
குஜராத் காந்திநகரில் உள்ளது அக் ஷர்தாம் சுவாமி நாராயண் மந்திர். பிரம்மாண்டத்தின் வெளிப்பாடு இக்கோயில். அதன் கலை நுட்பங்களை பார்ப்பவர்கள் தங்களையே மறப்பர். 'குருநாதரின் வழிகாட்டுதல் இன்றி மனிதன் கடைத்தேற முடியாது' என்னும் உண்மையை இக்கோயில் சொல்கிறது.
குஜராத் சாப்பியா என்னும் பகுதியில் 1781ல் சுவாமி நாராயண் பிறந்தார். வேதம், உபநிஷதம், பகவத்கீதையை ஏழு வயதில் கற்றார். பண்டிதர்கள் மத்தியில் கடவுள் தத்துவத்தை பத்து வயதில் விளக்கினார். பின் பெற்றோரைத் துறந்து யாத்திரை மேற்கொண்டார். இடுப்பில் துண்டுடன் இமயம் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்தார். மீண்டும் குஜராத்திற்கு வந்த போது அவருக்கு வயது பதினெட்டு.
ஏழு ஆண்டுகளில் இவர் நடந்த துாரம் 12 ஆயிரம் கி.மீ.,. இவரது ஆன்மிக ஈடுபாட்டை அறிந்த ராமானந்த சுவாமி என்னும் துறவி தனது சீடர்களிடம், 'இனி இவரே உங்கள் குரு' என சொன்னார். பின் 'சகஜானந்தா' என அழைக்கும்படி பக்தர்களிடம் கூறினார். சுவாமி நாராயணரை சிலர் தங்களின் குலதெய்வமாக ஏற்றனர். 1830 வரை வாழ்ந்த அந்த மகானின் நினைவாக கட்டப்பட்ட கோயில் இது.
1992 அக்.30ல் திறக்கப்பட்ட இக்கோயிலின் பரப்பு 23 ஏக்கர். சுவாமி நாராயண் நினைவிடம், 'ஆர்ஷ்' எனப்படும் ஆராய்ச்சி மையம், கண்காட்சி அரங்கம், பூங்கா ஆகியவை உள்ளன. மார்பிள் கற்களால் ஆன நினைவிடத்தின் நடுவில் இவருக்கு ஏழடி உயர தங்கச்சிலை உள்ளது. கோயிலை கட்டி முடிக்க ஆறு ஆண்டுகள் ஆனது. 6 ஆயிரம் மெட்ரிக் டன் (60 லட்சம் கிலோ) இளஞ்சிவப்பு நிற கற்கள் பயன்படுத்தப்பட்டன. இக்கோயில் 240 அடி நீளம், 131 அடி அகலம்,
108 அடி உயரம் கொண்டது. இவரது வரலாறு, போதனைகளை விளக்கும் அரங்கம் உள்ளது. இங்கு ராமாயணம், மகாபாரத காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 'குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் மனிதன் கடைத்தேற முடியாது' என்பதை விளக்கும் திரைப்படம் தினமும் இங்குள்ள 'பிரேமானந்த்' கலை அரங்கில் காட்டப்படுகிறது. இங்குள்ள பூங்காவில் உள்ள நீர்நிலையை கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமமாக கருதுகின்றனர்.
எப்படி செல்வது :
* குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 20 கி.மீ.,
* காந்தி நகரில் இருந்து 7 கி.மீ.,
விசேஷ நாள்: கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, ஸ்ரீராமநவமி.
நேரம்: காலை 9:00 - இரவு 7:30 மணி
தொடர்புக்கு: 079 - 2326 0001
அருகிலுள்ள கோயில் : காந்திநகர் சித்திவிநாயக் மந்திர் 7 கி.மீ., (முயற்சி நிறைவேற...)
நேரம்: காலை 7:00 - இரவு 9:00 மணி
தொடர்புக்கு: 97272 77541