/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
ராஜயோக வாழ்வு பெற வெள்ளியன்று இங்கே வாங்க!
/
ராஜயோக வாழ்வு பெற வெள்ளியன்று இங்கே வாங்க!
ADDED : மார் 02, 2018 10:57 AM

தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார்கோவில் அருகிலுள்ள கஞ்சனுாரில் அக்னிபுரீஸ்வரராக சிவன் அருள்பாலிக்கிறார். வெள்ளியன்று வழிபட்டால் ராஜயோக வாழ்வு அமையும்.
தல சிறப்பு: மதுரையை போல, இங்கு அம்பிகைக்கே சக்தி அதிகம். மீனாட்சி சன்னதி, சுவாமிக்கு வலப்புறம் இருப்பது போல் இங்கும் கற்பகநாயகி அம்மன் சன்னதி வலப்புறம் உள்ளது. மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிரம்மாவுக்காக சுவாமியும், அம்பிகையும் திருமணக்காட்சி கொடுத்த தலம் இது. திருமணத்தடை நீங்கவும், செல்வ வளம் பெறவும் இங்கு வழிபடுகின்றனர்.
புல் தின்ற கல்நந்தி: ஒரு சமயத்தில் கனமான புல்லுக்கட்டு ஒன்றை, அந்தணர் ஒருவர் தவறி கீழே விட, அது படுத்திருந்த கன்றின் உயிரை பறித்தது. இதற்கு பரிகாரம் தேடி, ஹரதத்தர் என்னும் சிவனடியாரை நாடினார் அந்தணர். அவரது வழிகாட்டுதலின்படி, சிவனை வழிபட்டு, கைப்பிடி புல்லை இத்தலத்து நந்திக்கு கொடுக்க, அது தின்றது. இதன் பின் அந்தணரை விட்டு கொலைப்பாவம் விலகியது.
விழுங்கிய சிவன்: அந்தகாசுரன் என்பவன் தேவர்களை துன்புறுத்தினான். அப்போது அசுரர்களின் குருவாக இருந்தவர் பார்க்கவ முனிவர். தேவர்கள் அந்தகாசுரனை அழிக்க முற்பட்டனர். அசுரர் தரப்பில் உயிர்ச் சேதம் கடுமையாக இருந்தது. இதைத் தடுக்க சிவனை நோக்கி தவமிருந்து, இறந்தவரை உயிர் பெறச் செய்யும் 'அமிர்த சஞ்சீவினி' என்னும் மந்திரத்தை வரமாக பெற்றார் பார்க்கவர். இதனால் அசுரர்களின் அட்டகாசம் அதிகரித்தது. தேவர்கள் சிவனை சரணடைய, அவர் பார்க்கவரை விழுங்கினார்.
வயிற்றுக்குள் சென்ற பார்க்கவர், அங்கும் தவமிருந்து வெளியே வந்தார். சிவன் வயிற்றில் கிடந்ததால் பார்க்கவரின் உடல் வெள்ளை ஆயிற்று. எனவே அவர் 'சுக்கிரன்' (வெள்ளை நிறம் கொண்டவர்) எனப்பட்டார்.
ராஜயோக வாழ்வு: மூலவர் அக்னீஸ்வரரை வழிபடுபவர்கள் சுக்கிரனையும் வழிபட்ட பலனை பெறுவர். நவக்கிரக கோயில்கள் பிரபலம் அடைந்த பின், சுக்கிரன் தன் தேவி சுகீர்த்தியுடன் அருள்பாலிக்கும் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சுக்கிர திசை, புத்தி நடப்பவர்கள் வெள்ளிக் கிழமை சுக்கிரன், அக்னீஸ்வரரை வழிபட்டால் ராஜயோக வாழ்வு பெறுவர்.
எப்படி செல்வது: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் 22 கி.மீ., இங்கிருந்து 3 கி.மீ.,
விசேஷ நாட்கள்: ஆடிப்பூரம், மார்கழி திருவாதிரை, நவராத்திரி, சிவராத்திரி, தையில் ஹரதத்தர் காட்சியளிக்கும் திருவிழா, மாசி மகம்
நேரம்: காலை 7:30 - 12:00 மணி ; மாலை 4:30 - 9:00 மணி
தொடர்புக்கு: 0435 - 247 3737
அருகிலுள்ள தலம்: 25 கி.மீ.,ல் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்