ADDED : டிச 11, 2022 08:48 AM

இந்தியாவின் மேற்குப்பகுதியில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள சிகரம் மவுன்ட்அபு. 'ராஜஸ்தானின் சிம்லா' எனப்படும் இந்த மலைப்பகுதி புகழ் மிக்க கோடை வாசஸ்தலம். இந்த மலை மீதுள்ள கபாலதேவி இங்குள்ள மக்களின் குலதெய்வமாகத் திகழ்கிறாள். இங்கு வருவோருக்கு கலக்கம் அற்ற மனநிலை உருவாகும்.
தட்சனின் மகளான தாட்சாயிணி தந்தையின் எதிர்ப்பை மீறி சிவபெருமானை மணம் புரிந்தாள். சிவன் மீது வெறுப்பு கொண்ட தட்சன் தான் நடத்திய யாகத்திற்கு மருமகனை அழைக்கவில்லை. வருத்தப்பட்ட தாட்சாயிணி யாக குண்டத்தில் குதித்து உயிர் நீத்தாள். மனைவியின் உடலைத் தோளில் தாங்கியபடி சிவபெருமான் தாண்டவம் ஆடினார். இதையறிந்த மகாவிஷ்ணு சக்கரத்தால் தாட்சாயிணியின் உடலை 51 கூறுகளாக வெட்டி நாடெங்கும் சிதற விட்டார். அவளின் இடது கபாலம் மவுன்ட் அபு மலைப்பகுதியில் விழுந்தது. அந்த இடத்தில் அம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. காலப்போக்கில் கோயில் சிதிலம் அடைய சிலை பூமிக்குள் புதைந்தது.
பிற்காலத்தில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்மன் புதைந்த சிலையை பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டாள். இப்பகுதியை ஆண்ட மன்னரின் உதவியுடன் கோயில் கட்டப்பட்டது.
கோயிலுக்கு வெளியே காமதேனுவின் அம்சமான தீர்த்தம் ஒன்று உள்ளது. பால் போல வெண்மையாக உள்ள இத்தீர்த்தமே அபிஷேகத்திற்கு பயன்படுகிறது. மலைக்குச் செல்ல 365 படிகள் உள்ளன. கருவறையில் அம்மன் சிங்க வாகனத்தில் அமர்ந்தபடி இருக்கிறாள். கைகள், கண்கள் மட்டும் பளிச்சென தெரியும் விதத்தில் பூக்கள், துணிகளால் அம்மனை அலங்காரம் செய்கின்றனர். தனி சன்னதியில் பைரவர் இருக்கிறார். கோயிலை விட்டு வெளியே வந்தால் மவுன்ட் அபுவை முழுமையாக ரசித்து மகிழலாம்.
எப்படி செல்வது
* டில்லி, பலன்பூர், ஆமதாபாத் ரயில் பாதையில் அபு உள்ளது. அங்கிருந்து கோயிலுக்கு 28 கி.மீ.,
* உதய்பூரில் இருந்து 185 கி.மீ.,
விசேஷ நாள்: நவராத்திரி, மகாசிவராத்திரி
நேரம்: காலை 7:00 - இரவு 7:00 மணி
தொடர்புக்கு: 094141 53553
அருகிலுள்ள தலம்: தில்வாரா கோயில்
நேரம்: மதியம் 12:30 - 5:30 மணி
தொடர்புக்கு: 02974 - 237 324
