ADDED : மே 06, 2013 01:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலையைப் போட்டு விட்டு கோயில், குளமென சுற்ற வேண்டுமா என்றால், தேவையில்லை என்று சிவபெருமானே சொல்லியிருக்கிறார். செய்கிற வேலையைத் தவமாகக் கருதி செய்ய வேண்டும், பணியே தெய்வம் என்று உணர்த்துகிறது சென்னை சவுகார்பேட்டை ஏகாம்பரேஸ்வரர் கோயில் வரலாறு.
தல வரலாறு:
பக்தர் ஒருவர், காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஏகாம்பரேஸ்வரரை வணங்க அடிக்கடி செல்வார். ஒரு பிரதோஷ நன்னாளில், அவர் கோயிலுக்கு செல்ல திட்டமிட்டார். ஆனால், அவர் வேலை செய்த இடத்தின் முதலாளி அனுமதி மறுத்துவிட்டார். ''ஒழுங்காக வேலையைச் செய். வேலையை முடிக்காமல், கோயில் குளமென சுற்ற கிளம்பி விட்டாயா?'' என்று திட்டினார். உண்மை நிலையும் அதுதான். பக்தர் அன்றைய தினம் வழக்கத்தை விட மிக மெதுவாகவே வேலை செய்தார். 'மறுநாள் வந்து வேலையை முடி' என முதலாளி கண்டிப்பாகச் சொல்லி விட்டார். எல்லாம் அந்த சிவபெருமானின் திருவிளையாடலால் நடக்கிறது என்பதை பக்தர் உணரவில்லை.
மறுநாள் விடிந்தது. ஏகாம்பரேஸ்வரர் பிரதோஷத்தன்று சர்வ அலங்காரத்துடன் காட்சி தரும் கோலம் மனக்கண் முன் விரிந்தது. நடப்பது நடக்கட்டுமென முடிவெடுத்து, வேலையைப் போட்டுவிட்டு கோயிலுக்கு கிளம்பி விட்டார். வழியில் அவர், சவுகார்பேட்டையில் தங்கினார். களைப்பில் உறங்கி விட்டார். அப்போது, கனவில் சிவன் அம்பாளுடன் காட்சி தந்து, ''உனக்கு வேலை முக்கியம். செய்கிற பணியை விடுத்து இனி என்னை வழிபட நீண்டதூரம் வரவேண்டாம். எங்கிருந்தாலும் நான்
ஏகாம்பரேஸ்வரன் தான்! எனவே, உனக்கு மிகவும் அருகிலுள்ள இந்த இடத்திலுள்ள கோயிலிலேயே வந்து வழிபடு. உடனே வேலைக்கு திரும்பி விடு,'' என்றார்.திடுக்கிட்டு விழித்த பக்தர் முன்பு சுயம்புலிங்கம் ஒன்று இருந்தது. பிற்காலத்தில் இவ்விடத்தில் இக்கோயில் கட்டப்பட்டது.
ஆவுடையார் மீது அம்பாள்:
இத்தலத்து காமாட்சி அம்பாள், ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் அருள்கிறாள். இவளே இங்கு பிரதானம். ஆணும், பெண்ணும் சமம் என்பதை சிவன், அர்த்தநாரீஸ்வர அம்சம் மூலமாக உணர்த்தியதைப்போல, ஆவுடையார் மீது நின்றபடி, சிவனில் சக்தி அடக்கம் என உணர்த்துகிறாள். இவளது பாதத்தின் முன்பு ஸ்ரீசக்ரம் உள்ளது.
உக்கிரம் குறைந்த சனீஸ்வரர்:
அம்பாள் சந்நிதியின் முன்புறம் நவக்கிரக மண்டபம் உள்ளது. மண்டபத்தில் உள்ள சனீஸ்வரர் அம்பாளின் நேரடிப்பார்வையில் இருக்கிறார். எனவே, உக்கிரம் குறைந்து காட்சியளிக்கிறார். சனி தோஷமுள்ளவர்கள் இத்தலத்து அம்பாளையும், சனீஸ்வரரையும் வணங்க துன்பம் குறையும்.
கெட்ட கனவு இனி இல்லை: சிவன் சந்நிதிக்கு முன்வலப்புறத்தில் தூணில் ஆஞ்சநேயர் இருக்கிறார். இவருக்கு வெள்ளி ஜரிகை, துளசி மாலை சாத்தி வணங்கினால் கெட்ட கனவுகள் வராது என்பது ஐதீகம். இவரை 'கனவு ஆஞ்சநேயர்' என்று அழைக்கிறார்கள். பிரகாரத்திலும் ஒரு ஆஞ்சநேயர் வடக்கு நோக்கியபடி உள்ளார்.
சகோதர தரிசனம்:
கோயிலுக்கு வெளியே அரசமரத்தின் அடியில் ஒரு லிங்கம் தனி சந்நிதியில் உள்ளது. இவரது கருவறைக்குள் சென்று பக்தர்களே பாலபிஷேகம், வில்வஇலை அர்ச்சனை செய்யலாம். இதுதவிர, சப்தநாகத்தின் கீழ் 'சகோதர விநாயகர்' உள்ளார். இந்த சிலையின் பின்புறம், மயில் வாகனத்துடன் நின்றகோலத்தில் முருகன் இருக்கிறார். அண்ணனும், தம்பியும் ஒரே நாகத்தின் முன்னும், பின்னும் இருப்பது அபூர்வம். சகோதரர்களுக்குள் பிரச்னை இருந்தால், கனிகள் படைத்து, பாலபிஷேகம் செய்து வழிபடலாம்.
திருவிழா:
பங்குனியில் 18 நாள் பிரம்மோற்ஸவம், சனிப்பெயர்ச்சி, ஆடிப்பூரம்.
நடை திறப்பு:
காலை 6 - மதியம் 12, மாலை 4 - இரவு 9.30.
இருப்பிடம்:
சென்னை பாரிமுனை அருகில்.
போன்:
044 - 2535 2933.

