ADDED : டிச 11, 2022 08:48 AM

கண்ணுக்குப் புலப்படும் உருவத்திருமேனிக்கும் புலப்படாத அருவத்துக்கும் மூலமானவர் சிவபெருமான். அவரை வழிபட ஓர் அடையாளமாக விளங்குவது சிவலிங்கம். லிங்கம் என்பதற்கு பிரகாசம் என்று பொருள். அந்த லிங்கத்திருமேனியை நாம் பல கோயில்களில் தரிசித்திருப்போம். அதில் பிரம்மாவின் உருவம் செதுக்கப்பட்டு இருந்தால் எப்படி இருக்கும். ஆந்திரப்பிரதேசம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிரம்ம லிங்கேஸ்வரர் கோயிலில் இந்த அமைப்பு உள்ளது.
முற்பிறவியில் செய்த செயலுக்கு ஏற்பவே, நமது வாழ்க்கை அமையும். இப்படி நமது தலையெழுத்தை எழுதுபவர் பிரம்மா. அப்படிப்பட்டவருக்கே சாபத்தை கொடுத்தார் ஒருவர். அவர்தான் பிருகு முனிவர். ஒரு சமயம் ரிஷிகள் சரஸ்வதி நதிக்கரையில் யாகம் நடத்த தீர்மானித்தார்கள். அந்த யாகத்தில் யாருக்கு முதல் மரியாதை தருவது என்ற கேள்வி எழுந்தது. சரி! படைக்கும் தொழிலை செய்பவர் பிரம்மா. முதலில் அவரை சந்திக்கலாம் என்று கிளம்பினார் பிருகு முனிவர். ஆனால் அங்கு சென்றவருக்கோ சரியான வரவேற்புக்கூட கிடைக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட முனிவர், 'உனக்கு பூவுலகில் கோயிலே இல்லாமல் போகட்டும்' என பிரம்மாவுக்கு சாபமிட்டார். ஆனால் ஆறுதல் அளிக்கும் வகையில் ஓரிரு கோயில்கள் பிரம்மாவுக்கு அமைந்தன.
அதில் ஒன்றுதான் இக்கோயில். தாமரையில் உதித்தவர் பிரம்மன். அதனால்தான் என்னவோ இக்கோயிலும் ஒரு தாமரைப் பூவைப்போல குளத்தின் நடுவில் அமைந்துள்ளது. நான்கு புறமும் படிகள் அமைந்த அழகான குளம். அதன் நடுவே இருக்கும் கோயிலுக்கு செல்ல நீளமான பாதை. அதில் நடந்து சென்றால் கருவறையில் உள்ள பிரம்ம லிங்கேஸ்வரரின் தரிசனம் கிடைக்கும். அந்த லிங்கத்திருமேனியின் நான்கு புறமும் பிரம்மாவின் உருவம் செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு காலை மடக்கி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் பிரம்மா. நாம் நான்கு புறமும் தரிசனம் செய்வதற்கு ஏற்றபடி, நான்கு ஜன்னல்கள் உள்ளது. இவரை தரிசனம் செய்தாலே நாம் நினைத்தது நிறைவேறும். இயற்கையின் மணம் கமழும் அமைதியான இடம் அது.
அருகில் ஒரே கல்லால் ஆன பெரிய நந்திதேவர் தரிசனமும் கிடைக்கும்.
எப்படி செல்வது: குண்டூர் ரயில் நிலையத்தில் இருந்து செபரோலு 16 கி.மீ., அங்கிருந்து 1 கி.மீ.,
விசேஷ நாள்: பிரதோஷம், கார்த்திகை சோமவாரம், மகா சிவராத்திரி
நேரம்: அதிகாலை 5:00 - 8:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 099494 22911
அருகிலுள்ள தலம்: ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனர் கோயில் 242 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:00 - 3:00 மணி; மாலை 5:30 - 10:00 மணி
தொடர்புக்கு: 0852 - 4288 881, 887, 888
