/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
கலைமகளின் கலைக் கோயில் கூத்தனூர் சரஸ்வதி கோயில்
/
கலைமகளின் கலைக் கோயில் கூத்தனூர் சரஸ்வதி கோயில்
ADDED : அக் 12, 2018 02:31 PM

திருவாரூர் மாவட்டம் கூத்தனுாரில் கல்வி தெய்வமான சரஸ்வதி கோயில் உள்ளது. ஒட்டக்கூத்தரின் பேரன் ஓவாதகூத்தர் கட்டினார்.
சத்தியலோகத்தில் ஒருநாள் சரஸ்வதிக்கும் பிரம்மாவுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. ''இந்த சத்தியலோகமே கல்விக்கரசியான தன்னால் தான் பெருமையடைகிறது' என்றாள் சரஸ்வதி. அதற்கு பிரம்மாவோ, உயிர்களைப் படைக்கும் பிரம்மாவின் மனைவி என்பதால் தான் சரஸ்வதிக்கும் பெருமை'' என மறுத்தார். இந்நிலையில் ஒருவரையொருவர், 'பூமியில் மனிதனாக பிறக்கக் கடவது' என சபித்துக் கொண்டனர். அதன்படி சோழநாட்டில் புண்ணியகீர்த்தி, சோபனை என்னும் அந்தண தம்பதிக்கு பகுகாந்தன் என்னும் பெயரில் பிரம்மாவும், சிரத்தை என்ற பெயரில் சரஸ்வதியும் பிறந்தனர். திருமண வயதை அடைந்த அவர்களுக்கு பெற்றோர் வரன் தேடினர். இந்நிலையில் இருவருக்கும் தாங்கள் யார் என்னும் உண்மை நினைவுக்கு வந்தது. சகோதர நிலையில் இருக்கும் தங்களுக்குள் திருமணம் நிகழ்ந்தால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். பெற்றோருக்கும் உண்மை தெரிய வரவே, சரஸ்வதி நல்வழிகாட்ட சிவனைச் சரணடைந்தாள். அவளுக்கு காட்சியளித்த சிவன், '' சகோதரியாக பிறந்த நீ இப்போது உன் மணாளனை அடைய முடியாது. தனியாக இத்தலத்தில் எழுந்தருளி
நாடி வரும் பக்தர்களுக்கு கல்வி வளத்தைக் கொடு'' என அருள்புரிந்தார். இதனடிப்படையில் இத்தலத்தில் கன்னி சரஸ்வதியாக அருள்புரிகிறாள்.
தன் தாத்தாவான ஒட்டக்கூத்தரின் பெருமையை உலகறியச் செய்ய எண்ணிய பேரன் ஓவாதகூத்தர், அவர் பிறந்த இப்பகுதிக்கு 'கூத்தனுார்' எனப் பெயரிட்டார்.ஒட்டக்கூத்தர் சிலையும் இங்குள்ளது. கோயில் கல்வெட்டில், ''சரஸ்வதி தேவியை எழுந்தருளச் செய்தவர் மலரி உடையார். இவர் ஒட்டக்கூத்தரின் பேரர் ஓவாத கூத்தர்'' என எழுதப்பட்டுள்ளது. தனது தாத்தா ஒட்டக்கூத்தர் போல ஓவாத கூத்தரும் புலவராக இருந்தார்.
வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையின் மீது பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள் சரஸ்வதி. வலது மேல்கையில் அட்சர மாலையும், வலது கீழ்கையில் சின்முத்திரையும், இடது மேல்கையில் அமிர்த கலசமும், இடது கீழ் கையில் புத்தகமும் தாங்கியிருக்கிறாள். இந்த ஊரில் உள்ள சிவன் கோயிலில் துர்க்கையும், பெருமாள் கோயிலில் மகாலட்சுமியும் இருப்பதால் ஒரே நேரத்தில் மூவரையும் தரிசிக்கும் பாக்கியம் நமக்கு கிடைக்கிறது.
விஜயதசமியன்று குழந்தைகளுக்கு அட்சர அப்பியாசம் என்னும் எழுத்துப்பயிற்சி நடக்கும். நெல்லை பரப்பி, அதில் ஓம் என்னும் மந்திரத்தை எழுதச் செய்வர். இதில் பங்கேற்பவர்கள் கல்வி, கலைகளில் சிறந்து விளங்குவர். விஜயதசமியில் பங்கேற்காதவர்கள் மூலநட்சத்திரம், நவமி திதி, புதன்கிழமையன்று இதை செய்யலாம்.
எப்படி செல்வது: திருவாரூர் - மயிலாடுதுறை வழியில் உள்ள பூந்தோட்டத்தில் இருந்து பிரியும் ரோட்டில் 6 கி.மீ.,
விசேஷ நாட்கள்: சரஸ்வதிபூஜை, விஜயதசமி
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 09:00 மணி
தொடர்புக்கு: 04366- 238 445, 239 909
அருகிலுள்ள தலம்: 21 கி.மீ., துாரத்தில் மயிலாடுதுறை மாயூரநாதசுவாமி கோயில்