ADDED : பிப் 18, 2020 03:35 PM

நோயின்றி வாழச் செய்யும் மாரியம்மன், விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் குடி கொண்டிருக்கிறாள்.
சதுரகிரி மலையில் சித்தர் ஒருவர் தவமிருந்தார். அப்போது 'அர்ஜுனா நதி, வைப்பாற்றுக்கு இடையில் உள்ள மேட்டுப்பகுதிக்கு வருவாயாக' என அசரீரி ஒலித்தது. அங்கு சென்ற சித்தருக்கு மாரியம்மன் காட்சியளித்தாள். தான் தரிசித்த கோலத்தை சிலையாக வடித்து, சித்தர் வழிபட்டு வந்தார். பிற்காலத்தில் இந்தச் சிலை, ஆற்று மணலில் புதைந்தது. ஒருசமயம் இப்பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மூலமாக வெளிப்பட்ட அம்மன், தான் ஆற்றில் புதைந்திருப்பதை ஊராருக்குத் தெரிவித்தாள். அதன்படி புதைந்த சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பப்பட்டது.
ஒருமுறை இப்பகுதிக்கு வந்த அர்ஜுனன் தாகம் தீர்க்க மேற்குத் தொடர்ச்சி மலை மீது பாணம் தொடுத்தான். அதிலிருந்து பொங்கிய நீரே 'அர்ஜுனா நதி' எனப்படுகிறது. இதே போல இலங்கை செல்லும் வழியில் ராமர், சிவபூஜைக்காக மலை மீது அம்பு தொடுக்க உருவான நதி வைப்பாறு. இரண்டும் கங்கைக்கு ஒப்பானதால், இத்தலம் 'இருகங்கைக் குடி' (இருகங்கைக்கு நடுவிலுள்ள ஊர்) எனப்பட்டது. பிற்காலத்தில் 'இருக்கன்குடி' என அழைக்கப்பட்டது.
சிவனின் அம்சமாக இருப்பதால் அம்மனுக்கு எதிரில் நந்தி உள்ளது. அம்மன் கிடைத்த இடத்தில் அம்மன் உருவம் பொறித்த சூலம் உள்ளது. குழந்தை இல்லாதவர்கள் நேர்த்திக்கடன் செய்வதாக வேண்டுகின்றனர். குறை தீர்ந்ததும் கரும்புத் தொட்டிலில் குழந்தையை படுக்க வைத்து சன்னதியை வலம் வருகின்றனர். அம்மன் அருளால் நோய் தீரப் பெற்றவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிறன்று அக்னிச்சட்டி, அங்கப்பிரதட்சணம் செய்கின்றனர். வயிற்று வலி தீர மாவிளக்கும், கண் நோய் தீர 'வயனம் இருத்தல்' என்ற விரதத்தையும் பக்தர்கள் மேற்கொள்கின்றனர். இதற்காக அம்மனின் தீர்த்தத்தை கண்ணில் விட்டுக் கொண்டு கோயில் மண்டபத்தில் தங்குகின்றனர். விளைச்சல் பெருக நெல், காய்கறிகளை காணிக்கை செலுத்துகின்றனர்.
எப்படி செல்வது: மதுரையில் இருந்து 73 கி.மீ., துாரத்தில் சாத்துார். அங்கிருந்து 8 கி.மீ.,
விசேஷ நாட்கள்: ஆடி, தை, பங்குனி கடைசி வெள்ளி
நேரம்: அதிகாலை 5:30 - பகல் 1:00 மணி; மாலை 4:00 - இரவு 8:00 மணி; செவ்வாய், வெள்ளி, ஞாயிறன்று அதிகாலை 5:30 - இரவு 8:30 மணி
தொடர்புக்கு: 04562 - 259 614, 259 864, 94424 24084