
இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில் - செண்பகமரம்
சோழமன்னர் ஒருவருக்கு கணக்காளர் சுதர்மன் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையறிந்த அவர் சிவபெருமானைச் சரணடைந்தார். சுதர்மனின் வடிவிலேயே நீதியை நிலைநாட்ட அரண்மனைக்கு புறப்பட்டார் சிவன். கருவூலக்கணக்கை மன்னரிடம் காட்டி அவரது சந்தேகத்தை போக்கி விடைபெற்றார்.
சற்று நேரத்திற்குப் பின்னர் உண்மையான கணக்காளர் மன்னரைக் காண வந்தார். 'இப்போது தானே விளக்கம் அளித்துச் சென்றாய்' என மன்னர் சொல்ல, அப்போது தான் சிவபெருமானின் திருவிளையாடல் இது என இருவருக்கும் புரிந்தது. சுதர்மனிடம் மன்னிப்பு கேட்டதோடு எழுத்தறிநாதர் என்னும் பெயரில் சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. அட்சரபுரீஸ்வரர் என்றும் சுவாமிக்குப் பெயருண்டு.
இத்தலத்தில் அகத்திய முனிவருக்கு சிவன் இலக்கணம் கற்றுக் கொடுத்தார். இதனடிப்படையில் பேச முடியாத, படிப்பு வராத குழந்தைகள் இங்கு வழிபடுகின்றனர். மூலவர் எழுத்தறிநாதர் கிழக்கு நோக்கியபடி சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். பிச்சாடனர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்கை ஆகியோர் கருவறையில் உள்ளனர். முருகர், விஸ்வநாதர், விசாலாட்சி பிரகாரத்தில் உள்ளனர்.
இத்தலத்தில் உள்ள 27 நட்சத்திர சன்னதியில் நெய் தீபமேற்றிட அறிவுத்திறன் மேம்படும். நித்தியகல்யாணி அம்மனுக்கு எலுமிச்சை தீபமும், சுகந்த குந்தலாம்பிகைக்கு நெய் தீபமும் ஏற்றினால் விருப்பம் நிறைவேறும். பள்ளியில் சேர்க்கும்
முன்பாக குழந்தைகளை விஜயதசமியன்று 'ஓம் அட்சரபுரீஸ்வராய நமஹ' என எழுத வைத்து வித்யாரம்பம் செய்கின்றனர்.
இந்த கோயிலின் தலவிருட்சம் செண்பகம். மிக்கேலியா சம்பகா (Michelia champaca) என்ற தாவரவியல் பெயர் கொண்ட இது மேக்னோலேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் பூக்கள் இளம் மஞ்சள் நிறத்தில் இரண்டு அடுக்காக ஆறு இதழ்களுடன் இருக்கும். நறுமணம் கொண்ட இந்த பூக்களை பூஜைக்கு பயன்படுத்துகின்றனர்.
செண்பக மரத்திற்கு சம்பங்கி, கொடிசம்பங்கி, சம்பங்கிபூ, சம்பகம் என்றும் பெயருண்டு. பலாமரமும் தலவிருட்சமாக உள்ளது.
சித்தர் போகர் பாடிய பாடல்
செண்பகத்தின் பேர்தனையே செப்பக்கேளு
செழுமையாஞ் சம்பகச் சுகுமாரச்சஞ்
சண்பகச் சுரபிசீதளச் சத்தியாந்
துடர்ச்சியாஞ் சாம்பேயோ யேமபுஷ்பங்
கண்பகக் காஞ்சினி சரபிதானி
கடிதான விஷமயித்தி யேஸவாகும்
பண்பிதா சுகந்தினி வேரிச்சியாகும்
பாடியதோர் செண்பகப்பூ பண்புமாமே.
சம்பகம், சுகுமாரம், சண்பகசுருதி, துடர்ச்சி, காஞ்சினி, ஏமப் புஷ்பம், வெறிட்சி, சுகந்தினி, ஏசவம் என செண்பகத்திற்கு பெயர்கள் உண்டு என்கிறார் போகர்.
சித்தர் அகத்தியர் பாடிய பாடல்
வாத பித்தம் அத்திசுரம் மாமேகம் சுத்த சுரந்
தாதுநட்டங் கண்ணழற்சி தங்காவே - மாதே கேள்!
திண்புறு மனக்களிப் பாந் திவ்யமனம்
உட்டினஞ்சேர்
சண்பகப் பூவதற்குத் தான்.
செண்பகப்பூக்களால் கண் சிவப்பு, காய்ச்சல், எலும்பு மஜ்ஜை பாதிப்பு, வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.
தீராத வுட்டிணத்தைத் தீர்க்குஞ் சுரம்போக்கும்
நேரே பசியெழுப்பும் நிச்சயமே - ஒருங்கால்
பண்புறுகண் தோடத்தைப் பற்றறுக்கும்
வாசமுள்ள
சண்பக மரத்தின் வேர் தான்.
செண்பக வேரை கஷாயம் செய்து சாப்பிட காய்ச்சல் தீரும். பசி உண்டாகும். இலைச் சாற்றுடன் சம அளவில் தேன் கலந்து சாப்பிட மாதவிலக்கால் வரும் வயிற்றுவலி தீரும். இலைக்கொழுந்தை கசக்கி நீரில் கலக்கி கண்களில் இட்டால் பார்வை தெளிவு பெறும்.
சித்தர் தேரையர் பாடிய பாடல்
மாறுதம் போக்கும் பீலிகை குட்டம்
மாற்றிடுந் தீபனந் தருமால்
வெறியுளருஞ் சண்பக முகிள்கைப்புத்
துவாசிரோ ரோகத்தை விலக்குஞ்
கசப்பு சுவையுடைய செண்பகப்பூ கண்நோய்களைப் போக்கும். தலையில் சூடினால் மகிழ்ச்சியான மனநிலை உருவாகும். தலைவலிக்கு செண்பகமர இலையில் நெய் தடவி, அதில் ஓமப்பொடியை துாவி தலையில் வைத்துக் கட்டினால் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி பெறும். செண்பகப் பூக்களை எண்ணெய்யில் ஊற வைத்து அரைத்து தலையில் தடவினால் தலைவலி, கண்நோய், மூக்கடைப்பு குணமாகும். காலில் பற்று இட்டால் மூட்டுவலி குறையும். விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை வயிற்றில் தடவ வயிற்றுவலி மறையும்.
எப்படி செல்வது: கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் வழியில் 8 கி.மீ.,
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 86102 44175, 0435 - 200 0157
-தொடரும்
ஜெ.ஜெயவெங்கடேஷ்
98421 67567

