ADDED : அக் 12, 2018 02:35 PM

தெலுங்கானா மாநிலம், அடிலாபாத் மாவட்டம் பஸாராவில் இருக்கும் சரஸ்வதி எப்போதும் மஞ்சளை பூசியிருப்பாள்.
கோதாவரி நதிக் கரையிலுள்ள குமராஞ்சலா மலைப்பகுதியில் மகரிஷி வியாசர் தவம் மேற்கொண்டார். அவருக்கு காட்சியளித்த சரஸ்வதி ஞானம் வழங்கினாள். மேலும் அவரிடம், '' நான் எழுந்தருளிய இத்தலத்தில் முப்பெருந்தேவியரான மகாலட்சுமி, மகாகாளி மற்றும் எனது சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும்'' எனக் கட்டளையிட்டாள். அதன்படி வியாசரும் பிரதிஷ்டை செய்ய இத்தலத்திற்கு 'வியாசபுரி' என பெயர் வந்தது. காலப்போக்கில் 'வஸாரா' எனத் திரிந்து தற்போது 'பஸாரா' என அழைக்கப்படுகிறது.
மூன்றுநிலை ராஜகோபுரத்துடன் இருக்கும் இக்கோயிலில் சூர்யேஸ்வரசுவாமி என்னும் பெயரில் சிவன் அருள்புரிகிறார். இவர் மீது சூரியக்கதிர்கள் விழுவதால் இப்பெயர் ஏற்பட்டது. கருவறையில் ஞானசரஸ்வதி தேவி வீணை, அட்சர மாலை, ஏடு தாங்கிய கோலத்தில் காட்சியளிக்கிறாள். சரஸ்வதிக்கு இங்குள்ள மலையின் பெயரால் 'குமாராஞ்சல நிவாசினி' என்றும் பெயருண்டு. அருகில் மகாலட்சுமி அமர்ந்த நிலையில் இருக்கிறாள். பிரகாரத்தில் மகாகாளிக்கு தனி சன்னதி உள்ளது. பெற்றோர் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் அபிஷேகம் செய்து அம்மனுக்கு வெண்பட்டு உடுத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
புதன்கிழமையன்று காலை 6:00 - 7:00 மணிக்குள் நெய்தீபமேற்றி வழிபட்டால் கல்வி வளர்ச்சி ஏற்படும். மஞ்சளே பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. இதை சாப்பிட்டாலும், நெற்றியில் இட்டாலும் கற்கும் திறன் மேம்படும்.
எப்படி செல்வது:
* ஐதராபாத்திலிருந்து 220 கி.மீ.,
* நிஜாமாபாத் நகரிலிருந்து 30 கி.மீ.,
விசேஷ நாட்கள்: சரஸ்வதிபூஜை, விஜயதசமி
நேரம்: காலை 4:00 - - 12:30 மணி ; மாலை 3:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 094411 - 29737
அருகிலுள்ள தலம்: 70 கி.மீ., துாரத்தில் நிர்மல் வெங்கடேஸ்வரா கோயில்