
பெண்ணுரிமை பேசியவள்
ஏறக்குறைய 1100 ஆண்டுகள் முன்பு... சேர நாட்டில் இருந்த (மலையாள ராஜ்யம்) பந்தளம் அரண்மனையில் ஒரு கொடுங்கோல் படைத்தலைவன் தன் படைகளுடன் புகுந்து துவம்சம் செய்து கொண்டிருந்தான். அவன் பாண்டிய மன்னனால் சேர நாட்டுக்கு அனுப்பப்பட்டவன்.
பாண்டிய மன்னருக்கு சேர நாட்டை பிடிக்க வேண்டுமென்ற ஆசையெல்லாம் கிடையாது. ஆனால் பாண்டிய நாட்டு வணிகர்கள் சேர நாட்டுக்கு வியாபாரத்திற்கு செல்லும் போது, எரிமேலி, கரிமலை வழியைப் பயன்படுத்தினர். அந்தக் காட்டுப் பாதையே வணிகர்களுக்கு வண்டிச் செலவை குறைப்பதாக இருந்தது. வேறு வழிகளில் சுற்றி சென்றால், நாளும் அதிகம் பிடிக்கும். செலவும் அதிகமாகும். விலையைக் கூட்டி விற்றால், மக்கள் பொருட்களை வாங்கத் தயங்குவர். அதே நேரம் காட்டுப் பாதையில் கொள்ளையர் தொல்லை அதிகம். அவர்கள் வியாபாரிகளின் பொருள், பணத்தைக் கொள்ளையடித்தனர். கொடுக்க மறுத்தவர்களைக் கொன்றனர்.
இதுபற்றி பந்தள மன்னருக்கு பாண்டிய மன்னர் தகவல் தெரிவித்தார். 'பாண்டிய நாட்டு வணிகர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள், கொள்ளையர்களைப் பிடியுங்கள்' என்று ஓலை அனுப்பப்பட்டது. பந்தள மன்னர் அதைக் கண்டு கொள்ளவில்லை. கோபமடைந்த பாண்டிய மன்னர், இனி சேர நாடும் நம் வசம் இருந்தால் தான், நம்மால் தொழில் செய்ய முடியும் என்ற முடிவுக்கு வந்தார். இதையடுத்து தன் படைத்தலைவன் உதயணனை அழைத்து,“உதயணா! நீ சேர நாட்டுக்குச் செல். அந்த நாட்டு மன்னரிடம், “எங்கள் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள். இல்லையெனில் நாட்டை எங்களிடம் ஒப்படைத்து விட்டு, பதவி விலகுங்கள் என எச்சரிக்கை விடு. அவர் அதற்கு செவி சாய்க்காவிட்டால், முறைப்படி போர் நடத்து. சேரனை வெற்றி கொண்டு, நாட்டை நம் வசம் கொண்டு வா” எனச் சொல்லி, பெரும்படையுடன் அனுப்பினார்.
உதயணன் ஒரு கொடுங்கோலன். பாண்டிய மன்னரிடம், தங்களின் ஆணைப்படி நடப்பதாக கூறி விட்டு சேர நாட்டை அடைந்ததும் இரக்கமில்லாமல் நடந்தான். பந்தளம் அரண்மனையில் கண்ணில் கண்ட பெண்களை எல்லாம் சிறை பிடித்தான்.
பந்தள மன்னருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர் தப்பி ஓடிவிட்டார். மன்னருக்கு ஒரு மகள் இருந்தாள். உதயணன் கையில் சிக்கினால், தன் கதி அதோகதி என பயந்தாள். ஆனால் உதயணனிடம் சிக்கி விட்டாள். ராஜகுமாரி கிடைத்தால் உதயணன் விடுவானா! அவள் மிகவும் புத்திசாலி. உதயணனுக்கும், அவனது படை வீரர்களுக்கும் எப்படியோ போக்கு காட்டி அங்கிருந்து தப்பி விட்டாள்.
கடும் கோபமடைந்த உதயணன், எங்கெல்லாமோ தேடியும் அவள் கிடைக்கவில்லை. அவள் சேர நாட்டின் அடர்ந்த காட்டுக்குள் சென்று விட்டாள். மனிதப்புலிகளிடம் தப்பிய அவளை விதி விரட்டியது. நிஜப்புலி ஒன்றிடம் அகப்பட்டுக் கொண்டாள். அது அவளைத் துரத்தியது. அவளது கூக்குரல் காடெங்கும்
எதிரொலித்தது. காட்டில் வசித்த இளைஞன் ஒருவன் காதில் அது விழுந்தது. அவன் வில், அம்புடன் எதிரே அந்த இடத்திற்கு சென்றான். புலிக்குப் பயந்த அந்த பெண் மான் அவன் கண்ணில் பட்டாள்.
அவன் அம்பை புலி மீது எய்தான். காயமடைந்த புலி தப்பி ஓடி விட்டது. புலி அங்கிருந்த சென்ற பின், இளைஞன் முன் நாணத்துடன் வந்து நின்றாள் ராஜகுமாரி. அவன் கையில் தான் வில், அம்பே தவிர, காவி உடை. குறுந்தாடியுடன் ஒரு துறவியைப் போல் காணப்பட்டான்.
“தங்கள் உதவிக்கு மிக்க நன்றி” என்றாள் தலை நிமிராமல்..!
“நீ யார். இந்த அடர்ந்த காட்டிற்குள் ஏன் வந்தாய். இங்கு வந்தவர்கள் வனவிலங்குகளுக்கு இரையாவது உறுதி. வழி மாறி வந்து விட்டாயோ. பரவாயில்லை. உன் வீடு எங்கிருக்கிறது என சொல். நானே கொண்டு விட்டு விடுகிறேன்...'' அவன் படபடவென பேசினான்.
தன்னை ராஜகுமாரி என்று சொன்னால், அவன் சேர்த்துக் கொள்வானோ மாட்டானோ என்ற பயத்தில், உண்மையை மறைத்த அவள், “நான் சேர நாட்டை சேர்ந்தவள். பாண்டியர் படை எங்கள் நாட்டுக்குள் புகுந்து, பல பெண்களைத் துாக்கிச் சென்றது. நான் என் கற்பைக் காத்துக் கொள்ள, இந்தக் காட்டுக்குள் தப்பி வந்தேன். என் வீடும் தரை மட்டமாக்கப்பட்டு விட்டது. அங்கு நடந்த களேபரத்தில், என் தந்தையும் காணாமல் போய் விட்டார். இனி என் தேசத்துக்கு சென்றாலும், என் மானத்துக்கும், உயிருக்கும் ஆபத்து நேரும். உங்களைப் பார்த்தால் நல்லவராகத் தெரிகிறது. நான் உங்களுடனேயே தங்கி விடுகிறேன்.
என்னைத் திருமணம் செய்து கொள்வீர்களா” என்றாள் அந்தப் பேரழகி.
அவன் கலகலவென சிரித்தான்.
“பெண்ணே! நான் ஒரு தபஸ்வி. ஏறத்தாழ முனிவர் போல் வாழ்பவன். என் வயதைக் கொண்டு, எனக்கு இல்லறத்தில் விருப்பம் இருக்கும் என நினைக்காதே. உன் தேசத்திலேயே உன்னை பத்திரமாக வாழ வைப்பது என் பொறுப்பு. என்னுடன் புறப்படு” என்றான்.
அவள் மறுத்து விட்டாள். அத்துடன் பிடிவாதமாகவும் பேசினாள். ராஜகுமாரி அல்லவா! உத்தரவு இட்டே பழகியவள். மற்றவர்களின் கருத்துக்கு கட்டுப்படுவாளா என்ன. அவள் தன் பேச்சாலேயே அந்த இளைஞனை மடக்கினாள்.
“இளைஞரே! தாங்கள் யார் என்று கூட விசாரிக்காமல், உங்களைத் திருமணம் செய்ய சம்மதித்தேன். ஏனெனில் உங்கள் முகமே உங்களை நல்லவர் என காட்டுகிறது. நீங்கள் தவவாழ்வில் அக்கறை கொண்டவராக இருக்கலாம். அதற்கு நான் தடை ஏதும் சொல்லவில்லையே. அகத்தியர் முனிவர் தான். அவர் லோபமுத்திரையை திருமணம் செய்து கொள்ளவில்லையா! அத்திரியைத் தெரியுமல்லவா! அவரும் முனிவர் தான், அவருக்கு அனுசூயா மனைவி தானே! இன்னும் நம் முனிவர்கள் எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள். எல்லாருக்கும் முனிபத்தினிகள் இருந்தனர். அவர்களுக்கு குழந்தைகளும் உண்டு. அந்த நியாயப்படி, நீங்களும் என்னைத் திருமணம் செய்து கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்!
நான் கேட்பதில் தவறு இருக்கிறதா!
பதிலளியுங்கள். மேலும் ஒன்றைச் சொல்கிறேன். ஆண்கள் மட்டுமே தவவாழ்வுக்கு உரியவர்கள், பெண்களால் முடியாது என்று நீங்கள் முடிவு கட்டியிருக்கிறீர்கள். எங்களாலும் இல்வாழ்வில் இருந்தபடியே தவவாழ்வு வாழ முடியும். நான் அதை நிருபித்துக் காட்டுகிறேன்” என்று பெண்ணுரிமையும் பேசினாள் அவள்.
அவளது பேச்சில் இருந்த நியாயத்தை இளைஞனால் மறுக்க முடியவில்லை. காட்டில் வளர்ந்திருந்த மலர்களைப் பறித்து வந்து அவளிடம் கொடுத்தான். அவள் அதை மாலையாக்கினாள். சூரியன் வானத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். அவனை சாட்சியாக வைத்து, அவள் கழுத்தில் மாலை சூட்டினான் இளைஞன். அவர்கள் திருமணம் இனிதே முடிந்தது.
மாதங்கள் சில கடந்ததும், அவன் முன்னால் ராஜகுமாரி வந்து நின்றாள்.
“அன்பரே! உங்களிடம் ஒரு உண்மையை மறைத்து விட்டேன். கணவனிடம் ஒரு மனைவி உண்மைகளை மறைத்து வைப்பது என்பது அழகல்ல. என் மனசாட்சி என்னைக் குத்துகிறது” என்றாள்.
அதென்ன உண்மை... அதை அறியும் ஆவலிலும், சற்றே கோபத்திலும் இளைஞனின் நெற்றி ரேகை சுருங்கியது.
- தொடரும்
தி. செல்லப்பா
thichellappa@yahoo.com