sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

வேட்டைக்காரன்

/

வேட்டைக்காரன்

வேட்டைக்காரன்

வேட்டைக்காரன்


ADDED : டிச 03, 2010 03:09 PM

Google News

ADDED : டிச 03, 2010 03:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நான்  பிறந்து அனுபவித்து பட்ட துன்பங்கள் போதும்! அரை ஜாண்  வயிற்றுக்காக நான் பட்ட அவமானங்கள் இருக்கிறதே!  அப்பப்பா...சொல்லி மாளாது.. ... இன்னொரு பிறவி எனக்கு வேண்டாம் சுவாமி!'' என்று எண்ணுபவர்கள், நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி கொல்லிமலை அடிவாரத்திலுள்ள குன்றில் குடியிருக்கும் பழனியப்பர் கோயில் முருகப்பெருமானை வணங்கி வரலாம். இவர் தன்னை வணங்கும் பக்தர்களின் பிறப்பை வேட்டையாடி முக்தி தருபவராக உள்ளார்.

தல வரலாறு: படைப்புக்குரிய மூலமான 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்திற்குரிய பொருளை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரிடம் முருகப்பெருமான் கேட்டார்.

மூவராலும் சரியாக பதில் கூறமுடியவில்லை. இதனால் மூவரையும் தன்கட்டுப்பாட்டுக்குள் அடக்கிய முருகன், 'பிரம்ம சாஸ்தா' என்னும் பெயருடன் பூலோகம் வந்தார். கொல்லிமலை அடிவாரத்திலுள்ள கூவைமலை என்னும் குன்றில் தங்கினார். 'கூவை' என்றால் 'பருந்து'. கொல்லிமலையின் மேலிருந்து கூவை மலையைப் பார்த்தால் கழுகு சிறகை விரித்திருப்பது போன்ற தோற்றம்

இருக்கும். எனவே இப்பெயர் ஏற்பட்டது. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மும்மூர்த்திகளுக்குரிய தொழில்களையும், முருகப்பெருமான் தன்வசம் எடுத்துக் கொண்டார். பிறவியைத் தருவதற்கும், முடிப்பதற்கும் உரிய சகல அதிகாரமும் இவரிடம் உள்ளது.

சிறப்பம்சம்: கொல்லிமலை சேர மன்னர்களால் ஆளப்பெற்ற பெருமையும், பழமையும் வாய்ந்தாகும். வள்ளலாக விளங்கியவன் வல்வில் ஓரி. ஒரே அம்பில் பல மிருகங்களை வீழ்த்தும் வலிமை பெற்றவனாக  விளங்கினான். இவனது ஆட்சிக்குட்பட்ட சேர்ந்தமங்கலம், அறப்பள்ளி, சிங்களாந்தபுரம், ராசிபுரம், கல்குறிச்சி ஆகிய இடங்களில் சிவாலயமும், பேளுக்குறிச்சியில் முருகன் கோயிலும் கட்டினான். பேளுக்குறிச்சி ஜமீன் பரம்பரையினரும் திருப்பணிகளும் செய்துள்ளனர்.  விநாயகர், முருகப்பெருமான், ஐயப்பன், ஆஞ்சநேயர், முனீஸ்வரர் ஆகிய ஐந்து பேரும் சிரஞ்சீவியாக (என்றும் வாழும் வரம்) பெற்றவர்கள். இவர்களில் முருகன், விநாயகர், ஐயப்பன் ஆகியோர் சிவனின் அம்சமாகவும், ஆஞ்சநேயரும், முனீஸ்வரரும் நாராயணரின் அம்சமும் உடையவர்கள். முருகப்பெருமான், சிவன்-பார்வதி அம்சமாக இருப்பதால் சிவனை குறிக்கும் வகையில் இங்குள்ள மூலவர் பழனியாண்டவர் மூன்று பட்டை  வடிவில் நெற்றியில் திருநீறும், சக்தியை குறிக்கும் வகையில் நெற்றியில் பொட்டும் காணப்படுகிறது. அருணகிரிநாதரால் பாடல் பெற்றதும், அகத்தியர் பூஜித்த பெருமை பெற்றதுமான இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. மூலவர் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரை நேருக்கு நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும், வலதுபுறம் நின்று வணங்கினால்ஆண் வடிவமாகவும், இடது புறமாக நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் காட்சி  அளிக்கிறார். மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த மூலவரை பார்த்தே, போகர், பழநியில் நவபாஷாண முருகன் சிலையை  உருவாக்கினார் என்கிறார்கள்.

முருகனின் கையில் சேவல்: பத்மாசுரன் முருகனால் வதம் செய்யப்பட்டதும், அவனை முருகன் சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார். இந்தச் சேவலை தனது கையில் வைத்திருக்கிறார். மற்ற முருகன் கோயில்களில் சேவல் சின்னம் கொடியில் இருக்கும். இங்கே, சேவலை முருகன் கையிலேயே அடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ''பக்தர்களே! இந்த பத்மாசுரனைப் போல், நீங்கள் ஆணவத்தைக் காட்டினால், உங்களை நான் அடக்குவேன்,'' என்று முருகப்பெருமான் நமக்கு உணர்த்துவது போல் இந்த அமைப்பு இருக்கிறது.

நோய் தீர்க்கும் தீர்த்தம்:  மலையடிவாரத்தில் பாறைகளுக்கு இடையே யானை வடிவிலான வற்றாத சுனை காணப்படுகிறது. இதை 'யானைப்பாழி தீர்த்தம்' என்கின்றனர். இந்த சுனையில் ஆண்டு முழுவதும் இரும்புச் சத்துடன் கூடிய தண்ணீர் ஊறுகிறது. பக்தர்கள் இதில் நீராடிவிட்டு பழனியாண்டவரை வழி படுகின்றனர். இதில் நீராடுவதால், தோல் மற்றும் எலும்பு நோய்கள் தீர்வதாக நம்பிக்கை., குழந்தை இல்லாத தம்பதிகளும் இதில் மகப்பேறு வரத்துக்காக நீராடுகின்றனர். இந்த தீர்த்தத்தின் ஒரு பகுதியில் கால்நடைகள் தண்ணீர் குடிக்கவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இடும்பன்சன்னதி: அகத்தியரின் உத்தரவுப்படி சிவகிரி, சக்திகிரி என்னும் மலைகளை இமயமலையில் இருந்து ஒரு தண்டத்தின் இருபுறமும் கட்டி தூக்கி வந்தவன் இடும்பன் என்னும் அசுரன். பார்ப்பதற்கு இது காவடி போல இருக்கும். முருகப்பெருமான் அவனைத் தடுத்து அந்த மலைகளைத் தனதாக்கிக் கொண்டார். நமக்கு ஏற்படும் மலைபோன்ற துன்பங்களை முருகப்பெருமானிடம் இறக்கி வைத்து விட்டால் போதும். அவன் பார்த்துக்கொள்வான் என்பதே காவடி தத்துவம். அதனால் தான் முருகன் கோயில்களில் காவடி எடுக்கும் வழக்கம் வந்தது. இந்தக் கோயிலில் இடும்பனுக்கு சன்னதி <உள்ளது. இடும்பனுக்கு பூஜை முடிந்த பின்னரே, முருகனுக்கு பூஜை செய்வது வழக்கம்.

காலணி அணிந்தவர்: முருகப்பெருமான் வேடன் ரூபத்தில் எழுந்தருளியுள்ளார். தலையில் கொண்டையும், வேங்கை மலர் கிரீடமும், கொன்றை மலரும் சூடியுள்ளார். ருத்ராட்ச மாலை அணிந்துள்ளார். காலில் காலணியும், வீரதண்டையும் அணிந்துள்ளார். இடது கையில் வேலும், இடுப்பில் கத்தியும், வலது கையில் சக்தி ஆயுதம் எனப்படும் வஜ்ரவேலும் தாங்கியுள்ளார்.

யோகாசனம் படிப்பவரா: ஒருவர் ஒரே நேரத்தில், ஒரே உருவத்தில் பல்வேறு இடங்களில் காட்சியளிப்பது கனககுண்டலி யோகம் என்பர். இதற்கு அதிபதி முருகன். யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், அதில் சிறந்து விளங்க இந்த முருகனை வணங்கி வரலாம். சித்ராபவுர்ணமி அன்று நடக்கும் சிறப்பு பூஜையில் சித்தர்கள் இங்கு வந்து வழிபடுவதாக நம்பிக்கையுள்ளது. அன்றிரவு 11.50 மணிக்கு பூஜை முடிந்ததும் பத்து நிமிடம் சித்தர்கள்

வழிபடுவதற்காக திரையிடப்படுகிறது.

கோயில் அமைப்பு: பழனி யாண்டவர் சன்னதியின் இடதுபுறம் விஷ்ணு சன்னதியும், எதிரில் கருடாழ்வாரும் உள்ளனர். வலதுபுறம் நவக்கிரகம், சனீஸ்வரர் சன்னதி உள்ளது. மண்டப உச்சியில் ராகு, கேது பாம்புகள் சூரிய, சந்திரரைப் பிடிக்கும் கிரகண சிற்பம் இருக்கிறது.

திருவிழா: கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம்,

பவுர்ணமி பூஜை.

இருப்பிடம்: நாமக்கல்லில் இருந்து சேர்ந்தமங்கலம் வழியாக ராசிபுரம் செல்லும் ரோட்டில் 22 கி.மீ., தூரத்தில் பேளுக்குறிச்சி உள்ளது. இங்கிருந்து 4 கி.மீ., தூரத்திலுள்ள கொல்லிமலை அடிவாரத்தில் கோயில் உள்ளது. 240 படிகள் ஏறினால் கோயிலை அடையலாம். கார்களில் கோயில் முன் நேராகச் செல்லவும் பாதை உள்ளது. கால்டாக்சி வசதி உண்டு.

நடைதிறப்பு: காலை 9- இரவு 5.30 மணி.
போன்: 98425- 46555, 94430- 08705.






      Dinamalar
      Follow us