர்? கானகத்தில் தன்னந்தனியே அமர்ந்திருக்கும் இவருக்குத் தன் பெயர் எப்படித் தெரியும்?'

அந்த அழைப்பில் தென்பட்ட அளவற்ற கம்பீரமும், குரலில் தென்பட்ட இனிமையும், உடனடியாக அந்தக் குரலுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தின.

வியந்தவாறே அந்த அதிசயப் பக்கிரியின் அருகே வந்தார் அவர். நெருங்க நெருங்கக் காந்தம் இரும்பை இழுப்பதுபோல் அவர் தன்னை இழுப்பதாக உணர்ந்தார். அவர் பக்கத்தில் செல்லும்போது மனத்தில் ஒரு சாந்தி தோன்றுவதையும், தன் உள்ளச் சுமை குறைந்து இதயமே லேசாவதையும் உணர்ந்தார்.

அந்தக் கானகத்திற்கு அந்தப் பக்கிரி எப்போது எப்படி வந்தார் என்று தெரியவில்லை. பல ஆண்டுகளாக, ஏன் பல நூற்றாண்டுகளாக அதே கானகத்தில் வசிப்பவர் போல் தோன்றினார். அவரைச் சுற்றி இனம் புரியாத ஒரு புனித ஒளி பரவியிருந்தது. அவரது பால்வடியும் முகத்தைப் பார்க்கப் பார்க்கப் பரவசம் ஏற்பட்டது.

என்ன தூய்மையான முகம்! எந்த மனிதரிடமும் இத்தகைய பளிங்குபோன்ற முகத்தை சாந்த்படீல் பார்த்ததே இல்லை. இந்த முகம் உடையவரைப் பளிங்குச் சிலையாகவே ஆக்கி, பின்னால்

மக்கள் வழிபட்டுப் பலன் பெறப் போகிறார்கள் என்றெல்லாம் சாந்த்படீலுக்கு அப்போது தெரியாது.

''ஹரே சாந்த்படீல்! உன் காணாமல் போன பெண்குதிரையை இங்கே தேடினால் எப்படியப்பா கிடைக்கும்? வடக்குப் பக்கமாகப் போ. ஒரு பெரிய ஆலமரத்தடியில் நின்று கொண்டிருக்கிறது உன் குதிரை. போய்ப் பார்!''

சாந்த்படீல் ஏதொன்றும் பேசாமல் அவரை வணங்கிவிட்டு அவர் சொன்னபடியே, விசை முடுக்கப்பட்ட பொம்மை மாதிரி, வடக்குப் பக்கம் நோக்கி நடந்தார். கொஞ்ச தூரம் நடந்ததும் அவர் கண்ட காட்சி! மகிழ்ச்சியில் அவருக்குத் தொண்டை அடைத்தது.

அந்தப் பக்கிரி சொன்னது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மைதான். குதிரை அங்கேதான் சாதுவாய்த் தன் எசமானனை எதிர்பார்த்துக் காத்திருந்தது! அவரைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் கனைத்தது.

தான் முன்னரே இந்த இடத்தில் தேடினோமே? அப்போது குதிரை இங்கே இருந்ததாய்த் தெரியவில்லையே? குதிரை இங்கிருப்பதை இடத்தை விட்டு நகராமலே எப்படிக் கண்டுபிடித்தார் அந்தப் பக்கிரி?

அது இருக்கட்டும். தான் யார் என்பதும், குதிரையைத் தான் தேடும் விவரமும் அவருக்கு எப்படித் தெரிந்தன? சந்தேகமில்லாமல் அவர் பெரிய மகானாகத் தான் இருக்க வேண்டும்.

சாதுவாய்த் தன்னைத் தொடர்ந்த குதிரையை அழைத்துக் கொண்டு, மீண்டும் பக்கிரியை நோக்கி நடந்தார் சாந்த்படீல். தன் குதிரையைக் கண்டுபிடித்துக் கொடுத்த அவருக்கு பணிவு கலந்த வணக்கம் தெரிவித்தார். அவருக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. வெகுதூரம் நடந்த களைப்பு. கடுமையான தாகம் தொண்டையை வாட்டியது.

''என்னப்பா! தாகத்தால் தவிக்கிறாய் போலிருக்கிறதே? தண்ணீர் வேண்டுமா உனக்கு?'' பரிவோடு கேட்டார் அந்த அதிசயப் பக்கிரி.

அடுத்த கணம் நடந்த சம்பவத்தைப் பார்த்து ஏறக்குறைய மயங்கிவிழும் நிலைக்கு ஆளானார் சாந்த்படீல்...

அருள்மழை கொட்டும்

திருப்பூர் கிருஷ்ணன்






      Dinamalar
      Follow us