ADDED : அக் 05, 2020 07:02 PM

அன்றாடம் பல காரணங்களுக்காக வீட்டை விட்டு நாம் வெளியே செல்கிறோம். பயண நேரம் எதுவாக இருந்தாலும் அது பாதுகாப்பாக அமைய பெரியோர்கள் வழிகாட்டியுள்ளனர். குல தெய்வம், இஷ்ட தெய்வத்தை வழிபட்டு புறப்படுங்கள்.
தடையின்றி ஒரு செயல் நிறைவேற சூழ்நிலை, சந்தர்ப்பம், தெய்வ அருள் அவசியமானவை. அதிலும் நவக்கிரகங்களின் அருள் மிக அவசியம். கிரகங்களைக் கண்டாலே பயம், நடுக்கம் பலருக்கும் ஏற்படுகிறது. இதைப் போக்க கோளறு பதிகத்தை திருஞான சம்பந்தர் பாடியுள்ளார். எல்லோருக்கும் எல்லாக் காலத்திலும் எல்லா கிரகங்களும் நன்மை தரும் சூழ்நிலையில் இருப்பதில்லை. துன்பம் போக்கும் அருமருந்தாக இப்பதிகம் உள்ளது.
மதுரையில் சமணர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலம் அது. மன்னர் கூன்பாண்டியன் சமண மதத்தை பின்பற்றினார். கவலைப்பட்ட மகாராணி மங்கையர்க்கரசி மீண்டும் சைவ மதம் தழைக்கச் செய்ய சம்பந்தரை வரவழைக்க தீர்மானித்தார். அப்போது வேதாரண்யம் கோயிலில் இருந்த சம்பந்தர், ''அப்பர் பெருமானே! மதுரைக்குச் செல்லும் எனக்கு தங்களின் ஆசி வேண்டும்'' எனக் கேட்டார்.
யோசித்தபடி, '' இப்பொழுதே மதுரை செல்ல வேண்டுமா? நாளும், கோளும் சரியில்லையே'' என்றார் திருநாவுக்கரசர்.''சிவனை வழிபடும் நமக்கு பயம் இருக்கலாமா? எந்த சூழ்நிலையிலும் நம் துன்பங்களை தீர்த்து சிவபெருமான் காத்தருள்வார். நவக்கிரக நாயகனான சிவபெருமான் எல்லா நலன்களையும் அருள்வார்'' என்று சொல்லி பதிகம் பாடினார். அதுவே கோளறு பதிகம்.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
என்று தொடங்கும் இதில் 11 பாடல்கள் உள்ளன.
அதன்பின் மதுரைக்கு வந்த சம்பந்தர் விவாதங்களில் ஈடுபட்டு சமணர்களை வென்றார். வெப்புநோய் ஏற்பட்ட மன்னரைக் குணப்படுத்தியதோடு, அவரது கூனல் முதுகை நிமிர்த்தி 'நின்ற சீர் நெடுமாறனாக' மாற்றினார். சம்பந்தரால் மதுரையில் மீண்டும் சைவம் தழைத்தது.
இந்த பதிகத்தை தினமும் படிக்க பலன் கைமேல் கிடைக்கும். முழுமையாக படிக்க முடியாதவர்கள் முதல்பாடலை மட்டுமாவது படிப்பது நல்லது.
தேச.மங்கையர்க்கரசி
athmagnanamaiyam@yahoo.com