
மே 24 - காஞ்சி மஹாபெரியவர் பிறந்த நாள்
முற்பிறவிகளில் நாம் செய்த வினைகளை போக்கவே கடவுள் பிறவி கொடுத்திருக்கிறார். இதை உணராமல் காமம், கோபம், பொறாமை, அகங்காரம் போன்ற குணங்களால் மேலும் தீமை செய்து துன்பக்கடலில் தவிக்கிறோம். இதில் இருந்து நம்மை கரை சேர்க்கவே மகான்கள் பூமியில் அவதரிக்கின்றனர். இதில் நடமாடும் தெய்வம் எனப் போற்றப்படும் காஞ்சி மஹாபெரியவர் அனைவரும் ஆன்மிக ஞானத்தை பெற வேண்டும் என்பதற்காக ஆன்மிகம், சாஸ்திரத்தை புரியும் வகையில் எளிமையாக உபதேசித்தார். அவரது பிறந்த நாளான இன்று 'மஹாபெரியவரின் உபதேசம்' என்னும் அமுதத்தை பருகுவோம்.
* பிறவி எடுத்ததன் பிரயோஜனமே யாரிடமாவது மாறாத பிரியம் வைப்பதுதான். பிரியம் வைப்பவர் எந்தக் காலத்திலும் நம்மை விட்டு பிரிந்து செல்லாதவராக இருக்கவேண்டும். அந்தப் பிரியத்தால் நம் ஜன்மம் பிரயோஜனம் உடையதாகும். அவரையே நாம் ஸ்வாமி என்கிறோம்
* உண்மையான அன்பு யாரிடம் உள்ளதோ அவரே உயர்ந்தவர். வெறும் நாடகத்தனமான பக்தி கடவுளுக்குத் தேவையில்லை. யார் தன் அகந்தையை விட்டொழித்து அவரை சரணாகதி அடைகிறாரோ, அவருக்குத்தான் கடவுள் காட்சியளிக்கிறார்.
* ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் எப்போதோ முடிந்த காரியம். இதை மனதில் நிறுத்தினால் எந்தவித கர்வமும் ஏற்படாது. ஈடுபடும் செயலில் விருப்பு, வெறுப்பு தோன்றாது. பலனை எதிர்பார்க்காது. அப்போது அச்செயல் சிறப்பாக செய்யப்படும்.
* வாழ்க்கை என்றால் கஷ்டம், ஆபத்து எல்லாம் வரத்தான் செய்யும். அதை தர்மத்தால் வெல்ல வேண்டும். இந்த வழியை நமக்கு சொல்லிக்கொடுத்தவர் ஸ்ரீராமபிரான். அவர் தர்மத்தை காத்தார். முடிவில் அதுவே அவருக்கு ஜயத்தை கொடுத்தது.
* மனதில் உள்ளதை வெளியிட்டுச் சொல்வதற்கென்றே பகவான் மனிதனுக்குப் பேசும் சக்தியைத் தந்திருக்கிறார். அப்படி மனதில் தோன்றுவதை அப்படியே பேசுவது சத்தியம். இதற்காக மனதில் தோன்றும் தீய எண்ணத்தை வெளிப்படுத்தினால் சத்தியமாகுமா... இல்லை. எனவே நல்லதையே நினைக்க வேண்டும்.
* வாழ்க்கைத் தரம் என்பது பொருட்கள் பெருக்கத்தில் இல்லை. அதாவது தேவைகளை அதிகமாக்கினால் மனஅமைதி குறையும். தேவைகள் குறைந்தால் நிம்மதி கூடும்.
* தினமும் தாய் தந்தையரையும் ஆசிரியரையும் மனதில் நினைத்து வணங்க வேண்டும். பிறகு உலகம் முழுவதிற்கும் தாயும் தந்தையுமாக இருக்கிற ஸ்வாமியை வணங்க வேண்டும். இப்படி செய்தால் மனதில் தோன்றும் அழுக்குகள் மறையும்.