/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
வாக்கு வன்மை பெற விளாங்காடு வாங்க!
/
வாக்கு வன்மை பெற விளாங்காடு வாங்க!
ADDED : மார் 14, 2018 03:50 PM

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகிலுள்ள விளாங்காட்டில் ஆதிமூல நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது. ஜோதிடர்களுக்கு வாக்கு வன்மை அருளும் தலம் இது.
தல வரலாறு
தேவலோக யானை கஜேந்திரன், குளத்தில் நீராடிய போது முதலையிடம் சிக்கி கொண்டது. பரம்பொருளான விஷ்ணுவை நோக்கி 'ஆதிமூலமே' என ஓலமிட்டது. கருட வாகனத்தில் எழுந்தருளிய விஷ்ணு, சக்ராயுதத்தை ஏவி யானையைக் காப்பாற்றினார். இந்த வரலாற்றின் அடிப்படையில், இத்தலத்தில் ஆதிமூல நாராயணப்பெருமாள் என்னும் திருநாமத்துடன் கோயில் கொண்டிருக்கிறார் விஷ்ணு. விளா மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் இத்தலம் 'கபித்யாரண்யம்' எனப்பட்டது. தற்போது விளாங்காடு என அழைக்கப்படுகிறது. பெருமாளை வழிபட வந்த பூகர்ப மகரிஷி உருவாக்கிய குளம் அவரின் பெயராலேயே 'பூகர்ப தீர்த்தம்' எனப்படுகிறது.
வாக்கு வன்மை பெற....
திரிகால ஞானி நாரதர், பிருகு முனிவர் உள்ளிட்டவர்களுக்கு கோள்களின் சுழற்சி, நவக்கிரகங்களால் உண்டாகும் நன்மை, தீமை குறித்து விஷ்ணு இத்தலத்தில் உபதேசம் செய்தார். இதனடிப்படையில் ஜோதிடர்கள் இங்கு வழிபட்டால் வாக்கு வன்மை உண்டாகும். பிதுர் சாபம், கிரக, சர்ப்பதோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடலாம். விஜய நகர மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தினமும் ஐந்து காலபூஜை நடந்தது. இவர்களின் ராஜகுரு வியாசராஜர், குரு ராகவேந்திரர் ஆகியோர் இங்கு வழிபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
திருப்பணி
ஆங்கிலேயரின் வருகைக்கு பின்னர் கோயில் பராமரிப்பின்றி சிதிலமடைந்தது. சில ஆண்டுகளுக்கு முன், மாட்டுத்தொழுவமாக இருந்த இங்கு, புதைந்து கிடந்த ஆதிமூலநாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளை பக்தர்கள் கண்டெடுத்தனர்.
சிறிய கோயில் எழுப்பப்பட்டு வழிபாடு தொடங்கியது. இங்குள்ள மூலவர், உற்ஸவர் சிலைகள் பார்ப்பதற்கு ஒன்று போல இருப்பது சிறப்பு. தற்போது தினமும் ஒருகால பூஜை நடக்கிறது. ஆதிமூல நாராயணர் டிரஸ்ட் சார்பாக தாயார், ஆண்டாள் சன்னதி, தீர்த்தம், மகாமண்டபம் அமைக்கும் திருப்பணி தற்போது நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்புவோர் 98403 44082 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
எப்படி செல்வது: காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கத்தில் இருந்து 7 கி.மீ.,
விசேஷ நாட்கள்: ஸ்ரீராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி
நேரம்: காலை 7:00 - 10:00 மணி மாலை 4:30 - 08:00 மணி
அருகிலுள்ள தலம்: 3 கி.மீ.,யில் மத்துார் மாதவப்பெருமாள் கோயில்