ADDED : பிப் 16, 2014 02:55 PM

குடகு என்றும், கூடல் மலைநாடு என்றும் அழைக்கப்படும் பகுதி கர்நாடகாவிலுள்ள கூர்க். வளம் மிக்க பசுமையான இடம். சிறந்த மலை வாசஸ்தலம். இங்குள்ள மெர்க்காரா எனப்படும் மடிக்கரேயில் ஓம்காரேஷ்வர் கோயில் உள்ளது. கோயில் வாசலில் குளம், சுற்றிலும் மதில் சுவர்கள் உள்ளன.
தல வரலாறு: இந்தக் கோயிலை 1820ல், மன்னன் லிங்க ராஜேந்திரன் கட்டினான். கொடுங்கோலனான அவன், தன் அரசியல் அபிலாஷைகளுக்காக, நேர்மை மிக்க ஒரு அந்தணரைக் கொன்றான். இன்னொரு கதை பிரகாரம் அவருடைய மகளை அடைய விரும்பினான். அவர் மறுத்ததால், அவரைக் கொன்றான். அந்தணரைக் கொன்றதால், அரசனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. கனவிலும் நனவிலும் வந்து மன்னனை உலுக்கி எடுத்தார் அந்தணர். சித்திரவதை தாங்காத அவன், ஆன்மிக பெரியவர்களின் யோசனைப்படி, சிவனுக்கு கோயில் கட்டினான். அங்கு காசியிலிருந்து லிங்கத்தை கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்தான்.
கோயில் அமைப்பு: கோயில் மத்தியில் வசீகரமான குவி மாடமும், அதன் நான்கு முனைகளில் ஸ்தூபிகளும், அதைச் சுற்றி ரிஷபங்களும் உள்ளன. குவி மாடத்திற்கு மேல் முலாம் பூசிய உருண்டையும். திசைகாட்டும் கருவியும் இருக்கிறது. கோயில் படிகளில் ஏறியதும் வளைந்த வாசல் உள்ளது. அதன் கீழே இரு மணிகள் முழக்கமிடுகின்றன.
ஏறியவுடனேயே மூலவர் சந்நிதி வந்து விடுகிறது. மற்ற கோயில்களை போல் பக்தர்கள் தரிசிப்பதற்கு என விஸ்தாரமான கூடமோ அல்லது தூண்கள் அடங்கிய மண்டபமோ இல்லை. கருவறை கதவின் சாளரங்கள் (ஜன்னல்) பஞ்சலோகத்தால் ஆனது.
பிரகார சுவரில் புராண, இதிகாச சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இருப்பிடம்: மைசூருவிலிருந்து மடிக்கரே 80 கி.மீ., பெங்களூருவிலிருந்து பஸ் உண்டு.

