sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மனமே விழித்தெழு (17)

/

மனமே விழித்தெழு (17)

மனமே விழித்தெழு (17)

மனமே விழித்தெழு (17)


ADDED : ஆக 30, 2019 02:50 PM

Google News

ADDED : ஆக 30, 2019 02:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம் முன்றேத்தைக் கட்டுப்படுத்தும் ஏழாவது தீயசக்தி சோம்பல். அண்மையில் கேன்சர் துறையில் புகழ் பெற்ற மருத்துவர் ஒருவர் சொன்ன தகவல் என்னை ஆச்சரியப்படுத்தியது. நம் எல்லோரது உடலிலும் கேன்சர் செல்களாக மாறக்கூடிய செல்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை உடலிலுள்ள எதிர்ப்பு சக்தி இனம் கண்டு அழித்து விடும். இதைத் தான் 'இம்யூன் சிஸ்டம்' என்பர். அந்த தடுப்பு சக்தி செயல் இழந்தால் கேன்சர் செல்கள் வேகமாக வளர ஆரம்பிக்கும். அதற்குப் பிறகு என்னவாகும்? 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பார்களே, அது கேன்சர் செல்களுக்கு மிக பொருந்தும்.

அப்படித்தான் சோம்பேறித்தனமும்! அனைவருக்குள்ளும் ஓரளவு சோம்பல் குணம் இருக்கும். வேலையைத் தள்ளிப்போடும் தன்மை இருக்கும். ஆனால் அளவுக்கு மீறினால் அமுதமும் விஷமாகும் என்பதை மறக்கக் கூடாது.

பர்த்ருஹரி எழுதிய நீதி சதகம் என்னும் ஸ்லோகங்கள் நினைவுக்கு வருகின்றன.

ஆலஸ்யம் ஹி மனுஷ்யாணாம்

சரீரஸ்தோ மாஹான் ரிபு:

அதாவது நம் உடலில் உள்ள மிகப் பெரிய எதிரி சோம்பல்.

நாஸ்த்யுக்தம சமோ பந்து:

க்ருத்வா யம் நாவஸீததி

அதாவது எவன் ஒருவன் முயற்சி செய்து கொண்டே இருக்கிறானோ அவன் வாழ்வில் தோற்பதில்லை.

இதை புரிந்து கொண்டால் வாழ்வின் முன்னேற்றத்திற்கு வானம் தான் எல்லை. சோம்பல் தான் நம் முதல் எதிரி. அது நமக்குள்ளே தான் இருக்கிறது. அதை மற்றவர் யாரும் நம்மிடம் திணிக்கவில்லை. அது இருப்பதும் நமக்குத் தெரியும். அன்றாடம் துாங்கும் முன் 'இந்த நாளை எப்படி நான் கடந்தேன். செயல்களை தள்ளிப் போடாமல் செய்து முடித்தேனா... இல்லை என்றால் குறுக்கே நின்ற தடைகள் என்ன? என்று நமக்கு நாமே கேட்க வேண்டும்.

இயற்பியலில் (Physics) இரு சக்திகள் உண்டு. ஒன்று உந்து சக்தி (Driving Force), மற்றொன்று எதிர்க்கும் சக்தி (Resistance Force). இந்த சக்திகளில் எதிர்க்கும் சக்தி இயற்கையானது. ஒரு பந்தை தரையில் உருட்டினால் சிறிது துாரம் சென்ற பிறகு இயற்கையான எதிர்ப்பு சக்தியின் காரணமாக அதன் வேகம் குறைந்து நிற்கும். அதை மீண்டும் நகர வைக்க மீண்டும் தள்ள வேண்டும். இது தான் உந்து சக்தி. இந்த சக்திகளில் எது அதிகமாகிறதோ அதைப் பொறுத்தே பந்து நகர்வதும், நகராததும் அமையும்.

அதே போல சோம்பல் என்ற எதிரி ஒரு பக்கம், சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் மறுபக்கம். சாதாரண பள்ளிகளில் விளையாடுவோமே 'டக் அப் வார்' என்ற விளையாட்டு அதைப் போல இழுக்கும். சோம்பித் திரிவது தற்காலிக சந்தோஷத்தைக் கொடுக்கலாம். ஆனால் நிரந்தர துயரத்தைக் கொடுக்கும் என்ற உண்மையை உணரும் போது நமக்குள் இருக்கும் உந்து சக்தியை மீண்டும் செயல்பட வைக்கும்.

கருத்து மிக்க திருக்குறள் ஒன்று இருக்கிறது.

நெடுநீர் மறவி மடி துயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்

என்பது அது. அதாவது தாமதம், சோம்பல், மறதி, அளவிற்கு மீறிய துாக்கம் ஆகியவை அழிவை விரும்புவோர் பயணிக்கும் படகுகள். தாமதம் என்பது வேலையைச் செய்து முடிக்க தேவைக்கு அதிகமாக நேரம் எடுத்தல். காலம் போனால் திரும்பாது என்ற வார்த்தைகளை கேள்விப்பட்டிருப்போம். சோம்பல் காரணமாக அளவிற்கு மீறிய துாக்கமும் வெற்றியைப் பறிக்கும் எதிரி தானே? மறதி என்பது எப்போது வரும்? நம்முடைய கடமைகளை மறந்தால் தானே வரும்? முன்னேற வேண்டும் என்ற துடிப்பு இருந்தால் மறதி இருக்காது.

காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாள் கோவில் இருப்பது உங்களுக்குத் தெரியும். கடவுள் தன்னுடைய காலால் உலகையே மூன்றடியால் அளந்ததை குறிக்கும் திருத்தலம் இது. இந்த கோயிலைப் பற்றி திருவள்ளுவர் எழுதியிருக்கிறார் என்றால் ஆச்சரியப்படுவீர்கள்!

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு

என்பதே அந்தக் குறள். மூன்றடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான் என்பதே. அதாவது

சோம்பலை நாம் வென்று விட்டால்

அடையும் செல்வத்திற்கு எல்லையே கிடையாது.

சரி, சோம்பல் தானாக போய் விடுமா. கண்டிப்பாக இல்லை. சோம்பலை நம்மிடமிருந்து விரட்ட ஒரு உந்து சக்தி தேவைப்படும். அது தான் வைராக்கியம் என்னும் சக்தி. நான் வெற்றி பெற வேண்டும், எனக்குள் அளவில்லாத ஆற்றல் புதைந்து கிடக்கிறது, என்னைச்

சுற்றிலும் அளவில்லாத வாய்ப்புகள் இருக்கின்றன என்ற உணர்வு வர வேண்டும். அப்படி வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக சோம்பல் நம்மை விட்டு விலகும்.

சோம்பல் எப்படி வந்தது என கண்டுபிடிக்க வேண்டும். ஒன்றுக்கும் காரண காரியம் என்று ஒன்று உண்டு. ஆங்கிலத்தில் இதை 'காஸ் எபெக்ட்' ( cause and effect) என்பர். சோம்பல் ஒருவேளை, நண்பர்களிடம் இருந்தோ அல்லது நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் இருந்தோ வந்திருக்கலாம். அவர்களிடமிருந்து விலக வேண்டும்.

சோம்பலும், உழைப்பும் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்றும். உழைக்கும் நண்பர்களோடு நெருங்கிப் பழக வேண்டும். 'உன் நண்பர்களைப் பற்றிச் சொல்; உன்னைப் பற்றி நான் சொல்கிறேன்' என்கிறது ஒரு பழமொழி.

உழைப்பால் உயர்ந்தவர்களை ரோல் மாடலாக கொள்ளுங்கள். நாம் எதைப் பார்க்கிறோமோ யாரோடு உறவாடுகிறோமோ அவர்களாகவே மாறுவோம்.

ஒரு சிறு பயிற்சி. அமைதியான இடத்தில் அமர்ந்து கண்களை மூடுங்கள். வாழ்வில் சற்று பின்னோக்கிப் போய் அதை மனத்திரையில் ஓட விடுங்கள். அதில் வரும் காட்சிகளை கவனியுங்கள். அதில் உள்ள சோம்பல், தாமதிக்கும் காட்சிகளை நீக்கினால் வாழ்வு எப்படி இருக்கும் என கற்பனை செய்யுங்கள். சோம்பல், அதிக துாக்கத்தால் என்னவெல்லாம் இழந்தீர்கள் என சற்றே யோசனை செய்யுங்கள். இந்த கற்பனைக் காட்சி உங்களைக் கண்டிப்பாக மாற்றி விடும்!

'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத் தங்கமே' என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. நம்மிடம் மறைந்து கொண்டு நம்மையே அழிக்கும் சோம்பல் என்ற எதிரியை புரிந்து கொள்ளாமல் எதிரிகள் யார் என வெளியே தேடுகிறோம்.

இரவில் துாங்கும் போது தானே திருடர்கள் வீட்டிற்குள் புகுந்து செல்வத்தை திருடுகிறார்கள்? எனவே மனம் விழிப்பாக இருக்க வேண்டும். விழித்தெழுந்த மனதின் எழுச்சிக்கு எல்லை இல்லை.

சரி... நம்மை வளரவிடாமல் தடுக்கும் தீய சக்திகளைக் கடந்த சில பகுதிகளில் பார்த்தோம். உங்களுக்குள்ளே நீங்கள் நான்கு மனிதர்களாக இருக்கிறீர்கள் என்பது தெரியுமா? அந்த நான்கு பேர் யார் என அறிய ஏழு நாள் காத்திருங்களேன்!

தொடரும்

அலைபேசி: 73396 77870

திருவள்ளூர் என்.சி. ஸ்ரீதரன்






      Dinamalar
      Follow us