/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
படிப்பில் சிறக்க பிரம்மன் கோயில் வாங்க!
/
படிப்பில் சிறக்க பிரம்மன் கோயில் வாங்க!
ADDED : செப் 22, 2017 10:11 AM

கும்பகோணம் வேதநாராயணப் பெருமாள் கோயிலில், சரஸ்வதி பிரம்மனுடன் அருள்புரிகிறாள். படிப்பில் சிறந்து விளங்க இத்தலம் ஏற்றது.
தலவரலாறு: மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவுக்கு தானே உயர்ந்தவர் என்ற கர்வம் உண்டானது. இதை அறிந்த விஷ்ணு, ஒரு பூதத்தை பிரம்மா மீது ஏவினார். அதைக் கண்டு அஞ்சிய பிரம்மா, ''நான் படைக்காத பூதம் ஒன்று என்னை பயமுறுத்துகிறது'' என்று விஷ்ணுவிடம் வந்தார். அதற்கு, ''பூதத்தை அனுப்பியவன் நானே. கர்வமுடன் அலைந்த நீ படைப்புத் தொழிலை மறக்க கடவது'' என்று சபித்தார் விஷ்ணு. சாப விமோசனம் பெற பிரம்மா பூலோகத்தில் யாகம் மேற்கொண்டார். அதன் பயனாக விஷ்ணு, இங்கு பிரம்மாவுக்கு காட்சியளித்து விமோசனம் அளித்தார். அவர் வேதநாராயண பெருமாளாக இங்கு கோயில் கொண்டிருக்கிறார்.
மந்திர சரஸ்வதி: பிரளய வெள்ளத்தால் பூலோகமே அழிய கும்பகோணம் மட்டும் அழியாமல் இருந்தது. சிறப்பு மிக்க இங்கு யாகம் நடத்த பிரம்மா, தன் துணைவியரான சரஸ்வதி, காயத்ரியுடன் வந்தார். பிரம்மாவுக்கு நான்கு தலையும், காயத்ரிக்கு ஐந்து தலையும் இருந்தது. கணவரை விட மனைவிக்கு அதிக தலைகள் இருந்ததால் யாகத்தில் நெருப்பு எழவில்லை. இதையறிந்த சரஸ்வதி தன் மந்திர சக்தியால் காயத்ரியை பார்க்க, ஐந்தாவது தலை மறைந்தது. அதன்பின் குண்டத்தில் நெருப்பு பற்ற யாகம் தொடர்ந்தது. இறுதியில் தேவியருடன் தோன்றிய விஷ்ணு, சாப விமோசனம் கொடுத்து பிரம்மனுக்கு வேதங்களை கற்றுக் கொடுத்தார்.
மூன்று சன்னதிகள்: ஒரு சன்னதியில் சரஸ்வதி, காயத்ரியுடன் நின்ற கோலத்தில் பிரம்மா வீற்றிருக்கிறார். அடுத்துள்ள சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் வேதநாராயணர் அருள்பாலிக்கிறார். பிரம்மாவுக்கு எதிரிலுள்ள சன்னதியில் யோக நரசிம்மர் தாயார்களுடன் காட்சியளிக்கிறார்.இப்படி ஒரே இடத்தில் மூன்று தெய்வங்களை தரிசிப்பது சிறப்பு. வேதவல்லித்தாயார், ஆண்டாளுக்கும் இங்கு சன்னதி உள்ளன.
மூக்குத்தி தரிசனம்: சரஸ்வதி பூஜையன்று காயத்ரி மூக்குத்தியுடன் காட்சி தருகிறாள். இதை சுமங்கலி பெண்கள் தரிசித்தால் மாங்கல்ய பலம் உண்டாகும்.
கல்வியில் சிறக்கவும், தொழிலில் வளர்ச்சி பெறவும் 'பிரம்ம சங்கல்ப பூஜை' நடத்துகின்றனர்.
எப்படி செல்வது: கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ.,
விசேஷ நாட்கள்: சரஸ்வதி பூஜை, வைகுண்ட ஏகாதசி
நேரம்: காலை 8:00 - 11:30 மணி; மாலை 5:30 - 9:00 மணி
தொடர்புக்கு: 94865 68160
அருகிலுள்ள தலம்: கும்பகோணம் - திருவையாறு சாலையில் 10 கி.மீ., தூரத்திலுள்ள கபிஸ்தலம் கஜேந்திரவரதர் கோயில்