sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 25

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 25

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 25

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 25


ADDED : ஜூலை 02, 2023 10:39 AM

Google News

ADDED : ஜூலை 02, 2023 10:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முத்கலர்

காம்யக வனத்திற்கு வந்த பாண்டவர்கள் அங்கே பாய்ந்தபடி இருக்கும் ஒரு ஆற்றோரமாக குடில் ஒன்றை அமைத்துக் கொண்டு வனவாச காலத்தின் எஞ்சியுள்ள நாட்களை கழிக்கத் தொடங்கினர்.

இந்த வனத்தில் தான் வியாச மகரிஷி பாண்டவர்களைச் சந்தித்தார். மார்க்கண்டேயரால் முந்தைய யுகங்களில் நிகழ்ந்த பல சம்பவங்களை தெரிந்து கொண்டிருந்த பாண்டவர்கள் வியாசரையும் வரவேற்று உபசரித்தனர்.

மகிழ்ந்த வியாசரும் பாண்டவர்களை தன் எதிரில் அமரச் செய்து அவர்களோடு உரையாடினார். வியாசருக்கு உணவு படைக்க வேண்டி பீமன் காட்டில் திரிந்து மூங்கில் அரிசி, தினை, தேன், பழங்கள், பால் என சகலத்தையும் கொண்டு வந்திருந்தான். அதை அறிந்த வியாசர், ''பீமா... உன்னைப் பார்க்கும் போது உடம்போடு சொர்க்கத்துக்கு சென்ற மகரிஷி முத்கலரின் நினைவு தான் வருகிறது'' என்றார். அதைக் கேட்ட பாண்டவர்கள் வியப்புடன், ''உடம்போடு சொர்க்கம் செல்வது என்பது அத்தனை பெரிதா? அந்த முத்கலர் யார்? அவரைப் பற்றி அறிய விரும்புகிறோம்'' என்றனர்.

வியாசரும் விளக்கம் அளித்தார். ''என் இனிய சகாக்களே! நல்ல கேள்வியை என்னிடம் கேட்டு உள்ளீர்கள். எப்போதுமே தானறிந்த நல்லவைகளை பிறர் அறிந்திடச் சொல்வது நற்செயல். அதிலும் முத்கலர் வாழ்க்கை நமக்கெல்லாம் முன் உதாரணம்.

உடம்போடு சொர்க்கம் செல்வது பற்றி கேட்டீர்கள். இந்த உடம்பு என்பதே காமத்தின் விளைவு தான். ஆணும் பெண்ணும் சிற்றின்பத்தால் சேரப் போய் உருவான ஒன்று தானே இது? இது எத்தனை மேலானதோ அத்தனை கீழானதும் கூட!

மாறக்கூடிய எந்த ஒன்றும் அழியவும் கூடியதே... நம் உடலும் அப்படிப்பட்டதே. குழந்தையாகப் பிறக்கிறோம். அப்படியே இருக்கிறோமா... முதுமை கண்டு முடங்கிப் போகிறோம்... அப்படிப்பட்ட உடலுடைய நாம் எல்லாரும் யோனிகள். காமக் கலப்பில் பிறவாதவர்களே அயோனிகள். யோனிகளான நமக்கு, 'பசி, தாகம், நரை, திரை, மூப்பு' என ஐந்தும் உண்டு. பசியால் மலம், தாகத்தால் மூத்திரம், நரையால் வியர்வையும், திரையால் பீளையும், மூப்பினால் வியாதிகளும் அதன் மறுபக்கங்களாக உருவாகின்றன.

எனவே இந்த உடல் சார்ந்த மனித வாழ்வு அழிவுக்கும், பாவ புண்ணியத்திற்கும் ஆட்பட்ட ஒன்று. இந்த உண்மைகளை உணர்ந்து உடம்பால் செய்யப்படும் காரியங்களை கிருஷ்ணார்ப்பணம் செய்து ஆத்ம விடுதலை பெற வேண்டும். தவறினால் திரும்பத் திரும்ப பிறந்து பல்லாயிரம் வருடங்கள் பூமியில் பலப்பல வாழ்க்கையை வாழ நேரிடும் என உடல் குறித்த விளக்கம் அளித்த வியாசர், ''இந்த உடம்போடு எவரும் இந்த மண்ணில் இருந்து விண்ணகம் சென்றதில்லை. செல்லவும் முடியாது. இது பராசர புத்திரனான எனக்கும் பொருந்தும். ஆனாலும் எல்லாவற்றுக்கும் விதிவிலக்கு இருப்பது போல இதற்கும் விதிவிலக்காக வாழ்ந்து அழியும் இந்த உடம்போடு அப்படியே சொர்க்கத்துக்கு சென்றவரே முத்கல மகரிஷி'' என அவரை அறிமுகப்படுத்தினார்.

அதற்கான காரணத்தையும் கூறத் தொடங்கினார். ''பாண்டு புத்திரர்களே! வாழும் நாளில் இந்த உடம்பைக் கொண்டே செயல்படுகிறோம். இந்த உடம்பாலேயே துன்பப்படவும், இன்பம் அடையவும் செய்கிறோம். ஒன்றை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். உடம்பால் விளையும் இன்பமும் சரி, துன்பமும் சரி. மலிவான ஒன்றே! எனவே உடம்பை நம் மனதில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இன்ப துன்பங்களை சமமாகக் கருதி நாம் வாழ்ந்திட வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. முத்கலரோ தன் உடம்பை முழுமையாக தன் மனக்கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒருவர் ஆவார். உடம்பின் பசிக்கு எளிய உணவையே உண்பார். உஞ்ச விருத்தி மூலம் கிடைக்கும் நெல் மணிகளைக் கொண்டே பசியாறினார்'' என்று கூற பாண்டவர் உஞ்சவிருத்தி பற்றி அறிய விரும்பி, ''மகரிஷி... அது என்ன உஞ்சவிருத்தி. அதைப் பற்றி முதலில் கூறுங்கள்'' என்றான் நகுலன்.

''சொல்கிறேன். களத்து மேட்டில் அறுவடையான நெற்கதிர்களை அடித்துத் துாற்றியே பயிர்களிடம் இருந்து நெல்லைப் பிரிப்பார்கள். பின்பு மூடையாகக் கட்டிச் சென்று உரலில் இட்டு உலக்கையால் இடித்து உமியைப் பிரித்து அரிசியை எடுப்பார்கள். இந்த அரிசியே நமக்கான அன்னமாகிறது. இதைப் பொங்கச் செய்தால் சோறு, சுண்டச் செய்தால் கஞ்சி, உருண்டையாக்கினால் பிண்டம் என்கிறோம். சோற்றையே வாழும் மக்கள் விரும்புவர். யோகிகளோ கஞ்சியை விரும்புவர். முத்கலர் ஒரு யோகி. எனவே இவர் உணவும் அரிசிக்கஞ்சி தான்! உப்பு சேர்க்காமல் பால், தயிர் சேர்த்து சாப்பிட பசியடங்கும். கஞ்சிக்கான இந்த அரிசியை முத்கலர் களத்து மேட்டில் தான் பொறுக்கி எடுத்து சேகரிப்பார். அதாவது களத்து மேட்டில் மூட்டை கட்டப்பட்டது போக எஞ்சிக் கிடக்கும் நெல்மணிகளே அவை. அவற்றை எடுத்து வந்து உண்டு வாழ்வதே உஞ்ச விருத்தி'' என விளக்கம் அளித்த வியாசர், முத்கலரின் வாழ்வில் உஞ்சவிருத்தி செய்த அதிசயத்தையும் தொடர்ந்து கூறத் தொடங்கினார்.

''அருமைப் பாண்டவர்களே! இவ்வாறு உஞ்ச விருத்தி செய்து உயிர் வளர்ப்பது என்பதே ஒரு தவத்திற்கு இணையான செயலாகும். எதற்காக இப்படி மணிமணியாக சேகரித்து சிரமப்பட வேண்டும்? நெற்கதிர் மணிகளை துாற்றி எடுத்து சாப்பிட்டால் என்ன குறைந்து விடும்? அதுதானே புத்திசாலித்தனம் என்ற கேள்வி எழும். இது துறவிக்குப் பொருந்தாது.

ஒரு துறவி தான் வாழ யாசகம் பெற வேண்டும். யாசகம் கூட பெறாமல் அதையும் துறந்து வாழ்ந்திடும் ஒரு வாழ்க்கை முறையே உஞ்சவிருத்தி வாழ்க்கை முறை. வயலிலுள்ள களத்து மேட்டில் மிஞ்சிக் கிடப்பதை பொறுக்கி எடுப்பதும், வீதிகளில் நடந்து போய் வீடுகளில் மிஞ்சி இருப்பதை பெறுவதும் கூட உஞ்சவிருத்தி எனப்படுகிறது.

ஒரு கடைநிலை துறவியாக களத்திற்குச் சென்று நெல்மணிகளைப் பொறுக்கி எடுத்து வந்து அதைச் சமைத்து வாழ்ந்த முத்கலர் உடம்பை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். எந்த ஆசைக்கும் இடம் தராமல் மனஉறுதி படைத்தவராக விளங்கினார். இப்படி ஒரு உறுதி மிகுந்த வாழ்க்கையை ஒருவர் தொடர்ந்து வாழ்வது மிக கடினம். சிலகாலம் வாழலாம். வாழ்நாள் முழுவதும் வாழ்வது இயலாத காரியம். ஆனால் முத்கலர் வாழ்நாள் முழுவதும் அதே உறுதியுடன் அல்ப ஆசைகளுக்கு இடம் தராமல் வாழ விரும்பி அவ்வாறே வாழவும் செய்தார். முத்கல மகரிஷி இப்படி வாழ்வதை கேள்விப்பட்ட துர்வாச மகரிஷி ஆச்சரியப்பட்டார். துர்வாசர் பெரும் கோபக்காரர். தவம் புரியும் அவர் கோபம் வந்தால் பிறரை சபித்து விடுபவர்.

அப்படிப்பட்ட துர்வாசர் முத்கலரை காண வந்தார். முத்கலரை சோதித்து அவரும் ஒரு சாமான்யரே என காட்ட முனைந்தார். களத்து மேட்டில் கஷ்டப்பட்டு எடுத்து வந்த நெல்மணிகளைக் கஞ்சியாக்கி குடிக்கப் போகும் சமயம், ''எனக்குப் பசிக்கிறது. எனக்கும் தாருங்கள்'' என கேட்டு முத்கலருக்கான கஞ்சியை துர்வாசர் குடித்து விட்டார்.

முத்கலர் திரும்பவும் நெல்மணிகளை பொறுக்கி எடுத்து வந்து கஞ்சி காய்ச்சிடும் சமயம் திரும்பவும் வந்து எனக்கு பசிக்கிறது என்று கூறி அதையும் வாங்கிக் கொண்டார்.

இவ்வாறு ஆறுமுறை துர்வாசர் நடந்தார். முத்கலர் பசியால் துவண்ட போதிலும் கோபப்படவோ, முடியாது என்றோ சொல்லவில்லை. மாறாக புலனடக்கத்தோடு துர்வாசருக்கு உணவளித்த முத்கலர் ஒரு கட்டத்தில் நடக்கக் கூட சக்தியற்று மயங்கி விழுந்தார். அதைக் கண்ட துர்வாசர் வருந்தி அவர் மயக்கத்தை தெளிவித்து அவரை மிக மேலானவராக ஏற்று வணங்கினார்.



-தொடரும்

இந்திரா செளந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us