ADDED : ஜூலை 11, 2025 08:08 AM

சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் சங்கர் நகரில் சங்கர விநாயகர், சுந்தர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இதை தரிசித்தால் திருமணத்தடை விலகும். இக்கோயிலை 'சென்னையின் திருமணஞ்சேரி' என அழைக்கின்றனர்.
விநாயகரும், ஆஞ்சநேயரும் முதலும், முடிவுமாக இருந்து நம்மை ஆட்சி செய்பவர்கள். இவர்களே இக்கோயிலில் சங்கர விநாயகர், சுந்தர ஆஞ்சநேயர் என்னும் பெயரில் மூலவராக உள்ளனர்.
1981ல் காஞ்சி மஹாபெரியவர், மாம்பலம் முருகாஸ்ரமம் சங்கரானந்த சுவாமிகளின் ஆசியோடு நான்கே நாளில் இக்கோயில் கட்டப்பட்டது. நுாறாண்டுக்கும் மேலாக கிணற்றுக்குள் கிடந்த விநாயகர் சிலை மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டது.
திருமணத்தடை உள்ளவர்கள் நித்யகல்யாணி அம்மனை தரிசித்த பின் மணக்கோலத்தில் உள்ள சுந்தரேஸ்வரர், மீனாட்சியம்மனை தரிசிக்க வேண்டும். பின்னர் மீண்டும் நித்யகல்யாணி அம்மனை தரிசிப்பது அவசியம். சுமங்கலிகள் வெள்ளியன்று நித்யகல்யாணி அம்மனுக்கு பூமாலை சாத்தி விளக்கேற்றுகின்றனர்.
பிரத்யங்கிரா தேவி, சரபேஸ்வரர், துர்கை, முருகன், ஸ்ரீநிவாசப்பெருமாள், ஆஞ்சநேயர், காஞ்சி மஹாபெரியவர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. 54 கிலோ எடை கொண்ட ஒன்பது அடி உயர வெள்ளித்தேர் உள்ளது. விருப்பம் நிறைவேற விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியன்று அருகம்புல் மாலையும், சனிக்கிழமையன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலையும் சாத்துகின்றனர். பிரதோஷத்தன்று சுந்தரேஸ்வரரை தரிசித்தால் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
எப்படி செல்வது: சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வெளிவட்டச் சாலை (ஓ.ஆர்.ஆர்) வழியாக 20 கி.மீ.,
விசேஷ நாள்: விநாயகர் சதுர்த்தி, மகாசிவராத்திரி, ஸ்ரீராமநவமி.
நேரம்: அதிகாலை 5:00 - 12:30 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 97103 35366
அருகிலுள்ள கோயில்: பம்மல் அர்க்கீஸ்வரர் கோயில் 2 கி.மீ., (நிம்மதிக்கு...)
நேரம்: காலை 6:30 - 11:30 மணி; மாலை 4:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 94446 82425, 97102 86935