ADDED : பிப் 18, 2020 03:13 PM

வெற்றியை நோக்கி எடுக்கும் முயற்சி தோல்வியடைந்தால், ''எல்லாம் என் தலையெழுத்து'' என வருந்துபவர்கள் திருப்பட்டூர் பிரம்மாவை வழிபடுங்கள். உங்கள் தலையெழுத்து உடனே மாறும்.
ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என சிவனுக்கு ஐந்து முகங்கள் உண்டு. படைப்பு கடவுளான பிரம்மாவுக்கும் முன்பு ஐந்து முகங்கள் இருந்ததால், தானும் சிவனுக்கு இணையானவன் என கர்வம் கொண்டார். இதனையறிந்த சிவன், அவரது தலைகளில் ஒன்றை கிள்ளி எறிந்ததோடு, படைப்புத் தொழிலை மறக்கச் செய்தார். இதனால் படைப்புத்தொழில் நின்றது. நாரதர், ரிஷிகள், தேவர்கள் சிவனிடம் விமோசனம் கேட்குமாறு பிரம்மாவை அனுப்பினர்.
''12 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய். விமோசனம் கிடைக்கும்'' என்றார் சிவன். இத்தலத்தில் சிவபூஜை செய்து வந்த பிரம்மாவின் முன் காட்சியளித்தார் சிவன்.
''பிரம்மா! ஐந்து முகங்கள் இருப்பதால் தான் குழப்பம் உண்டாகிறது. இனி உனக்கு நான்கு முகங்கள் போதும். படைப்புத் தொழிலை இங்கிருந்தே தொடங்கு. இத்தலத்தில் வழிபடுவோரின் தலையெழுத்தை மாற்று'' என அருள்புரிந்தார். அதன்படி கருவறையில் யோக நிலையில், அமர்ந்த கோலத்தில் பிரம்மா காட்சியளிக்கிறார்.
பிரம்மா வழிபட்ட 12 சிவலிங்கங்கள் இங்குள்ளன. இதில் ஐந்து பிரகாரத்திலும், ஏழு கோயில் நந்தவனத்திலும் உள்ளன. பிரம்ம சம்பத்கவுரி அம்மன் தனி சன்னதியில் அருள்புரிகிறாள். யோக சாஸ்திரத்தை அளித்த பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி இங்குள்ளது. இங்கு பக்தர்கள் தியானம் செய்கின்றனர்.
ஒரு முறை வழிபட்டு நலம் பெறுங்களேன்.
எப்படி செல்வது
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 28 கி.மீ., துாரத்தில் சிறுகனுார். அங்கிருந்து 5 கி.மீ.,
விசேஷ நாட்கள்: பங்குனி பத்து நாள் பிரம்மோற்ஸவம்
நேரம்: காலை 7:30 - 12:00, மாலை 4:00 - 8:00 மணி
வியாழன்: காலை 6:00 - 12:30, மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0431 -- 2909 599
அருகிலுள்ள தலம்: திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் (33 கி.மீ)