ADDED : ஜூன் 15, 2017 12:27 PM

பிருகு மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று அமிர்தவல்லி என்ற பெயரில் மகாலட்சுமி
அவதரித்த தலம் சென்னை மயிலாப்பூர். இங்குள்ள மாதவப்பெருமாள் கோயிலில் இருக்கும் இவரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தல வரலாறு: யாகம் ஒன்றை நடத்திய முனிவர்கள், அதன் பலனை சாந்த குணமுள்ள ஒரு தெய்வத்துக்கு கொடுக்க முடிவெடுத்தனர். எந்த தெய்வம் சாந்த குணமுள்ளது என்பதைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு, பிருகு மகரிஷியிடம் விடப்பட்டது. பிரம்மாவும், சிவனும் அவர் வைத்த தேர்வில் தோற்றனர். பின் வைகுண்டம் சென்றார். திருமால் உறங்குவது போல் நடித்தார். ''நான் வந்திருப்பது தெரிந்தும், தெரியாதவன் போல் உறங்குகிறாயா?'' என்ற பிருகு, திருமாலின் மார்பில் உதைத்தார். அப்போது தான் எழுவது போல் நடித்த பெருமாள், ''நீங்கள் வந்ததை உணராமல் உறங்கியது தவறு தான்,'' என்று சாந்தமாகப் பேசினார். ஆனால், பிருகுவின் செயல், திருமாலின் மார்பில் இருந்த மகாலட்சுமிக்கு கோபத்தை வரவழைத்தது.
''நான் உங்கள் மார்பில் இருப்பவள். அந்த மார்பில் உதைத்தால் எனக்குத்தானே வலிக்கும். இதைத் தட்டிக்கேட்காமல், அந்த முனிவனிடம் பணிந்து பேசுகிறீர்களே! இனி உங்களோடு வாழ மாட்டேன்,'' என்ற மகாலட்சுமி பெருமாளை விட்டுப் பிரிந்தாள்.
இருவரும் பிரிய காரணமான பிருகு, தவறுக்கு பிராயச்சித்தம் பெற, லட்சுமியே தன் மகளாக பிறக்க வேண்டி தவமிருந்தார். தாயாரும் பெரிய மனதுடன், இங்குள்ள தீர்த்தத்தில் குழந்தையாக அவதரித்தாள். அவளுக்கு 'அமிர்தவல்லி' எனப் பெயரிட்டு வளர்த்தார்.
திருமண வயதை அடைந்ததும், மகளை மணந்து கொள்ளும்படி பெருமாளை வேண்டினார். அவரும் தாயாரை ஏற்று அருள்புரிந்தார். இருவரும் இங்கு கோயில் கொண்டனர்.
பிள்ளை வரம்: மூலவர் ஆனந்தநிலை என்னும் விமானத்தின் கீழ் மணக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இவருக்கு 'கல்யாண மாதவன்' என்று பெயர். நாரதரிடம் வியாசர், ''பூலோகத்தில் தோஷம் இல்லாத தலம் எது?'' என்று கேட்க, அவர் இத்தலத்தைக் குறிப்பிட்டதாக தலவரலாறு கூறுகிறது.
அமிர்தவல்லித்தாயார் தனி சன்னதியில் வீற்றிருக்கிறாள். இவள் இங்குள்ள புஷ்கரணியில் மாசிமகத்தன்று தோன்றினாள். இத்தீர்த்தம், 'சந்தான புஷ்கரணி'
எனப்படுகிறது. தாயார் அவதரித்த நாளில் அனைத்து புண்ணிய நதிகளும், இந்த தீர்த்தத்தில் சங்கமிப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் மாசி மகத்தன்று தாயார், பெருமாளுடன் தீர்த்தக்குளத்திற்கு எழுந்தருள்கிறாள்.
அப்போது தீர்த்த நீராடி வழிபட முன்வினைப் பாவம் நீங்கும். பிள்ளைவரம் வேண்டுவோர் தாயாருக்கு கல்கண்டு, குங்குமப்பூ, பால் சேர்ந்த கலவையை நைவேத்யம் செய்கின்றனர்.
உற்ஸவர் பெருமாள் தாமரை மலர் போன்று, அழகான முகத்துடன் காட்சியளிப்பதால், 'அரவிந்த மாதவன்' என அழைக்கப்படுகிறார். அரவிந்தம் என்றால் 'தாமரை'. பிரகாரத்தில் பூவராகப்பெருமாள், ஆண்டாள், ராமர், பால ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன.
வளம் தருபவர்: பெருமாள் தலங்களுக்கு யாத்திரை சென்ற ராமானுஜர், கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரத்தில் உற்சவர் சிலை இல்லாதது கண்டு வருந்தினார். அதை டில்லி மன்னர், தன் மகளின் விருப்பத்தின்படி எடுத்துச் சென்ற விஷயத்தைக் கேள்விப்பட்டார். டில்லி சென்ற ராமானுஜர், திருமாலை மனதில் நினைத்தார். அப்போது அரண்மனையில் இருந்த உற்ஸவர் சிலை, அவரது மடியில் வந்து அமர்ந்தது. சம்பத்குமாரர் எனப்படும் அச்சிலையை நாராயணபுரத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்தார். மயிலாப்பூர் கோவிலிலும் 'சம்பத்குமாரர்' சிலையும், மன்னர் மகள் பீபி நாச்சியார் சிலையும் உள்ளன.
இவரிடம் வேண்டிக் கொள்ள செல்வம் பெருகும். 'சம்பத்' என்றால் 'செல்வம்' என்பது பொருள். இவருக்கு, 'செல்வப்பிள்ளை' என்றும் பெயருண்டு. பங்குனியில் சம்பத்குமாரருக்கு 10 நாள் விழா நடக்கிறது.
பேயாழ்வார் அவதாரம்: பேயாழ்வார் இவ்வூர் அருகிலுள்ள மணிகைரவம் என்னும் கிணற்றில், செவ்வல்லி மலரில் அவதரித்தார். இவருக்கு சன்னதி இருக்கிறது. ஐப்பசி சதயம் நட்சத்திரத்தை ஒட்டி 10 நாள் திருவிழா நடக்கும். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் நிற்கச் செய்து அருளினார் திருமால். இதன் அடிப்படையில் விழாவில் மூன்று ஆழ்வார்களும் ஒன்றாக காட்சி தரும், 'திருக்கோவிலூர் வைபவம்' நிகழ்ச்சியும், பத்தாம் நாளில் பிறந்த தலமான கிணற்றிற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கும்.
எப்படி செல்வது: மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை பஸ் ஸ்டாப் அருகில் கோயில்.
நேரம்: காலை 6:30 - 11:00 மணி, மாலை 4:30 - 9:00 மணி
தொடர்புக்கு: 94440 18239, 044-2498 5112, 2466 2039.

