/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
குறும்பு செய்யும் அரும்பு வேண்டுமா!
/
குறும்பு செய்யும் அரும்பு வேண்டுமா!
ADDED : செப் 12, 2012 12:39 PM

சிலகுழந்தைகள் அமைதியாக சமர்த்தாக இருப்பார்கள். சிலர் செய்கிற குறும்போ தாங்காது. கிருஷ்ணனிடம் யசோதை பட்ட பாட்டை, அவரது வரலாற்றில் இருந்து அறிகிறோம். அவரைப்போலவே, துறுதுறு குறும்புக்குழந்தை பிறக்க வேண்டுமானால், திருநெல்வேலி அருகிலுள்ள மருதூர் நவநீதகிருஷ்ணன் கோயில் சின்னக்கண்ணனை வணங்கி வாருங்கள்.
தல வரலாறு:
கிருஷ்ணர் குழந்தையாக இருந்த போது, அவரது தாய் யசோதை உரலில் கட்டிப் போட்டாள். கிருஷ்ணன் அந்த உரலை இழுத்துக்கொண்டே சென்றார். ஊடே ஒரு மருதமரம் இருந்தது. அது ஒடிந்து விழுந்தது. நளகூபன், மணிக்ரீவன் என்ற கந்தர்வர்கள் ஒரு முனிவரிடம் பெற்ற சாபத்தின் காரணமாகவே, அங்கு மருதமரமாக நின்றனர். கிருஷ்ணரின் அருளால் அவர்கள் முக்தியடைந்தார்கள். இந்த நிகழ்வின் அடிப்படையில், மருதமரங்கள் நிறைந்த மருதூரில் கிருஷ்ணர் கோயில் அமைக்கப்பட்டது. மூலவரின் திருநாமம் நவநீதகிருஷ்ணன். 'நவநீதம்' என்றால் 'வெண்ணெய்'. கிருஷ்ணர் வெண்ணெய் பிரியர் என்பதால், அவருக்கு இந்தப்பெயரைச் சூட்டினர்.
சிறப்பம்சம்:
மூலவர் நவநீதகிருஷ்ணன் 4 அடி உயரத்தில் சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கிறார். அருகே இரண்டடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணர் இரண்டு வயது பாலகனாக அரை சலங்கையுடன், இருகைகளிலும் வெண்ணெய் ஏந்தி சிறு தொந்தி வயிற்றுடன் உள்ளார். எதிரில் நாலடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன கருடாழ்வார், பக்தர்களின் குறைதீர்க்கும் கிருஷ்ணன் அழைக்கும் குரலுக்கு ஓடி வரத் தயாராக நிற்கிறார்.
குழந்தை பிரார்த்தனை:
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் இங்கு வருகிறார்கள். தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டு கிருஷ்ணரை தரிசித்து, பால்பாயாசம், வெண்ணெய் நைவேத்யம் செய்து வழிபட்டால், கிருஷ்ணர் தன்னைப்போலவே ஒரு அழகான குறும்புக் குழந்தை பிறக்க வரமளிப்பார் என்பது ஐதீகம். அதேநேரம், முதியவர்களுக்கும் இவர் வரமளிப்பவராக உள்ளார். ஏகாதசி விரதமிருந்து மருதூர் கிருஷ்ணரைத் தரிசித்தால் பிறப்பற்ற வாழ்வை அருள்வார். .
தல பெருமை:
தாமிரபரணி நதி புனிதமான கங்கைக்கு நிகரானது. இந்நதியின் கரையிலுள்ளது மருதூர் கிராமம். இவ்வூர் அணைக்கட்டின் அருகில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டது நவநீத கிருஷ்ணன் கோயில். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி தரிசனத்துக்காக செல்பவர்கள், மருதூர் நவநீதகிருஷ்ணரையும் தரிசித்து வரலாம்.
திறக்கும் நேரம் :
காலை 7- 10, மாலை 5-8.
இருப்பிடம் :
திருநெல்வேலி ஜங்ஷன் (பழைய) பஸ் ஸ்டாண்டிலிருந்து 10 கி.மீ., பஸ் எண்: 12, 12ஏ.
போன்:
94433 75676.