
ஆண்டி கோலத்தில் இருக்கும் பழநி முருகன் மதுரை நேதாஜி ரோட்டிலுள்ள கோயிலில் தண்டாயுதபாணி சுவாமியாக வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால் பழநி முருகனை தரிசித்த பலன் கிடைக்கும்.
ஏழாம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர் நாயன்மார் சுந்தரர். யாத்திரையாக மதுரைக்கு வந்தவர், இந்த முருகன் கோயிலில் தங்கியதால் 'சுந்தரர் மடம்' என அக்காலத்தில் இதனை அழைத்தனர். இங்கிருந்து சுந்தரர் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்றார். எனவே, இக்கோயில் ஏழாம் நுாற்றாண்டிற்கும் முற்பட்டதாகும்.
இங்குள்ள உற்ஸவர் சிலையை தைப்பூசத்தன்று தலைச்சுமையாக பழநிக்கு எடுத்துச் சென்று அபிஷேகம் நடத்தி வந்தனர். பிற்காலத்தில் இந்த வழக்கம் இல்லாமல் போனது. பழநிமலைக்கு யாத்திரை சென்றதால் சுவாமிக்கு 'தண்டாயுதபாணி' எனப் பெயர் ஏற்பட்டது.
ஆறுபடைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை சிற்பங்கள் முன்மண்டபத்தில் சுதை சிற்பங்களாக உள்ளன. கருவறையில் முருகன் கோவணத்துடன் நின்ற கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். வலது கையில் தண்டம் ஏந்திய இவர், இடது கையை இடுப்பில் வைத்துள்ளார். மூலவர் எப்போதும் ராஜாங்க கோலத்திலேயே இருக்கிறார். குழந்தையில்லாதவர்கள் மாதம் தோறும் சஷ்டி விரதமிருந்து இவரை தரிசிக்க குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மகாமண்டபத்தில் கணபதி, துர்கை, நாகராஜர், அனுமன், பரமேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, கால பைரவர் சன்னதிகள் உள்ளன. தேய்பிறை அஷ்டமி, ஞாயிறு ராகுகாலத்தில் காலபைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது. இதை தரிசித்தால் கிரக தோஷம் நீங்கும்.
எப்படி செல்வது: ரயில் நிலையத்திற்கு அருகில் நேதாஜி ரோட்டில் கோயில் உள்ளது.
விசஷே நாட்கள்: வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி பிரம்மோற்ஸவம்
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 10:00 மணி
தொடர்புக்கு: 0452- 234 2782
அருகிலுள்ள தலம்: மதுரை மீனாட்சியம்மன் கோயில் 1கி.மீ.,