/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
பூப்போல பூப்போல பிறக்கும் பால்போல் பால்போல சிரிக்கும்!
/
பூப்போல பூப்போல பிறக்கும் பால்போல் பால்போல சிரிக்கும்!
பூப்போல பூப்போல பிறக்கும் பால்போல் பால்போல சிரிக்கும்!
பூப்போல பூப்போல பிறக்கும் பால்போல் பால்போல சிரிக்கும்!
ADDED : செப் 12, 2012 12:32 PM

குழந்தை இல்லாத குறை பெரும் குறை. குழந்தை இல்லாதவர்கள் பக்கத்து வீட்டுக் குழந்தைகளை ஏக்கத்துடன் பார்ப்பார்கள். இந்தக்குறை தீர, மைசூரு அருகிலுள்ள தொட்டமளூரில் தவழும் வடிவிலான கிருஷ்ணரைத் தரிசித்து வாருங்கள். உங்கள் இல்லத்திலும் மணிப்பயல் பிறப்பான்.
அப்ரமேயர்:
இங்கே மூலவர் 'அப்ரமேயர்' எனப்படுகிறார். 'அப்ரமேயன்' என்ற சொல்லுக்கு 'எல்லையில்லாதவன்' என்று பொருள். விஷ்ணு சகஸ்ரநாமத்தில் பெருமாளுக்கு 'அப்ரமேயன்' என்னும் திருநாமம் வருவது குறிப்பிடத்தக்கது. பிரம்மாண்ட புராணத்தின் 12வது அத்தியாயத் தில் இந்த கோயில் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கன்வா நதி இந்தக் கோயிலை ஒட்டிப் பாய்கிறது. சகுந்தலையை வளர்த்த கன்வமகரிஷி இப்பகுதியில் வசித்ததன் அடிப்படையில் இந்த நதிக்கு இப்பெயர் ஏற்பட்டது.
இவ்வூர் ஒருகாலத்தில் மணலூர் எனப்பட்டது. பின்னர் மறளூர் என்றாகி மளூர் என்றாகி விட்டது. நான்காம் நூற்றாண்டில் மளூரில் அப்ரமேயர் கோயில் கட்டப்பட்டது. ராஜேந்திர சிம்ம சோழமன்னன் இக்கோயிலைக் கட்டியதாக கல்வெட்டு தகவல்கள் கூறுகின்றன. பழம்பெருமை வாய்ந்த இந்தக் கோயிலுக்கு வியாச ராஜர், புரந்தரதாசர், ராகவேந்திரசுவாமி ஆகியோர் வந்துள்ளனர்.
நவநீதகிருஷ்ணன்:
இங்கிருக்கும் குழந்தைக் கண்ணன், சுருட்டை முடியை மழிய சீவியிருக்கிறான். கழுத்தில் புலிநகமாலை, முத்துமாலை, மாங்காய் கம்மல், வங்கி, வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு என ஏராளமான நகைகளை அணிந்திருக்கிறான். பாதத்தில் சங்கு, சக்கர ரேகைகள் உள்ளன. கையில் வெண்ணெய் உருண்டை வைத்திருக்கிறான். இப்படி தவழும் கோலத்திலுள்ள கிருஷ்ணனை இந்தியாவில் வேறு எங்கும் தரிசிக்க முடியாது.
புரந்தரதாசர் வருகை:
மகாராஷ்டிராவைச் சேர்ந்த நவரத்தினவியாபாரியான வரதநாயக்கரின் மகன், சீனிவாசன் தந்தையைப் போலவே வியாபாரத்தில் ஏராளமாக சம்பாதித்தார். ஆனால், தானம் செய்யும் குணம் இல்லை. திருமால் சீனிவாசனை ஆட்கொள்ள முடிவு செய்தார். ஏழையாக வடிவெடுத்து சீனிவாசனிடம் சென்று உதவிகேட்க, அவர் மறுத்துவிட்டார். சீனிவாசனின் மனைவி இரக்கம் கொண்டவள். அவள் அந்த ஏழையிடம் தன் நகையைக் கொடுத்தாள். அவர் அதை சீனிவாசன் கடையிலேயே அடகு வைக்க வந்தார். அது தன் மனைவியுடையது என்பதைக் கண்டுபிடித்த சீனிவாசன், வீட்டுக்கு வந்து நகையைப் பற்றி மனைவியிடம் கேட்டார். அவள் பயத்தில் விஷம் குடிக்க முயன்றபோது, கிண்ணத்துக்குள் அந்த நகை கிடந்தது. அந்த நகையில் இருந்து கிளம்பிய ஒளி அவன் மனதை மாற்றியது. பின்னர் கடைக்கு வந்து பார்த்தபோது அந்த ஏழையைக் காணவில்லை. வந்தவன் பாண்டுரங்கன் என்பதை உணர்ந்த சீனிவாசன் பல பாடல்கள் பாடினார். அவர் புரந்தரனின்(திருமால்) பக்தரானதால் 'புரந்தரதாசர்' எனப்பட்டார்.
அவர் ஒருமுறை தொட்டமளூர் கண்ணனைத் தரிசிக்க வந்தார். அப்போது கோயிலை மூடி விட்டார்கள். உடனே அவர்,'ஜகத்தோத்தாரணா' என்று துவங்கும் பாடலைப் பாடினார். கோயில் கதவு திறந்தது. கண்ணன் உள்ளிருந்து புரந்தரதாசரை எட்டிப் பார்த்தான்.
தேவகிக்கு கூட கிடைக்காத பாக்கியம்: கண்ணன் தவழ்ந்து வரும் அழகை அவனைப் பெற்ற தேவகிக்குக் கூட பார்க்க கொடுத்து வைக்கவில்லை. காரணம், அவள் சிறையில் இருந்தாள். ஆயர்பாடியின் யசோதைக்கும், ஆயர்பாடி மக்களுக்கும் அந்த நற்பேறு கிடைத்தது. அதே பாக்கியம் தொட்டமளூர் சென்றால் நமக்கும் கிடைத்துவிடும்.
குழந்தை வரம்:
குழந்தையில்லாதவர்கள் இந்தக் கண்ணனை வழிபட அதிகமாக வருகின்றனர். இவருக்கு வெண்ணெய் நைவேத்யம் செய்து குழந்தை வரம் வேண்டுகிறார்கள். குழந்தைபாக்கியம் கிடைத்ததும் தங்கம், வெள்ளி, மரத்தொட்டில்களைச் செய்து காணிக்கையாக்குகிறார்கள். சிறு அளவிலான இந்த தொட்டில்கள் கண்ணனின் சந்நிதி உச்சியில் கட்டப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக குழந்தை இல்லாதவர்கள் கூட இங்கு வந்து அந்த பாக்கியத்தைப் பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வேதாந்த தேசிகர், இவ்வூர் கிருஷ்ணன் அருளால் ஒரு மகனைப் பெற்று, நயினார் ஆச்சாரியார் என பெயர் வைத்தார். அவர் குழந்தை கண்ணன் பற்றி 20 பதிகங்கள் பாடியுள்ளார்.
பிற தெய்வங்கள்:
தாயார் அரவிந்தவல்லி தனி சந்நிதியில் அழகே வடிவாய் காட்சியளிக்கிறாள். உற்சவர் அப்ரமேயருடன் ஸ்ரீதேவி, பூதேவி காட்சி தருகின்றனர். கோயிலின் முன்னால் ராஜகோபுரம் உள்ளது.
இருப்பிடம்:
பெங்களூரு-மைசூரு ரோட்டில் 50கி.மீ., தூரம். சென்னபட்டணத்தை தாண்டி உள்ளது.
போன்:
080 720 0015, 094480 58057, 094480 77348.