
மார்ச் 18 - குன்றத்து முருகன் திருக்கல்யாணம்
திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதல் வீடு. மற்ற படை வீடுகளில் நின்ற நிலையில் அருளும் முருகன் இங்கு தெய்வானையுடன் மணக்கோலத்தில் அமர்ந்த நிலையில் இருக்கிறார். முருகனுக்கு அபிஷேகம் கிடையாது. அவரது வேலுக்கே அபிஷேகம் நடக்கிறது.
சூரனை வதம் செய்த முருகனுக்கு வெற்றிப் பரிசாக தேவேந்திரன் தன் மகள் தெய்வானையை மணம் முடித்து வைத்தார். இந்த விழா பங்குனி சுவாதி நட்சத்திரத்தன்று விமரிசையாக நடக்கிறது.
ஐந்து கருவறைகள்
திருப்பரங்குன்றம் மலையைக் குடைந்து கற்பக விநாயகர், முருகன், சிவன், துர்கை, பெருமாள் ஆகிய ஐவருக்கும் சன்னதிகள் உள்ளன. சுப்பிரமணிய சுவாமி என்னும் பெயருடன் முருகன் அருள்பாலிக்கிறார். அமர்ந்த நிலையிலுள்ள இவரது இடது பக்கம் தெய்வானை, வலது பக்கம்
நாரதர் உள்ளனர்.
சூரியன், சந்திரன் அருகில் உள்ளனர். மகிஷாசுரனின் தலை மீது நின்ற கோலத்தில் துர்கை தனி சன்னதியில் இருக்கிறாள். அவளைச் சுற்றி பூதகணங்களும், வாத்தியம் இசைத்த நிலையில் தேவ கணங்களும் உள்ளனர்.
கரும்புடன் கணபதி
திருப்பரங்குன்றம் கருவறையில் தாமரை மலரில் அமர்ந்தபடி கற்பக விநாயகர் இருக்கிறார். கையில் அங்குசத்திற்குப் பதிலாக கரும்பு ஏந்தியிருப்பது மாறுபட்ட அமைப்பாகும். தம்பி முருகனின் திருமணத்தில் பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கரும்புடன் காட்சி தருகிறார் விநாயகர்.
மணக்கோலத்தில் அம்மன்
முருகன், தெய்வானை திருமணம் செய்த தலம் திருப்பரங்குன்றம். இங்குள்ள ஆஸ்தான மண்டபத்தில் தெய்வானை முருகன் மணக்கோலம் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. அதனடியில் நாயக்கர் கால கல்வெட்டு உள்ளது. அதில் 'தெய்வானை நாச்சியார் கல்யாணம்' எனக் குறிக்கப்பட்டுள்ளது.
இந்த மண்டபத்தில் 48 துாண்கள் உள்ளன. இதில் 40 அடி உயரம் கொண்ட ஒரு துாணில் தான் முருகன், தெய்வானை திருமணக் காட்சி உள்ளது. இதில் இந்திரன் தாரை வார்த்து தெய்வானையை கன்னிகா தானம் செய்கிறார். தெய்வானை கையில் மலர் ஏந்தியும், இந்திரன் வஜ்ராயுதம் தாங்கியும் நிற்கின்றனர்.
இந்த மண்டபத்தில் விநாயகர், துர்கை, பார்வதி, பரமசிவன், பெருமாள், மகாலட்சுமி, மன்னன் கூன் பாண்டியன், அதிகார நந்தி, திருஞான சம்பந்தர், குலச்சிறை நாயனார், மங்கையற்கரசியார் சிற்பங்கள் உள்ளன.
திசைக்கு ஒரு காட்சி
திருப்பரங்குன்றம் மலைக்கு திருப்பரங்கிரி, சுமந்தவனம், பராசல தலம், விட்டணு துருவம், கந்த மாதனம், கந்த மலை, சத்தியகிரி, தென்பரங்குன்றம், தண் பரங்குன்றம், சுவாமிநாத புரம், முதல்படை வீடு என பல பெயர்கள் உண்டு. மலையின் வடக்கு பகுதி கைலாயம் போலவும், கிழக்கு முகம் பெரும் பாறையாகவும், தெற்கில் பெரிய யானை படுத்திருப்பது போலவும், மேற்கில் சிவலிங்கம் போலவும் காட்சியளிக்கிறது.
லட்சுமி தீர்த்தம்
ஸ்ரீதடாகம் என்னும் பெயருடன் தெப்பக்குளம் திருப்பரங்குன்றத்தில் உள்ளது. 'லட்சுமி தீர்த்தம்' என்றும் பெயருண்டு.
பராந்தக நெருஞ்சடையன் சாமநாத பூமனாகிய சாத்தன் கணபதி என்பவர் எட்டாம் நுாற்றாண்டில் இந்த தெப்பக்குளத்தை வெட்டினார். இதன் அருகிலுள்ள விபூதி மடத்தில் விநாயகர், கருப்பண்ண சுவாமி, நாகர் சன்னதிகள் உள்ளன.